21 December 2024

லாவண்யா வழக்கில் வன்முறையை தூண்ட முனைந்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்!

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தூய இருதய மேல்நிலைப் பள்ளி, 1859ஆம் ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது 165 ஆண்டுகளை கடந்து அப்பகுதியில் தொடர்ந்து கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு அப்பள்ளியை முன்வைத்து மிகப்பெரிய சமூக பதற்றத்தையும், கலவரத்தையும் நடத்தியது சங்க பரிவார கும்பல். அதனை தலைமையேற்று நடத்தியது பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு.அண்ணாமலை.


மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. பாஜக வன்முறை கும்பலின் சதித்திட்டம் நீதிமன்றத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஒரு அப்பாவி பெண் குழந்தையின் மரணத்தை பயன்படுத்தி அரசியல் ஓநாய்களும் - நீதித்துறை கருப்பு ஆடும் கலவரத்தை நடத்தினார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.

கடந்த 15.01.22 அன்று மாலை பள்ளி மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது.

அடுத்த நாள் 16.01.22 காலை திருக்காட்டுப்பள்ளி காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன், குறிப்பிட்ட மாணவியை சந்தித்து விசாரணை நடத்தினார். அந்த மாணவி தான் லாவண்யா (வயது 17) 12ஆம் வகுப்பு மாணவி. அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்தவர். தந்தை மற்றும் சித்தியால் 8ஆம் வகுப்பிலேயே தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டு, படித்து வந்துள்ளார்.


நாம் அடுத்தடுத்து செல்வதற்கு முன்னர், இந்த வழக்கின் காலவரிசையை (Timeline) நாம் கவனித்தால் தான் இதற்கு பின்னுள்ள சதியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

9.1.22 - தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் தூய மைக்கேல் மாணவியர் விடுதியில் தங்கியிருந்த மாணவி லாவண்யா, மாலை 5 மணியளவில் விடுதி வழிபாட்டு அறையில் இருந்த பூச்சி மருந்தை உட்கொள்கிறார். வாந்தி வந்ததால், விடுதி காப்பாளர் அருட் சகோதரி சகாய மேரி மாணவியை ஓய்வெடுக்க சொல்கிறார். பின்னர் அருகிலிருந்த செவிலியர் ஊசியை செலுத்தி, மாத்திரைகள் வழங்குகிறார்

10.1.22 - விடுதியின் தகவலையடுத்து லாவண்யாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்

11.1.22 - தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால், குளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

12 மற்றும் 13.1.22 - திருமானூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

15.1.22 - அரியலூரில் அமைந்துள்ள செந்தில்நாதன் கிளினிக்கின் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்படும் வரை தான் பூச்சி மருந்தை உட்கொண்டதை மாணவி வீட்டிலோ, மருத்துவமனையிலோ யாரிடமும் தெரிவிக்கவில்லை. தஞ்சை மருத்துவமனியில் தான் மருத்துவர்கள் கண்டுபிடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

16.1.22 - காலை 9.30 மணிக்கு காவல் அதிகாரி நெடுஞ்செழியனிடம் அளித்த வாக்குமூலத்தை, மாலை 4.10 மணிக்கு தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடமும் அளிக்கிறார் மாணவி லாவண்யா.

தன்னை விடுதி வார்டன் அருட்சகோதரி சகாய மேரி என்பவர் அதிகப்படியான வேலை வாங்கியதாகவும், விடுதி தோட்டத்தை பராமரிப்பது, தண்ணீரை கொண்டு விடுதி வளாகத்தை சுத்தம் செய்வது, விடுதியின் கணக்கு வழக்குகளை பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தியதால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், இதனை யாரிடமும் சொல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாக்குமூலங்களும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. மாணவி கொடுத்த வாக்குமூலமே புகாராக பெறப்பட்டு 16ஆம் தேதி அன்றே எப்.ஐ.ஆர் பதியப்படுகிறது.


படங்கள்: தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை

17.1.22 - காவல்துறையினர் விடுதியில் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட பூச்சுக்கொல்லி மருந்து குடுவையை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்துகின்றனர்.

18.1.22 - மாணவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் 62 வயதான விடுதி காப்பாளர் அருட்சகோதரி சகாய மேரி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுகிறார்.

கடந்த 19.1.22 - தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகும், மாணவி லாவண்யா மரணமடைகிறார். மாணவி லாவண்யா பூச்சி மருந்து குடித்ததிலிருந்து இறப்பு வரை நடைபெற்ற நிகழ்வுகளையும் நடவடிக்கைகளையும் கவனித்தால், மிகச்சரியான அதேவேளையில் நியாயமான முறையில் காவல்துறையும், ஆட்சி நிர்வாகமும் செயல்பட்டு வந்ததை அறியலாம்.

தனது மரணத்தை எப்படி பிணந்தின்னி பயங்கரவாத கூட்டமொன்று இந்த நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் என்பதையும், நாட்டை பிளவுபடுத்தி கூறுபோடும் சதித்திட்டத்தில் எப்படி மனு நீதிபதி ஒருவரும் ஈடுபடுவார் என்பதையும் அறியாமல் மரணித்து போனாள் அந்த குழந்தை லாவண்யா.

கடந்த 20.11.22 - மரண படுக்கையில் இருக்கும் மாணவி லாவண்யா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கிறது. 

அதே நாள் மதியம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இந்த நபர், 45 விநாடிகள் உள்ள குறிப்பிட்ட வீடியோவில் பேசுவது 17 வயதான மைனர் பெண் என்பதையும், அவர் இறந்துவிட்டார் என்பதையும் பொருட்படுத்தாமல், சட்டவிரோதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார்.

படங்கள்: இன்றளவும் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் உள்ள பதிவுகள்

மாணவி லாவண்யாவை மதம் மாற சொல்லி பள்ளி கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிடுகிறார்.

அதாவது பெற்றோர் முன்பு காவல்துறை அதிகாரி மற்றும் நீதித்துறை நடுவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் இல்லாத மதமாற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரி மீதும் நடவடிக்கை வேண்டும் எனவும் பதிவிட்டார் அண்ணாமலை. 

மருத்துவமனை கட்டிலில் மூச்சிறைக்கும் மாணவி லாவண்யாவிடம் கேள்விகள் கேட்டு பதிவு செய்தவன், அரியலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் முத்துவேல். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிள்ளையை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றலாமா என்று தனது பெற்றோரிடம் விடுதி காப்பாளர் கேட்டதாக சொல்கிறார் லாவண்யா. அதனால் தான் உன்னை வேலை வாங்கினார்களா? என்ற முத்துவேலின் கேள்விக்கு ‘இருக்கலாம்’ என்று பதிலளிக்கிறார் லாவண்யா.

இந்த வீடியோவை இந்தியா முழுக்க தூக்கி சென்றது சங்க பரிவாரின் இணைய கூலிக் கூட்டம். #JusticeForLavanya என்று தெருவெங்கும் முழக்கமிட்டு திரிந்தனர். அதுவரை இல்லாத மதமாற்ற குற்றச்சாட்டு நாடெங்கும் பரப்பப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிராகவும், அவர்களது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பு பேச்சுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.


லாவண்யா வழக்கு கடந்து வந்த பாதையை ஆராய்வதன் மூலம், தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசை நிலைகுலைய வைக்க சங்க பரிவார் கும்பல் முன்னெடுத்த சதியை நாம் அறியலாம். இந்த சதியில் நீதித்துறையின் பங்கு எவ்வாறானது என்பதும் அம்பலமாகிறது. 

மாணவியின் தந்தை முருகானந்தம் சிபிசிஐடி அல்லது ஏதேனும் தனி விசாரணை அமைப்புக்கு வழக்கை மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை விசாரித்தது சுவாமிநாதன்.

சனவரி 21, 22, 24, 28, 31 என அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு அமர்வுகளில் இந்த வழக்கை விசாரித்த சுவாமிநாதன், விசாரணையின் போக்கில் தனி கவனம் செலுத்தி, பாஜக கும்பல் முன்வைத்த மதமாற்ற குற்றச்சாட்டை நோக்கி வழக்கை திசைதிருப்பினார் என்று தான் சொல்ல வேண்டும்.

மாணவியிடம் மதமாற்றம் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ எடுத்துவிட்டு, அவர் மரணமடையும் வரை காத்திருந்து பின்னர் வெளியிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் செயலாளர் முத்துவேலை பாதுகாக்கும் விதமாக, ’வீடியோவில் சொல்லப்பட்ட விடயத்தை தான் விசாரிக்க வேண்டும், வீடியோ எடுத்தவரை காவல்துறை துன்புறுத்த கூடாது’ என்று சன. 22 உத்தரவிடுகிறார் சுவாமிநாதன். இதன் மூலம் தொடக்க நிலையிலேயே காவல்துறை விசாரணைக்கு சுவாமிநாதனால் முட்டுக்கட்டை போடப்பட்டு, முத்துவேல் தப்பிக்க விடப்பட்டான்.

’மாணவி படித்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவிகளை விசாரித்ததில் மதமாற்றம் குறித்து எந்த புகாரும் வரவில்லை’ என்று சன. 24ல் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியையும், மதமாற்றத்தில் குறிப்பிட்ட பள்ளி ஈடுபடவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் முன்வைத்து, தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக சன 28ஆம் தேதி நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரினார் முருகானந்தம். 

நாம் மேலே பட்டியலிட்ட அரசின் துரித நடவடிக்கைகளை முன்வைத்து வாதிட்டார் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர். மேலும் லாவண்யாவின் பெற்றோர், விஎச்பி முத்துவேல் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதையும் தெரிவித்தார்.

குறிப்பாக, லாவண்யாவின் தாய் இறந்த பிறகு, அவரது தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். வீட்டில் சித்தியின் கொடுமை தாங்கமுடியாமல் தான், லாவண்யா இப்பள்ளியில் விடுதி மாணவியாக சேர்ந்தார் என்பதையும், விடுமுறை நாட்களில் கூட லாவண்யா வீட்டுக்கு செல்லாமல், விடுதியிலேயே தங்கினார் என்றும் சக மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை எடுத்துரைத்தார் அரசு வழக்கறிஞர்.

வழக்கு விசாரணையின் ஒவ்வொரு விடயத்திலும் நீதிமன்றம் தலையிட்டு, விசாரணை இந்த திசையில் தான் செல்ல வேண்டும் என்று சொல்வது சரியல்ல. காவல்துறை விசாரணை என்பது அரசின் அதிகாரத்துக்கு கீழ் வருவது, அதில் நீதிமன்றம் தலையிடகூடாது என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

பள்ளியின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர். மாணவியின் குடும்பத்தினர் குறித்து தரவுகளை முன்வைத்தார். மாணவி லாவண்யா தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தைகளுக்கான ஹெல்ப்லைனுக்கு புகார் வந்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிவித்தார். வீட்டில் சித்தியின் கொடுமை குறித்து தனது நண்பர்கள் மற்றும் விடுதி தோழிகளிடம் லாவண்யா சொல்லியவற்றையும் முன்வைத்து, இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று வாதாடினார்.

எல்லாவற்றையும் கேட்டவிட்டு, சன 31ஆம் தேதி சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டார் சுவாமிநாதன். வெறுமனே உத்தவிட்டிருந்தால் நாம் கடந்துவிடலாம். ஆனால், அந்த உத்தரவில் அவரது நஞ்சு எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

’மதமாற்ற குற்றச்சாட்டுக்கு தஞ்சை எஸ்.பி. ஏன் மின்சார வயரை தொட்டுவிட்டது போல எதிர்வினையாற்றினார்? என்று கேள்வியெழுப்பும் சுவாமிநாதன், கிறிஸ்தவர்களின் திருவிவிலியத்தில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே மதமாற்றுவது தான் என்பது நிறுவ முயற்சித்தார்.

படங்கள்: 2022 சன 31ஆம் தேதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு

அதற்கடுத்து மதமாற்ற குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுவாமிநாதன் மேற்கோள் காட்டியது நடிகர் நவாசுதீன் சித்திகியின் ‘Serious Men’ பட காட்சியையும், இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் கதையையும் தான்.

’எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளி அமைந்துள்ள கிராமம் மைக்கேல்பட்டி என அழைக்கப்படுகிறது. அது அந்த கிராமத்தின் உண்மையான பெயராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் உண்மை பெயரை யாரேனும் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்’ என்று மனுதாரருக்கு ஆதரவாக வாதாடினார் நீதிபதி சுவாமிநாதன்.

**
தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார் அருட்சகோதரி சகாயமேரி. இந்த வழக்கை நீதிபதி இளங்கோவன் விசாரித்து வந்தார்.

வழக்கு விசாரணையின் போதே, லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்கில் இறுதி தீர்ப்பு கடந்த திச.16ஆம் தேதி வெளியாகியுள்ளது. மொத்தம் 31 பக்க தீர்ப்பில் பாஜக கும்பல் கட்டமைத்த வெறுப்பு பரப்புரை சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம் செய்யப்பட்ட தீர்ப்பின் முக்கிய பகுதிகளை பார்க்கலாம்.

பக்கம் 10 பத்தி 17. பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் இறப்பு சமூக குற்றமாக மாற்றப்பட்டது

பத்தி 18. ஆவணங்களை ஆராயும்போது, கட்டாய மதமாற்றம் தான் காரணம் என்பதாக இந்த சம்பவத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவருகிறது. ஆனால் மதமாற்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதை, சிபிஐ விசாரணை அதிகாரி நேர்மையான முறையில் திறம்பட விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். வழக்கு விசாரணையின் போதே இதை அரசு சிறப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தி இருந்தார்.

பொறுப்புள்ள நபர்கள் இத்தகைய செயல்பாடுகளை தவிர்த்திருக்க வேண்டும். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்க கூடாது. ஆனால் விளைந்த பாதிப்பை இப்போது சரி செய்திட இயலாது.

 

படங்கள்: நீதியரசர் இளங்கோவன் தீர்ப்பு விவரம்

பக்கம் 27 பத்தி 29. சிபிஐ விசாரணை அதிகாரியிடம் இறந்த மாணவியின் வீட்டின் நிலை குறித்து சாட்சிகள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவற்றை பார்க்கும்போது தனது தற்கொலைக்கு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு எதிராக மரண வாக்குமூலத்தில் மாணவி அளித்த காரணங்கள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பது தெரிய வருகிறது.

பத்தி 30. விசாரணை அதிகாரி பதிவு செய்துள்ள வாக்குமூலங்கள், மாணவியின் மரண வாக்குமூலத்துக்கு முரணாக இருப்பதை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பு வாதமாக முன்வைக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து மாணவியின் மரண வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல என்று இந்த நீதிமன்றம் முடிவெடுக்க சி.ஆர்.பி.சி.482ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும். ஆனால் மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமானவையா என்பதை விசாரணை நீதிமன்றம் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் நீதியரசர் இளங்கோவன்.

ஐபிசி 305 - 18 வயதுக்குட்பட்டவரை தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ பிரிவு 75 மைனர்களுக்கு துண்புறுத்தல் ஆகிய 2 பிரிவுகளில் அருட்சகோதரி சகாயமேரி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

வழக்கின் சாராம்சத்தை ஆராயும்போது, இதில் போக்சோ சட்டப்பிரிவு 75 கீழ் வழக்கு பதிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர்த்துகிறது. இதனை குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது, விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்க பரிவார் கும்பல் தமிழ்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியை நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லும் பதில் என்ன? சமூக பதற்றத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பதற்றத்தையும் அவர்களின் உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வண்ணம் செயல்பட்ட அண்ணாமலையின் வன்முறை கும்பலை காவல்துறை சிறைப்படுத்த வேண்டும்.

- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
21.12.2024

06 December 2024

இடிக்கப்படுவது மசூதிகளா? அரசமைப்புச்சட்டமா?

சனாதன வன்முறை கும்பலால் பாபர் மசூதி 1992ஆம் இடிக்கப்பட்டது. அதற்குண்டான முன்னேற்பாடாக பாஜக தலைவர் அத்வானி நாடெங்கும் கலவர பேரணியை 1990ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த பேரணியே ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் மண்டல் பரிந்துரைக்கு எதிராக தொடங்கப்பட்டதே பாஜகவின் பேரணி என்பதே அதன் பின்னணி. நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அரசு, வழிபாட்டு இடங்கள் சட்டத்தை கொண்டு வந்தது.


பாபர் மசூதி


வழிபாட்டு இடங்கள் சட்டம் 1991:


அச்சட்டத்தின் அறிமுகத்தில்.. ”1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்று இருந்தவாறான வழிபாட்டு இடம் எதனையும் உருமாற்றம் செய்வதைத் தடை செய்வதற்கும், வழிபாட்டு இடம் எதனின் சமயத்தன்மையினையும் பேணுவதற்கு வகைசெய்வதற்கும். அத்துடன் தொடர்புற்ற அல்லது அதனோடு சார்வுறுவான பொருட்பாடுகளுக்குமான ஒரு சட்டம்” என்கிறது.


மேலும் இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 4. (1) & 5 சொல்வது…


” 4. (1) 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தன்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாறு அதேபோன்று தொடர்ந்திருக்கும்


5. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் அமைந்திருக்கிற இராம ஜென்ம பூமி பாபர் மசூதி எனப் பொதுவாக அறியப்பட்ட அந்த இடத்திற்கு அல்லது வழிபாட்டு இடத்திற்கு மற்றும் அந்த மேற்சொன்ன இடம் தொடர்பான அல்லது வழிபாட்டு இடம் தொடர்பான உரிமைவழக்கு, மேல்முறையீடு அல்லது பிற நடவடிக்கை எவற்றிற்கும் பொருந்துறாது” என்பதே.


அயோத்தி பாபர் மசூதி வழக்கை மட்டும் தவிர்த்து, 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் அமைந்த எந்தவொரு வழிபாட்டு இடத்தின் சமயத்தன்மையையும் மாற்றுவது தொடர்பான எந்த வழக்கும் செல்லுபடியாகாது, அது குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்று தெளிவுப்படுத்துகிறது சட்டம்.


பாபர் மசூதி தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை, இந்து தரப்புக்கு வழங்கி 2019 ல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகாய். அந்த ஐவரில் போப்டே மற்றும் சந்திரசூட் இருவரும் பின்னர் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். அயோத்தி தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயர் ரகசியமாக இருந்த நிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தான் என வெளிப்பட்டது.


பாபர் மசூதி தீர்ப்பு அமர்வு

”நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் கருவியாக வரலாற்றையும் அதன் தவறுகளையும் பயன்படுத்த கூடாது என்பதை தான் வழிபாட்டு இடங்கள் சட்டம் மூலம் நாடாளுமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் நோக்கத்திலும், அதற்கு வலுசேர்க்கும் விதமாகவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று பாபர் மசூதி தீர்ப்பில் தனி தலைப்பிட்டு சொல்லியுள்ளனர்.


வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு:


உத்தரபிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோவில். இதற்கு அருகே உள்ளது 16ஆம் நூற்றாண்டில் அவுரங்கசிப் மன்னனால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி. இந்த மசூதி தொடர்பாக 1991ஆம் வரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும், மசூதியின் கீழ்தளத்தில் அமைந்துள்ள 4 நிலவறைகளில் ஒன்றில் இந்து தரப்பு பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடத்தி வருவதாகவும், எனவே மசூதி அமைந்துள்ள பகுதியின் நிர்வாகத்தை இந்து தரப்புக்கு வழங்க வேண்டும் என்பதே வழக்கு.


ஞானவாபி மசூதி


1998ஆம் ஆண்டே மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு வெளியானதும், வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் காசி விஸ்வநாதர் கோவிலில் கருவறையில் அமைந்துள்ள சுயம்பு ஆதிவிஷ்வேஷ்வரின் நண்பர் என்ற பெயரிட்டு, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு கோரி வழக்கு தொடர்ந்தார்.


பாபர் மசூதி வழக்கில் குழந்தை ராமர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும், சட்டப்பூர்வமாக ஒரு தனிநபருக்கு உள்ள அனைத்து சட்ட உரிமைகளும் அய்யப்பனுக்கும் பொருந்தும் என்று வாதிடப்பட்டது.


ரஸ்தோகியின் வழக்கை வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முன்வைத்து மசூதியின் நிர்வாகக் குழுவான அஞ்சுமான் இண்டேசாமியா மஸ்ஜித் கமிட்டி எதிர்த்தது. இருப்பினும் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் மசூதிக்குள் செயற்கை நீரூற்று அருகே சிவலிங்கம் போன்ற அமைப்பு உள்ளதாகவும், குறிப்பாக மசூதி கட்டப்படுவதற்கு முன்னர், அங்கு இந்து கோவில் இருந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாக தொல்லியல் துறை தெரிவித்தது.


மசூதியின் நிலவறை பகுதியில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கில், அதற்கு அனுமதி அளித்தது வாரணாசி நீதிமன்றம். தற்போது அரசு கட்டுப்பாட்டில் அந்த நிலவறை கொண்டு வரப்பட்டு, பார்ப்பனர் ஒருவரால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 


வாரணாசி நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கில் தான், அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அரசியலமைப்பை சீர்குலைக்கும் மோசமான நிலைப்பாட்டை எடுத்தார். வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முன்வைத்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தவும், அதன் நிலவறையில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்த தீர்ப்பையும் எதிர்த்தது மசூதி நிர்வாகம்.


”மசூதிக்குள் இந்து கடவுளர் சிலைகளை வழிபடும் உரிமையை தான் மனுதாரர் கேட்டுள்ளார். அந்த இடத்தின் உண்மையான மதத்தன்மையை தீர்மானிப்பது, அதன் தன்மையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ ஆகாது. இந்த வழக்கு வழிபாட்டு இடங்கள் சட்டத்துக்கு எதிராக இல்லை” என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் தலைமை நீதிபதி சந்திரசூட். மேலும், மசூதிக்குள் தொல்லியல் ஆய்வு நடத்தவும், இந்துக்கள் சென்று வழிபடவும் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடவும் மறுத்துவிட்டார்.


ஏற்கனவே, அந்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி 2020ஆம் ஆண்டிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தலைமை நீதிபதியின் இந்த நிலைப்பாடு சட்டத்தை வலுவிழக்க செய்வதாகவும், பாபர் மசூதி வழக்கில் அவர் எழுதிய தீர்ப்புக்கே முரணாகவும் இருந்தது.


மதுரா ஷாஹி இத்கா மசூதி வழக்கு:


கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கருத்தப்படும் இடத்தில் உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்துக்கு அடுத்து ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. மசூதியை கொண்ட வளாகம் மொத்தம் 13.37 ஏக்கரில் உள்ளது.


ஷாஹி இத்கா மசூதி


1964ல் இருதரப்பினர் இடையே சிக்கல் எழுந்தபோது, 1968ல் சமாதான உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது. அதன்படி, வளாகத்தில் உள்ள நிலம் கோவிலுக்கும், அதிலுள்ள மசூதியின் நிர்வாகம் இஸ்லாமிய தரப்புக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும், மசூதி மீது கோவிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.


2019 ல் பாபர் மசூதி வழக்கில் சனாதன தரப்பு முதல் வெற்றியை பதிவு செய்ததும், வாரணாசியை தொடர்ந்து மதுராவிலும் வழக்கு தொடரப்பட்டது. மசூதி அப்புறப்படுத்தப்பட்டு நிலம் முழுவதும் கோவிலுக்கு தரப்பட வேண்டும் என்று மதுரா நீதிமன்றத்தில் இந்து தரப்பு சார்பாக 18 வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன.


மதுரா கோவிலில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீகிருஷ்ண விராஜ்மான் சார்பில் அவரது ’நண்பர்’ என்ற பெயரில் வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 2023 டிசம்பரில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மசூதியில் ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இஸ்லாமிய தரப்பின் மேல்முறையீட்டில் அதற்கு ஜனவரியில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இந்த வழக்கிலும் வழிபாட்டு இடங்கள் சட்டத்தை தான் தங்கள் தரப்பு வாதமாக மசூதி நிர்வாகம் முன்வைத்தது. ஆனால் மதுரா மாவட்ட நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என எங்கும் அது ஏற்கப்படவில்லை.


சம்பல் ஜமா மசூதி வழக்கு:


உ.பி.யில் சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷாஹி ஜமா மசூதி. இது ஒன்றிய தொல்பொருள் ஆய்வகத்தின் கீழ் வரும் இடமாகும். இந்த இடத்தில் முன்னர் இந்து ஹரிஹர் கோவில் இருந்ததாக சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் நவ.19ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், மசூதி தரப்பை ஆலோசிக்காமல் வழக்கு தாக்கலான சில மணிநேரத்தில் நீதிமன்றம் நியமிக்கும் கண்காணிப்பாளர் தலைமையில் மசூதியை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நாள் மாலையில், நீதிமன்றத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மசூதிக்குள் பெரும் போலீஸ் படையுடன் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர் இந்து தரப்பினர்.


சம்பல் ஜமா மசூதி

இந்த நிலையில் கடந்த நவ.24ல் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என முதல் நாள் நள்ளிரவில் தகவல் கொடுத்தது காவல்துறை. அடுத்த நாள் காலை 6.15 மணிக்கே போலீஸ் படையுடன் மசூதிக்குள் நுழைந்து காலை தொழுகையில் இருந்தவர்களை வெளியேற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதனை எதிர்த்து இசுலாமியர்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.


இந்து தரப்பினர் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ முழக்கத்துடன் மசூதியை நோக்கி செல்லும் காட்சியும், போராடும் இஸ்லாமிய இளைஞர்களை நோக்கி காவலர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடும் காட்சியும் நாடெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது.


ஜமா மசூதி தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா அமர்வு, ”மசூதியில் இருமுறை நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை சீலிடப்பட்ட உறையில் வைத்திருக்கவும், சம்பல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை வழக்கில் வேறு எந்த முடிவும் எடுக்கப்படக்கூடாது” என்றும் உத்தரவிட்டது. வழிபாட்டு இடங்கள் சட்டம் குறித்து இப்போதாவது உச்சநீதிமன்றம் சரியான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமா என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில் அடுத்த மசூதியை நோக்கி சென்றுவிட்டது சனாதன கும்பல்.


அஜ்மீர் மொய்தீன் ஷிஷ்தி தர்கா வழக்கு:


ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி மொய்தீன் ஷிஷ்தியின் உலகப் புகழ்பெற்ற தர்கா அமைந்துள்ளது உலகம் முழுவதிலும் இருந்து சாதி, மதம் இன வேறுபாடின்றி அனைவரும் சென்று வழிபடக்கூடிய இடமாக உள்ளது.


அஜ்மீர் தர்கா


இந்து சேனா என்ற அமைப்பின் தலைவன், அஜ்மீர் தர்காவுக்கு கீழே சிவன் கோவில் இருந்தது. அதை இடித்த பின்பே தர்கா கட்டப்பட்டது. எனவே ஆய்வு மேற்கொண்டு அதனை கோவிலாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்று தர்கா நிர்வாகம், ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம். 


அயோத்தி பாபர் மசூதி வழக்கு தொடங்கி காசி ஞானவாபி, மதுரா இத்கா, தில்லி குதுப்மினார் என கிட்டத்தட்ட பெரும்பாலான மசூதிகளுக்கு எதிரான வழக்குகளில் இந்து தரப்பினருக்கு ஆதரவாக வழக்கை நடத்துபவர்கள் வழக்கறிஞர்களான ஹரி சங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு சங்கர் ஜெயின் தான். இருவரும் தந்தை - மகன் ஆவர். நாடு முழுவதும் சங்க பரிவார் அமைப்புகள் இந்த விடயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதை இது உணர்த்துகிறது.


கடந்த செப்டம்பர் மாதம் பொதுக் கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஞானவாபியை மசூதி என்று அழைப்பது தவறு, அது ஒரு சிவன் கோவில். தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாடுக்கும் மசூதியின் பெயர் தடையாக உள்ளது என்றார். 


பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, இஸ்லாமிய வழிபாட்டு இடங்களை உரிமை கோருவதற்கு சனாதன கும்பல் முன்வைக்கும் வாதம், ஒரு வழிபாட்டு இடத்திலிருந்து கடவுளர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், அந்த இடம் கோவிலாகவே தொடர்கிறது. கடவுள்கள் எல்லா காலத்துக்கும் உரியவர்கள் என்பதால், அந்த இடத்தின் மதத்தன்மை மாறுவதில்லை என்பதே.


அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுடன் அடையாளப்படுத்தப்படும் 1991ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, பெரும்பான்மைவாத பயங்கரவாதத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் வேலையில் மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றமே ஈடுபட்டுள்ளது.


ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னர் தலைமை நீதிபதி சந்திரசூட் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாபர் மசூதி வழக்கில் முடிவு எடுப்பதற்கு 3 மாதங்களாக மிகவும் சிரமப்பட்டதாகவும், அப்போது கடவுளின் சிலை முன்பு அமர்ந்து, அவ்வழக்கிற்கு அவரையே தீர்வை சொல்லும்படி வேண்டினேன் என்றும் தெரிவித்துள்ளார். கடவுளிடம் கேட்டு பாபர் மசூதி தீர்ப்பை முடிவு செய்தேன் என்று சொன்ன நீதிபதி சந்திரசூட்டின் கருத்தும் பெரும்பான்மைவாத பயங்கரவாதம் தான். அதன் நீட்சியாகத்தான் தனது அரசு இல்லத்துக்கு கேமராக்கள் புடைசூழ, பிரதமர் மோடியை வரவேற்று விநாயகர் பூஜையில் பங்கெடுக்க வைத்தார் சந்திரசூட்.


சந்திரசூட் வீட்டு பூஜையில் மோடி

சமண - பெளத்த வழிபாட்டு தலங்களை வன்முறையின் மூலம் தனதாக்கி கொண்டது சனாதன பயங்கரவாத கும்பல். பெளத்தத்துக்கும் பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டமே இந்திய வரலாறு என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த போராட்டத்தின் தொடர்ச்சியை தான் இப்போதும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதில் சனநாயகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பும் வீழ்த்தப்பட்டு வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.


ஞானவாபி மசூதி விவகாரம் வெளிவந்த காலத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத், “ஏன் ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்?” என்று தங்கள் வன்முறை கும்பலுக்கு கேள்வி எழுப்பினார். அயோத்தி பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, காசி, மதுரா, சம்பல் என தொடர்ந்து இப்போது அஜ்மீர் தர்காவுக்கு வந்து நிற்கிறது சனாதன வன்முறை கும்பல்.


நீதிமன்றங்களில் சனாதன கும்பல் முன்வைக்கும் வாதப்படி, பூர்வகுடி பவுத்த - சமணர்கள், திருவரங்கம் மற்றும் திருப்பதியின் மதத்தன்மையை ஆராயும்படி சனநாயகவாதிகள் கோரினால் ஏற்குமா நீதிமன்றங்கள்?


இப்படியே விட்டால், இந்தியாவில் சிறுபான்மையினத்தவரின் எந்த வழிபாட்டுத்தலங்களும் மிஞ்சாது என்பதே சோகம். இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டை கொண்டாடும் மோடி அரசு அரசிலமைப்புச் சட்டத்தை எப்படி படுகொலை செய்கிறது என்பதற்கு இவை உதாரணங்கள்.


- வன்னி அரசு
1.12.2024


நன்றி: நக்கீரன்

(06.12.2024 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்தக் கட்டுரை வெளியானது)

04 December 2024

கொலைக் குற்றச்சாட்டில் அமித்ஷா - கனடா பிடியில் மோடியும் அமித்ஷாவும்!

’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்று ஊர் பக்கம் சொல்வது போல, அமித்ஷாவும் கொலை குற்றச்சாட்டும் பிரிக்கவே முடியாது என்றாகிவிட்டது.


பிரதமர் மோடியின் வலதுகரமும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மீது சமீபத்தில் கனடிய அரசு வைத்துள்ள குற்றச்சாட்டை பார்க்கும்போது அப்படித்தான் உள்ளது.



இதுவரை அமித்ஷா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பார்ப்போம்...


குஜராத் முதல்வராக மோடி (இப்போதும் அப்படி தான்!?) இருந்தபோது போலீஸ் துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. 2005ஆம் ஆண்டில் ரவுடி சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர்பீ, கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோரை கடத்தி குஜராத் போலீஸ் கொன்றுவிட்டது. இதற்கு காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று வழக்கு பதிந்து சிபிஐ விசாரித்து வந்தது.


சோராபுதீன் - கவுசர்பீ

2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி ஆட்சிக்கு வந்ததும், பாஜக தலைவரானார் அமித்ஷா. அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்த மூன்று கொலை வழக்குகளிலிருந்தும் அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.


இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா டிசம்பர் 1ஆம் தேதி மர்மமான முறையில் நாக்பூரில் இறந்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய நிலையில், 2018ஆம் ஆண்டு லோயா மரணத்தில் தனி விசாரணை தேவை இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு. இந்த தீர்ப்பளித்த மூவரில் ஒருவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது. சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் மீதமிருந்த 21 காவல்துறையினரை 2018ஆம் ஆண்டு விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்.


நீதியரசர் லோயா


2002ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையின் போது, ‘குல்பர்க் சொசைட்டி’எனும் குடியிருப்பு வளாகத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இக்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஜாஃப்ரியின் மனைவி கொடுத்த புகாரில் மோடி மற்றும் அமித்ஷா மீது குற்றஞ்சாட்டிய நிலையில், மோடி மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது. குல்பர்க் சொசைடி படுகொலை வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டது சரியே என்றும் இது திட்டமிடப்பட்ட பொய் வழக்கு என்றும் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.


சாகியா ஜாஃப்ரி


இஷ்ராத் ஜெஹான்


2002 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக, 2004ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொல்வதற்காக வந்த லஷ்கர் தீவிரவாதிகள் என்று இஷ்ராத் ஜெஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை, அதற்கு போதிய ஆதாரங்களும் இல்லை என்று 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது சிபிஐ. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 காவல்துறை அதிகாரிகளையும் 2021ஆம் ஆண்டு விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்.


ஆக, இதுவரை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்திய நீதிமன்றங்களால் சட்டப்படி விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஆனால், இப்போது அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது கனடிய அரசு. கனடாவின் சர்ரே நகரத்தில் அமைந்துள்ள குரு நானக் குருத்வாராவின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார். அந்த குருத்வாரா வாசலில் ஜூன் 18, 2023ல் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 


யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்?


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நிஜ்ஜார் கடந்த 1996ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி, “இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டேன்”என்ற வாதத்தை முன்வைத்து கனடாவில் தஞ்சம் அடைந்தார்.


நிஜ்ஜார் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்குறிப்பில், தொடக்கத்தில் பாபர் கல்சா இண்டர்நேஷ்னல் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டவர், பாகிஸ்தானில் ஆயுத பயிற்சியும் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பின்னாட்களில், ’காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய அரசின் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு நிஜ்ஜாரை ’ஊபா’சட்டத்தின் கீழ் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது இந்திய ஒன்றிய அரசு. சில கூலிப்படையினரால் ஆபத்து உள்ளது என்று நிஜ்ஜாருக்கு கனடிய உளவுத்துறை முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஹர்தீப்சிங் நிஜ்ஜார்

கடந்த செப். 18 2023ல் கனடிய பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்ட்டுகளுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறிவித்தார். கனடிய மண்ணில் கனடிய குடிமகனை வேறொரு நாடு கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை சீர்குலைக்கும் செயல் எனவும், இந்த விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அதே நாளில் கனடாவில் இருந்த இந்திய உளவுத்துறை ‘ரா’ அமைப்பின் அதிகாரியை வெளியேற்றியது கனடா அரசு. பதிலுக்கு கனடிய தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்திய அரசு. கனடாவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினரின் சிக்கல்களை திசைதிருப்பும் பொய் குற்றச்சாட்டு என்றது இந்திய அரசு.


நிஜ்ஜார் படுகொலை செய்தி அடங்குவதற்குள் செப். 2023ல், கனடாவில் செயல்பட்டு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தூல் சிங் என்பவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் என்.ஐ.ஏவால் தேடப்படும் நபராக இருந்தவர் சுக்தூல் சிங்.


இந்த ஆண்டு மே மாதம் நிஜ்ஜார் கொலை வழக்கில் 4 இந்தியர்களை கைது செய்தது கனடிய காவல்துறை. மேலும் இந்த வழக்கில் உள்ள இந்திய அரசின் தொடர்பு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது.


அக்.14ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கனடிய தேசிய காவல்துறையின் கமிஷ்னர் மைக் துமே, இந்த வழக்கில் இந்திய அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அறிவித்தார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சட்டவிரோதமாக கனடிய குடிமக்களை கண்காக்கவும், தகவல்களை திரட்டவும் பெரிய நெட்வொர்க்கை பயன்படுத்தி வருவதாகவும், அதன் மூலம் கனடாவில் தீவிர கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.


சஞ்சய் வர்மா


இந்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்ளிட்ட 6 உயர் அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறும்படி கனடிய அரசு உத்தரவிட்டது. இவர்கள் நிஜ்ஜார் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள், இருப்பினும் விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைக்காததால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இந்திய தூதர் வர்மா உள்ளிட்டோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்ததுடன், பதிலுக்கு இந்தியாவில் இருந்த 6 கனடிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.


அக்.14ஆம் தேதி காலையே, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தனது முதல் பக்கத்தில் நிஜ்ஜார் கொலை குறித்து புதிய தகவலை வெளியிட்டது. (இணைப்பு: வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை)


அதாவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கனடிய பாதுகாப்பு ஆலோசகர் நடாலி உள்ளிட்ட அதிகாரிகள் சிங்கப்பூரில் அக்.12ஆம் தேதி ரகசியமாக சந்தித்தனர். அச்சந்திப்பின் போதே, நிஜ்ஜார் கொலையில் இந்தியா அரசுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரத்தை வழங்கியதாகவும், குறிப்பாக குஜராத் சிறையில் உள்ள மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னாய் குழுவினர் தான் இந்திய அரசு சார்பில் கனடாவில் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் நேரடியாக ஈடுபடுவதும், சீக்கிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி ஒப்புதலின் பேரில், ’ரா’ அமைப்பின் அதிகாரி ஒருவரால் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை இந்தியா ஏற்காது, விசாரணைக்கு ஒத்துழைக்காது என்று தோவல் மறுத்த காரணத்தினால் தான் அக்.14ஆம் தேதி கனடிய காவல்துறை பொதுவெளிக்கு குற்றச்சாட்டை கொண்டு வந்துள்ளது.


’கனடாவில் வாழும் இந்தியர்களையும் தொழில் நிறுவனங்களையும் மிரட்டி, காலிஸ்தான் ஆட்கள் குறித்த தகவல்களை திரட்டி தரும் வேலைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை ஈடுபடுத்தியுள்ளனர். அவ்வாறு இந்திய அரசுக்கான திரட்டப்படும் தகவல்களை கொண்டு தெற்காசிய சமூகங்களை சேர்ந்தவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்’ இந்த குற்றச்சாட்டை அறிக்கையாக வெளியிட்டது கனடிய காவல்துறை.


’சட்டத்தின் வழி ஆட்சி நடக்கும் கனடாவில், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. கனடாவின் இறையாண்மையை சீர்குலைப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டியுள்ளார் ட்ரூடோ.


காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு விளம்பரம்

நிஜ்ஜார் விவகாரத்தில் கனடா - இந்தியா உறவை அதளபாதாளத்தில் சென்ற அதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் அரங்கேறியது.


காலிஸ்தான் தனிநாடு கேட்டு போராடும் ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டீஸ்’ (SFJ) என்ற அமைப்பின் நிறுவனராக அமெரிக்காவில் செயல்பட்டு வருபவர் குர்பட்வண்ட் சிங் பன்னுன். நிஜ்ஜாரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். அமெரிக்க & கனடிய இரட்டை குடியுரிமையை கொண்டிருப்பவர். SFJ அமைப்பு ஊபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இந்திய அரசால் ‘தீவிரவாதி’ என்று அறிவிக்கப்பட்டவர் பன்னுன்.


குர்பட்வண்ட் சிங் பன்னுன்

பன்னுனை கொலை செய்யும் நோக்கத்தில் இந்தியாவின் ’ரா’ அமைப்பின் அதிகாரி விகாஷ் யாதவ் மூலம் திட்டமிடுகிறார். அதற்காக சர்வதேச போதை மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ள நிகில் குப்தா என்பவரை அணுகுகிறார் விகாஷ். இதனையடுத்து கூலிக்கு கொலை செய்யும் அமெரிக்கரை சந்திக்கிறார் குப்தா. விகாஷின் ஒப்புதலோடு பன்னுனை கொலை செய்வதற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பேரம் பேசப்படுகிறது. கொலை செய்வதற்கு கூலியாக விகாஷ் அனுப்பிய முதல் தவணை 15 ஆயிரம் டாலர்களை கொடுக்க குப்தா சென்றபோது அமரிக்க அதிகாரிகளால் சுற்றிவளைத்து கைது செய்யப்படுகிறார். அப்போது தான் கூலிக்கு கொலை செய்வதற்கு குப்தா அணுகிய நபர் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது அவருக்கு தெரியவருகிறது.


FBI தேடும் விகாஷ் யாதவ்


இந்திய அரசின் அதிகாரி விகாஷ் யாதவ் வழிகாட்டுதலில் இந்திய குடிமகன் நிகில் குப்தா கொலை சதியில் ஈடுபட்டார் என்று அமெரிக்க நீதித்துறை இப்போது வழக்கு தொடர்ந்துள்ளது.


கனடாவுக்கு கோப முகத்தை காட்டிய மோடி அரசு, அமெரிக்காவுக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கும் என்று நம்பினால், அது தான் இல்லை...


விகாஷ் யாதவ் தற்போது இந்திய அரசின் பணியில் இல்லை, பன்னுன் கொலை முயற்சி தொடர்பான அவரது செயல்பாடுகள் தனிப்பட்ட ரீதியில் அமைந்தவை, அதற்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுக்கே நேரில் சென்று விளக்கம் அளித்தனர்.


FBI வெளியிட்ட விகாஷ் யாதவ் படம்


இதற்கு பிறகு தான் விகாஷ் யாதவின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது எஃப்.பி.ஐ. யாதவ் மற்றும் குப்தா இடையிலான போன் உரையாடல்கள், மெசேஜ்கள் அனைத்தும் ஆதாரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவரது இறந்த உடலின் படத்தை யாதவ் குப்தாவுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.


அமெரிக்க நடவடிக்கைக்கு பிறகு, டெல்லி பகுதியில் ஒரு வணிகரை கடத்தி, பணம் பறிக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் விகாஷ்.


நிஜ்ஜார் விவகாரத்தில் கனடிய அதிகாரிகளை வெளியேற்றிய இந்திய அரசு தான், பன்னுன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கே இந்திய அதிகாரிகளை அனுப்பி விளக்கம் கொடுத்து வந்துள்ளது.


இந்த விவகாரங்களால் மீண்டும் கொலை குற்றச்சாட்டுகளின் மையத்தில் வந்துள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


உலக அரங்கில் இந்தியா அவமானத்தை சந்தித்துக்கொண்டு இருப்பது தெளிவாகியுள்ளது.


மோடியும் அமித்ஷாவும் என்ன செய்யப்போகிறார்கள்?


சொராபுதீன் போலி என்கவுன் ட்டர் வழக்கில் இந்திய நீதிமன்றங்களிலிருந்து தப்பித்த அமித்ஷா, கனடா நீதிமன்றங்களிலருந்து தப்பிக்க முடியுமா?


அதையும் பார்க்கலாம்.


- வன்னி அரசு

18.11.2024


நன்றி: நக்கீரன்

(23.11.2024 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்தக் கட்டுரை ’அமித்ஷாவுக்கு எதிராக கனடா சுமத்தும் கொலை குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் வெளியானது)