10 May 2024

நரேந்திர தபோல்கர் படுகொலையில் சனாதன கும்பலின் பயங்கரவாதம்!

 2013ஆம் ஆண்டு ஆக.20ஆம் தேதி பூனாவில் காலை நடைபயிற்சியின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பகுத்தறிவாளர் Dr.நரேந்திர தபோல்கர்.


மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் களம் கண்டவர் நரேந்திர தபோல்கர். அவரின் கொலைக்கு பிறகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மராட்டிய மாநில அரசு.


பகுத்தறிவாளர் தபோல்கரை தொடர்ந்து நாடு முழுவதும் அடுத்தடுத்து சிந்தனையாளர்கள் சனாதன தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் 2015ஆம் ஆண்டு பிப். 16ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த் பன்சாரே அவரது மனைவியுடன் சுடப்பட்டார்.


சனாதன கும்பலால் இந்து மன்னராக கட்டமைக்கபட்ட சிவாஜியின் உண்மை வரலாற்றை, அவரின் மதவெறி இல்லாத செயல்பாட்டை ‘யார் இந்த சிவாஜி?’ என்று தலைப்பிட்டு வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி வெளிக்கொண்டு வந்தவர் பன்சாரே.



தோழர் கோவிந்த் பன்சாரே

நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பிப்.20ஆம் தேதி உயிரிழந்தார். தபோல்கரின் படுகொலையைப் போன்று அதே பாணியில் பன்சாரேவின் கொலையும் அரங்கேற்றப்பட்டது.


பன்சாரேவை தொடர்ந்து அவரது நண்பரும் சீர்திருத்தவாதியுமான 77 வயதான எம்.எம்.கல்புர்கி கர்நாடகாவின் தாரவாட்டில் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்ததோடு கன்னட சமூகத்தில் நிலவும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு எதிராக கலகம் செய்தவர் பேராசிரியர் கல்புர்கி.



பேராசிரியர் கல்புர்கி

கல்புர்கியை தொடர்ந்து நாடறிந்த பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான 55 வயது கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சனாதன தீவிரவாதிகளால் 2017ஆம் ஆண்டு செப்.5ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.



பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்

தபோல்கர் கொலை வழக்கில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.


சனாதன் சன்ஸ்தாவின் கிளை அமைப்பான ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் துணை தலைமை ஒருங்கிணைப்பாளர் பல் மருத்துவரான விரேந்திரசிங் தாவ்டே, சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், அவரது உதவியாளர் விக்ரம் பாவே, தபோல்கரை துப்பாக்கியால் சுட்ட சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர்.


Dr.நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் என இந்த நால்வரின் படுகொலைகளையும் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் சனாதன பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர்கள் தான் என்பது விசாரணையில் அம்பலமானது.



மருத்துவர் தாவ்டே தான் தபோல்கர் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவன்  கம்யூனிஸ்ட் தலைவர் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டே கைது செய்யப்பட்டு, அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர் ஆகிய இருவருக்கும் தான் ஆயுள் தண்டனை விதித்து பூனாவில் அமைந்துள்ள ஊபா சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.


பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபராக இருப்பவன் சரத் கலாஸ்கர். அவனது அறையில் தான் லங்கேஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், லங்கேஷை சுட்ட சனாதன தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்தவன் என்றும் குற்றப்பத்திரிகை உள்ளது.


இந்த கலாஸ்கரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் பூனலேகர், அவனது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.



வீரேந்திரசிங் தாவ்டே


நான்கு முற்போக்காளர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், அனைவரும் 7.65 மி.மீ நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி தான் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலை இரண்டும் ஒரே துப்பாக்கியால் நடைபெற்றது என்கிறது தடயவியல் ஆராய்ச்சி குழு.


இந்த நாட்டு துப்பாக்கியை தான் அழித்துவிடும்படி கலாஸ்கருக்கு உத்தரவிட்டது தான் வழக்கறிஞர் பூனலேகர் மீதான குற்றச்சாட்டு.


கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமோல் காலே என்பவன் சனாதன் சன்ஸ்தாவின் ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவன், இன்னொரு குற்றவாளியான அமித் தேக்வேகார் சனாதன் சன்ஸ்தாவின் ஊழியராக இருந்தவன்.


நான்கு முற்போக்காளர்களின் வழக்கிலும் சனாதன் சன்ஸ்தா எனும் ஒரே தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். நான்கு வழக்குகளிலும் உள்ள குற்றப்பத்திரிகைகள் அதை தான் அம்பலப்படுத்துகிறது.


இன்று ஊபா சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு இந்த படுகொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவன் தாவடே, அதன் வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், உதவியாளர் விக்ரம் பாவே ஆகியோரை போதிய சாட்சிகள் இல்லை என்று விடுவித்ததை ஏற்கமுடியாது. எந்தவித ஆதாரமுமின்றி பீமாகொரேகான், டெல்லி கலவரம் உள்ளிட்ட வழக்குகளில் அப்பாவிகள் சிறையில் உள்ள நிலையில், திட்டமிட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சனாதன் சன்ஸ்தா தீவிரவாதிகள் விரேந்திரசிங் தாவ்டே, சஞ்சீவ் பூனலேகர் மற்றும் விக்ரம் பாவே

இந்து மதத்துக்கு எதிராக செயல்படும் தபோல்கரை கொல்லும்படி தாவடே தான் நேரடியாக தன்னிடம் தெரிவித்தார் என்று நீதிமன்றத்தில் சொல்லியுள்ளான் துப்பாக்கியால் சுட்ட கலாஸ்கர்.


2015 ஆகஸ்ட் தொடங்கி 2022 திசம்பர் வரை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது தபோல்கர் வழக்கு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் எதிர்ப்பையடுத்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொல்லி உயர்நீதிமன்ற மேற்பார்வை விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

இந்துக்களுக்கு எதிரானவர்களையும், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களையும் கொல்ல வேண்டும் என்று கூலிப்படையை ஏவி கொலை செய்வதே இவர்கள் அமைப்பின் திட்டம் என்று தபோல்கர் வழக்கில் குற்றஞ்சாட்டியது சிபிஐ.



பீமா கொரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகள்


முன்னர் சனாதன பயங்கரவாதிகளால் அறங்கேற்றப்பட்ட சிந்தனையாளர்களின் கொலைகளை அடுத்து, இப்போது ஊபா சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு எந்தவொரு விசாரணையும் இல்லாமல் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் என அனைவரையும் சிறையிலடைத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.


- வன்னி அரசு

0 comments:

Post a Comment