21 May 2024
இந்தியா ஒரு கொடூரமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதை பல கட்டுரைகள் வாயிலாக விளக்கிக்கொண்டே இருக்கிறேன். அதற்கு ஆவணங்களாக மோடி ஆட்சியின் இந்த பத்து ஆண்டு காலத்தில் பல சம்பவங்களை இந்தியா கண்டுவிட்டது. மோடி தனது அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் இன்றைய நாளில் கடந்த காலங்களில் மோடி செய்த அத்தனை வரலாற்று பிழைகளுக்கும் விடை கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அரசியல்ரீதியாக ஒரு பாசிஸ்ட் தனது வரலாற்று சறுக்கல்களை தொடங்கிவிட்டார் என்பதை தான் மோடி அந்திம கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி பறிப்புக்கு நீதிமன்றம் நெத்தியடி கொடுத்தது போலவே பிரபீர் வழக்கிலும் மோடியின் அரசியல் தந்திர சூழ்ச்சிக்கு வரலாற்று மரண அடி விழுந்துள்ளது. பிரபீர் வழக்கின் மூலமாக இரண்டு உண்மைகள் வெளிப்பட்டு வந்துள்ளன. மோடி - அமித்ஷா - சங்பரிவார் கும்பல், பத்திரிகையாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த எதிர்ப்பு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தும் விமர்சனங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்களை நகர்புற நக்சல்கள், சீனா - பாகிஸ்தான் கைக்கூலிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சித்தரித்து கருத்துருக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டு பாசிச தனத்தை கட்டமைத்தார்கள். பாஜக - மோடி - சங்பரிவார் கும்பலின் இந்த போலி பிரச்சாரத்தை பிரபீர் விடுதலை இந்திய மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
பீமா கொரேகான் வழக்கு போராளிகள் - பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிருடன் இல்லை |
இன்னும் உடைத்து பேச வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் சீன அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று இந்தியாவின் ஆன்மாவைத் தகர்க்க தகவல் யுத்தத்தை செய்ததாக குற்றம்சாட்டியது. அத்துடன், நக்சலைட் - காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தது. கொரோனா பெருந்தொற்று, டெல்லி கலவரத்தை தூண்டியது, விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தை தூண்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் நியூஸ் கிளிக் மீது வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியூஸ் கிளிக் மீதானது மட்டும் அல்ல, மோடியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியாவின் ஆன்மா மீதானது. மோடியின் பாசிசதனத்தையும், சங்பரிவார் கும்பலில் சூழ்ச்சி வலையையும் பிரபீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறுத்தெறிந்துவிட்டது. சரி இனி இந்த வழக்கின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் கைது:
கடந்த ஆண்டு அக்.3ஆம் தேதி பிரபல இடதுசாரி ஊடக நிறுவனமான நியூஸ்கிளிக்கின் (NewsClick) நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயாஸ்தா அவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதற்காக டெல்லியில் மொத்தம் 88 இடங்களிலும், நாட்டின் பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனைகளை நடத்தப்பட்டது.
தோழர் பிரபீர் புர்கயாஸ்தா |
மூத்த ஊடகவியலாளரான பிரபீர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் பகைமையை தூண்டுதல்), 120B (சட்டவிரோத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) 13 (சட்டவிரோத செயல்), 16 (தீவிரவாத செயல்), 17 (தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) & 22C (சட்டவிரோத செயல் புரிந்த நிறுவனம்) ஆகிய கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நியூஸ் கிளிக் வழக்கின் பின்னணி:
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூஸ் கிளிக் ஊடகத்தின் அன்னிய நேரடி முதலீட்டு செயல்பாட்டில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு (116/2020) ஒன்றை பதிவு செய்கிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறது. பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் எப்.ஐ.ஆர் நகல் கூட நியூஸ் கிளிக் தரப்பிற்கு தரப்படாமல் மேலும் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்கிறது. நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் ED சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் 2021ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ED வழக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது, மேலும் தோழர் பிரபீர் கைதுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
தோழர் பிரபீரின் சட்டவிரோத கைது:
முந்தைய வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்திள்ள நிலையில், அதே பழைய குற்றச்சாட்டை புதிய எப்.ஐ.ஆராக (224/2023) பதிவு செய்து, 2023ஆம் ஆண்டு அக்.3ஆம் தேதி மாலை கைது செய்யப்படுகிறார் பிரபீர் புர்கயாஸ்தா. அடுத்த நாள் அக். 4 காலை 6 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
முதல் நாள் மாலை கைதான பிரபீர், அடுத்த நாள் காலை ரிமாண்ட் செய்யப்படுகிறார் என்ற தகவல் அவரது வழக்கறிஞரான அர்ஷ்தீப் குராணாவுக்கு காவல்துறை தெரிவிக்கவில்லை
கைது செய்யப்படும் தோழர் பிரபீர் |
காவல்துறையால் கொண்டு வரப்பட்ட வேறொரு வழக்கறிஞரை பிரபீரின் எதிர்ப்பையும் மீறி அவரது சார்பில் முன்னிறுத்தி நீதிபதியிடம் ரிமாண்ட் உத்தரவு வாங்கப்படுகிறது.
பிரபீர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் வரை அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என எந்த விவரமும் அவருக்கோ, அவரது வழக்கறிஞருக்கோ விளக்கப்படவில்லை. ரிமாண்ட் உத்தரவில் நீதிபதி காலை 6 மணிக்கு கையெழுத்திட்ட பிறகு, 7.07 மணிக்கு அவரது வழக்கறிஞருக்கு தகவல் செல்கிறது.
எப்.ஐ.ஆர். எண் 224/2023 நகல், ரிமாண்ட் செய்த நீதிபதியிடம் முறையிட்ட பின்னர், அவரது உத்தரவின் பேரில் அக். 5ஆம் தேதி மாலை தான் பிரபீர் தரப்பிற்கு தரப்படுகிறது. அவரது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அக். 13ஆம் தேதி தனி நீதிபதி துஷார் ராவ் அமர்வு தள்ளுபடி செய்கிறது. இதனையடுத்து தான் உச்சநீதிமன்றத்தை அனுகினார் பிரபீர் புர்கயாஸ்தா.
குற்றம் இழைத்த குற்றப்பத்திரிகை:
நியூஸ் கிளிக் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்களையோ ஆதாரங்களையோ முறையாக காட்டாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்தது காவல்துறை. சுறுங்க கூற வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் மீதான குற்றப்பத்திரிகை அனுமானங்கள் மீதானது மட்டுமே. எட்டு சாட்சிகள் அளித்த சாட்சியங்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருந்தது. அதாவது, பிரபீரும் அவரது கூட்டாளிகளும், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தார்கள். சீனாவிடம் இருந்து நிதிபெற்று சதி செய்தார்கள்(தகவல் யுத்தம்) விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டார்கள், காஷ்மீர், நக்சலைட்டுகளுக்கு நிதி அளித்தார்கள் என்றெல்லாம் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது அனுமானத்தின் மீது தான் உள்ளதே தவிர ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை.
சீன பணமும் குதர்க்க குற்றப்பத்திரிகையும்:
நியூஸ் கிளிக், பிரபீர் மீதான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, சீனாவிடம் இருந்து 92 கோடிக்கும் மேல் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, குற்றப்பத்திரிகையில் ஒரு முக்கிய நபராக அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் என்பவர் 2018 - 2023க்கு இடைப்பட்ட காலத்தில் நியூஸ்கிளிக் செயல்பாடுகளுக்காக 92 கோடிக்கும் மேல் பணத்தை சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது. சீனப்பணத்தை நியூஸ் கிளிக்கோ பிரபீரோ பெற்றதற்கான எந்த ஆவணங்களும் பாஜக அரசிடமோ காவல் துறையிடமோ இல்லை.
அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் |
இந்தியாவில் இன - மொழி - சமூக - அரசியல்ரீதியிலான பிரிவினைகளை ஏற்படுத்த சீனா - நக்சலைட்டுகள் - காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேர்ந்து நியூஸ் கிளிக்கும் பிரபீர் புர்கயாஸ்தா சதி செய்ததாகவும், இதற்காக பிரபீர் புர்கயாஸ்தா மற்றும் சிங்கம் ஆகியோர் ஒரு சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டும் முயற்சிக்காக மின்னஞ்சல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மக்களையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரையும் புதிய மற்றும் புதிய இயக்கங்களின் கீழ் அணி திரட்ட வேண்டும் என இந்த இடதுசாரி கூட்டணி கொள்கையை வகுத்து மின்னஞ்சல் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அப்படி ஒரு மின்னஞ்சல் ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை.
தகவல் போர் செய்தாரா பிரபீர் புர்கயாஸ்தா?
ஜம்மு - காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பகுதி அல்ல எனக் காட்டும் வரைபடங்களை நியூஸ் கிளிக் வெளியிட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒரு தகவல் நியூஸ் கிளிக் வெளியிடவே இல்லை. இதே போல், கொரோனா பெருந்தொற்றில், மோடி, ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்பட்டு சீனாவின் ஆதரவாளராக நியூஸ் கிளிக் இருந்துள்ளதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. அதாவது, பிரபீர் புர்கயாஸ்தா உறுப்பினராக உள்ள அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு மோடியின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டதாக விமர்சித்தது. இதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
மோடியை அம்பலப்படுத்தும் நியூஸ்கிளிக் கட்டுரை |
இதே போல் தான், குடியுரிமை திருத்தச்சட்டம், விவசாயிகள் போராட்டம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிரான பிரச்சாரம், பீமா கோரேகான் கலவரம், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம், டெல்லி கலவரம், காஷ்மீர், மணிப்பூர் பிரச்னை என நியூஸ் கிளிக் மற்றும் பிரபீர் புர்கயாஸ்தா மீது முன்வைக்கப்பட்ட காவல் துறையின் எந்த குற்றப்பத்திரிகை தகவல்களுக்கும் அடிப்படை ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை. எல்லாம், அனுமானத்தின் அடிப்படையிலும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பல் பரப்பும் வாட்சப் வதந்திகளை நம்பியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி:
தோழர் பிரபீருடன் அதே நாளில் கைது செய்யப்பட்ட அமித் சக்ரபர்த்தி நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவராகவும், இந்த நிறுவனத்தை நடத்தும் பிபிகே நியூஸ்கிளிக் ஸ்டுடியோ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.
அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி |
கடந்த சனவரி மாதம் ஊபா வழக்கில் விசாரணைக்கு உதவக்கூடிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனால் அப்ரூவராக மாறுவதாகவும், , இதனால் தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தார் அமித் சக்ரபர்த்தி. விசாரணை நீதிமன்றத்தால் அப்ரூவராக அங்கீகரிக்கப்பட்டு, மன்னிப்பும் வழங்கப்பட்டது.
அப்ரூவராக மாறிய நபரை அந்த வழக்கு முடியும்வரை விடுவிக்கக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அமித் தரப்போ அவருக்கு 56 வயதாகிறது, போலியோ தாக்கத்தால் அவரது உடலில் 59% முடங்கியிருப்பதால் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறார் என்று வாதிட்டது.
அப்ரூவர் அமித் தரப்பு கோரிக்கைக்கு தில்லி காவல்துறை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சி.ஆர்.பி.சி. பிரிவு 482ஐப் பயன்படுத்தி கடந்த மே 6 ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார் அமித் சக்ரபர்த்தி. அந்த தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடல்நிலையையும் மனிதநேயத்தோடு கருத்தில் கொண்டு விடுவிப்பதாக சொன்னது நீதிமன்றம்.
பாஜகவின் பொய் விமர்சனங்கள்:
பார்க்கின்சன்ஸ் நோயால் அவதியுற்று, தண்ணீர் பாட்டிலை கூட கைகளால் பிடிக்க முடியாமல், குடிப்பதற்கு ஸ்ட்ரா (straw) கேட்டார் 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி. ஆனால் அதனை கொடுக்க மறுத்தது என்.ஐ.ஏ. நீதிமன்றம். பல மாத சட்டப்போராட்டத்துக்கு பின்னரே அவருக்கு ஸ்ட்ரா கொடுக்கப்பட்டது. பின்னர் சிறையிலேயே நிறுவன படுகொலை செய்யப்பட்டார்.
பேராசிரியர் சாய்பாபா |
சமீபத்தில் ஊபா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 58 வயதான பேராசிரியர் சாய்பாபா, 90% உடலில் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையிலும் அவருக்கு பிணையோ, மருத்துவ சிகிச்சையோ மறுக்கப்பட்டது. 10 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் இருந்த சாய்பாபாவை இருமுறை நாக்பூர் உயர்நீதிமன்றம் நிரபராதி என்று அறிவித்த பின்னர் தான் விடுவிக்கப்பட்டார்.
பாஜக ஆட்சி காலத்தில் மட்டும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எல்லோர் மீதும் இதுபோன்ற என்னென்ற அவதூறு குற்றச்சாட்டுகள் தான் முன்வைக்கப்பட்டுள்ளன. தேசத்திற்கு எதிராக பேசினார்கள். சீனாவின் கைக்கூலி, பிரிவினைவாதிகள், நகர்புற நக்சலைட்டுகள் என்று எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுடன் தானே சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கொடிய ஆட்சியைக் கேள்விக் கேட்பவர்கள் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பாஜக கைது செய்த மக்கள் ஜனநாயகவாதிகளின் சமூக விடுதலை பங்களிப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளது பிரபீர் விடுதலை வழக்கு.
சிறையிலிருந்து விடுதலையான பிரபீர் புர்கயாஸ்தா |
2004 முதல் 2014 வரை 112 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி 5,346 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக ஆட்சியில் 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் 310 சோதனைகளை நடத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. 2014 மற்றும் 2022க்கு இடையில், 121 உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 115 தலைவர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதாவது 95% வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான். ஆக மொத்தத்தில், எதிர்க்கட்சிகளை முடக்கவும், சமூக ஆர்வலர்கள் மக்கள் நலன் சார்ந்து போராடுவதை முடக்குவதையுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
பிரபீர் வழக்கு போல், மீதம் உள்ள வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டால் பாஜகவின் முகத்திரைக் கிழியும். புலனாய்வு அமைப்புகளும், அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் சி.பி.ஐ உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மோடியின் வேட்டை நாய் போலத்தான் இருக்கின்றன. பிரபீர் வழக்கு மோடியின் வேட்டை நாய்களின் பல்லை உடைத்துள்ளது. இறுதியில், மோடியின் மொத்த முகத்திரையுமே விரைவில் கிழியும். விடுதலை சிறுத்தைகள் போல் இந்தியாவின் பல்வேறு ஜனநாயக சக்திகளும் மோடிக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டன. இந்த போராட்டத்தின் மூர்க்கத்திற்கு முன் மோடி தொடை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார். மோடியின் இறுதி முடிவு மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதை காலம் விரைவில் இந்திய மக்களுக்கு உணர்த்தத்தான் போகிறது.
- வன்னி அரசு
0 comments:
Post a Comment