21 December 2024
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தூய இருதய மேல்நிலைப் பள்ளி, 1859ஆம் ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது 165 ஆண்டுகளை கடந்து அப்பகுதியில் தொடர்ந்து கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு அப்பள்ளியை முன்வைத்து மிகப்பெரிய சமூக பதற்றத்தையும், கலவரத்தையும் நடத்தியது சங்க பரிவார கும்பல். அதனை தலைமையேற்று நடத்தியது பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு.அண்ணாமலை.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. பாஜக வன்முறை கும்பலின் சதித்திட்டம் நீதிமன்றத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஒரு அப்பாவி பெண் குழந்தையின் மரணத்தை பயன்படுத்தி அரசியல் ஓநாய்களும் - நீதித்துறை கருப்பு ஆடும் கலவரத்தை நடத்தினார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.
கடந்த 15.01.22 அன்று மாலை பள்ளி மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது.
அடுத்த நாள் 16.01.22 காலை திருக்காட்டுப்பள்ளி காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன், குறிப்பிட்ட மாணவியை சந்தித்து விசாரணை நடத்தினார்.
அந்த மாணவி தான் லாவண்யா (வயது 17) 12ஆம் வகுப்பு மாணவி. அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்தவர். தந்தை மற்றும் சித்தியால் 8ஆம் வகுப்பிலேயே தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டு, படித்து வந்துள்ளார்.
நாம் அடுத்தடுத்து செல்வதற்கு முன்னர், இந்த வழக்கின் காலவரிசையை (Timeline) நாம் கவனித்தால் தான் இதற்கு பின்னுள்ள சதியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
9.1.22 - தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் தூய மைக்கேல் மாணவியர் விடுதியில் தங்கியிருந்த மாணவி லாவண்யா, மாலை 5 மணியளவில் விடுதி வழிபாட்டு அறையில் இருந்த பூச்சி மருந்தை உட்கொள்கிறார். வாந்தி வந்ததால், விடுதி காப்பாளர் அருட் சகோதரி சகாய மேரி மாணவியை ஓய்வெடுக்க சொல்கிறார். பின்னர் அருகிலிருந்த செவிலியர் ஊசியை செலுத்தி, மாத்திரைகள் வழங்குகிறார்
10.1.22 - விடுதியின் தகவலையடுத்து லாவண்யாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்
11.1.22 - தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால், குளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
12 மற்றும் 13.1.22 - திருமானூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
15.1.22 - அரியலூரில் அமைந்துள்ள செந்தில்நாதன் கிளினிக்கின் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்படும் வரை தான் பூச்சி மருந்தை உட்கொண்டதை மாணவி வீட்டிலோ, மருத்துவமனையிலோ யாரிடமும் தெரிவிக்கவில்லை. தஞ்சை மருத்துவமனியில் தான் மருத்துவர்கள் கண்டுபிடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
16.1.22 - காலை 9.30 மணிக்கு காவல் அதிகாரி நெடுஞ்செழியனிடம் அளித்த வாக்குமூலத்தை, மாலை 4.10 மணிக்கு தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடமும் அளிக்கிறார் மாணவி லாவண்யா.
தன்னை விடுதி வார்டன் அருட்சகோதரி சகாய மேரி என்பவர் அதிகப்படியான வேலை வாங்கியதாகவும், விடுதி தோட்டத்தை பராமரிப்பது, தண்ணீரை கொண்டு விடுதி வளாகத்தை சுத்தம் செய்வது, விடுதியின் கணக்கு வழக்குகளை பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தியதால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், இதனை யாரிடமும் சொல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாக்குமூலங்களும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. மாணவி கொடுத்த வாக்குமூலமே புகாராக பெறப்பட்டு 16ஆம் தேதி அன்றே எப்.ஐ.ஆர் பதியப்படுகிறது.
படங்கள்: தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை
17.1.22 - காவல்துறையினர் விடுதியில் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட பூச்சுக்கொல்லி மருந்து குடுவையை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்துகின்றனர்.
18.1.22 - மாணவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் 62 வயதான விடுதி காப்பாளர் அருட்சகோதரி
சகாய மேரி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுகிறார்.
கடந்த 19.1.22 - தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகும், மாணவி லாவண்யா மரணமடைகிறார்.
மாணவி லாவண்யா பூச்சி மருந்து குடித்ததிலிருந்து இறப்பு வரை நடைபெற்ற நிகழ்வுகளையும் நடவடிக்கைகளையும் கவனித்தால், மிகச்சரியான அதேவேளையில் நியாயமான முறையில் காவல்துறையும், ஆட்சி நிர்வாகமும் செயல்பட்டு வந்ததை அறியலாம்.
தனது மரணத்தை எப்படி பிணந்தின்னி பயங்கரவாத கூட்டமொன்று இந்த நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் என்பதையும், நாட்டை பிளவுபடுத்தி கூறுபோடும் சதித்திட்டத்தில் எப்படி மனு நீதிபதி ஒருவரும் ஈடுபடுவார் என்பதையும் அறியாமல் மரணித்து போனாள் அந்த குழந்தை லாவண்யா.
கடந்த 20.11.22 - மரண படுக்கையில் இருக்கும் மாணவி லாவண்யா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கிறது.
அதே நாள் மதியம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இந்த நபர், 45 விநாடிகள் உள்ள குறிப்பிட்ட வீடியோவில் பேசுவது 17 வயதான மைனர் பெண் என்பதையும், அவர் இறந்துவிட்டார் என்பதையும் பொருட்படுத்தாமல், சட்டவிரோதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார்.
மாணவி லாவண்யாவை மதம் மாற சொல்லி பள்ளி கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிடுகிறார்.
அதாவது பெற்றோர் முன்பு காவல்துறை அதிகாரி மற்றும் நீதித்துறை நடுவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் இல்லாத மதமாற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரி மீதும் நடவடிக்கை வேண்டும் எனவும் பதிவிட்டார் அண்ணாமலை.
மருத்துவமனை கட்டிலில் மூச்சிறைக்கும் மாணவி லாவண்யாவிடம் கேள்விகள் கேட்டு பதிவு செய்தவன், அரியலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் முத்துவேல். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிள்ளையை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றலாமா என்று தனது பெற்றோரிடம் விடுதி காப்பாளர் கேட்டதாக சொல்கிறார் லாவண்யா. அதனால் தான் உன்னை வேலை வாங்கினார்களா? என்ற முத்துவேலின் கேள்விக்கு ‘இருக்கலாம்’ என்று பதிலளிக்கிறார் லாவண்யா.
இந்த வீடியோவை இந்தியா முழுக்க தூக்கி சென்றது சங்க பரிவாரின் இணைய கூலிக் கூட்டம். #JusticeForLavanya என்று தெருவெங்கும் முழக்கமிட்டு திரிந்தனர். அதுவரை இல்லாத மதமாற்ற குற்றச்சாட்டு நாடெங்கும் பரப்பப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிராகவும், அவர்களது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை, வெறுப்பு பேச்சுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
லாவண்யா வழக்கு கடந்து வந்த பாதையை ஆராய்வதன் மூலம், தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசை நிலைகுலைய வைக்க சங்க பரிவார் கும்பல் முன்னெடுத்த சதியை நாம் அறியலாம். இந்த சதியில் நீதித்துறையின் பங்கு எவ்வாறானது என்பதும் அம்பலமாகிறது.
மாணவியின் தந்தை முருகானந்தம் சிபிசிஐடி அல்லது ஏதேனும் தனி விசாரணை அமைப்புக்கு வழக்கை மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை விசாரித்தது சுவாமிநாதன்.
சனவரி 21, 22, 24, 28, 31 என அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு அமர்வுகளில் இந்த வழக்கை விசாரித்த சுவாமிநாதன், விசாரணையின் போக்கில் தனி கவனம் செலுத்தி, பாஜக கும்பல் முன்வைத்த மதமாற்ற குற்றச்சாட்டை நோக்கி வழக்கை திசைதிருப்பினார் என்று தான் சொல்ல வேண்டும்.
மாணவியிடம் மதமாற்றம் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ எடுத்துவிட்டு, அவர் மரணமடையும் வரை காத்திருந்து பின்னர் வெளியிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் செயலாளர் முத்துவேலை பாதுகாக்கும் விதமாக, ’வீடியோவில் சொல்லப்பட்ட விடயத்தை தான் விசாரிக்க வேண்டும், வீடியோ எடுத்தவரை காவல்துறை துன்புறுத்த கூடாது’ என்று சன. 22 உத்தரவிடுகிறார் சுவாமிநாதன். இதன் மூலம் தொடக்க நிலையிலேயே காவல்துறை விசாரணைக்கு சுவாமிநாதனால் முட்டுக்கட்டை போடப்பட்டு, முத்துவேல் தப்பிக்க விடப்பட்டான்.
’மாணவி படித்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவிகளை விசாரித்ததில் மதமாற்றம் குறித்து எந்த புகாரும் வரவில்லை’ என்று சன. 24ல் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியையும், மதமாற்றத்தில் குறிப்பிட்ட பள்ளி ஈடுபடவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் முன்வைத்து, தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக சன 28ஆம் தேதி நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரினார் முருகானந்தம்.
நாம் மேலே பட்டியலிட்ட அரசின் துரித நடவடிக்கைகளை முன்வைத்து வாதிட்டார் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர். மேலும் லாவண்யாவின் பெற்றோர், விஎச்பி முத்துவேல் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதையும் தெரிவித்தார்.
குறிப்பாக, லாவண்யாவின் தாய் இறந்த பிறகு, அவரது தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். வீட்டில் சித்தியின் கொடுமை தாங்கமுடியாமல் தான், லாவண்யா இப்பள்ளியில் விடுதி மாணவியாக சேர்ந்தார் என்பதையும், விடுமுறை நாட்களில் கூட லாவண்யா வீட்டுக்கு செல்லாமல், விடுதியிலேயே தங்கினார் என்றும் சக மாணவிகள் அளித்த வாக்குமூலத்தை எடுத்துரைத்தார் அரசு வழக்கறிஞர்.
வழக்கு விசாரணையின் ஒவ்வொரு விடயத்திலும் நீதிமன்றம் தலையிட்டு, விசாரணை இந்த திசையில் தான் செல்ல வேண்டும் என்று சொல்வது சரியல்ல. காவல்துறை விசாரணை என்பது அரசின் அதிகாரத்துக்கு கீழ் வருவது, அதில் நீதிமன்றம் தலையிடகூடாது என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
பள்ளியின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர். மாணவியின் குடும்பத்தினர் குறித்து தரவுகளை முன்வைத்தார். மாணவி லாவண்யா தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தைகளுக்கான ஹெல்ப்லைனுக்கு புகார் வந்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிவித்தார். வீட்டில் சித்தியின் கொடுமை குறித்து தனது நண்பர்கள் மற்றும் விடுதி தோழிகளிடம் லாவண்யா சொல்லியவற்றையும் முன்வைத்து, இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று வாதாடினார்.
எல்லாவற்றையும் கேட்டவிட்டு, சன 31ஆம் தேதி சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டார் சுவாமிநாதன். வெறுமனே உத்தவிட்டிருந்தால் நாம் கடந்துவிடலாம். ஆனால், அந்த உத்தரவில் அவரது நஞ்சு எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
’மதமாற்ற குற்றச்சாட்டுக்கு தஞ்சை எஸ்.பி. ஏன் மின்சார வயரை தொட்டுவிட்டது போல எதிர்வினையாற்றினார்? என்று கேள்வியெழுப்பும் சுவாமிநாதன், கிறிஸ்தவர்களின் திருவிவிலியத்தில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே மதமாற்றுவது தான் என்பது நிறுவ முயற்சித்தார்.
அதற்கடுத்து மதமாற்ற குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுவாமிநாதன் மேற்கோள் காட்டியது நடிகர் நவாசுதீன் சித்திகியின் ‘Serious Men’ பட காட்சியையும், இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் கதையையும் தான்.
’எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளி அமைந்துள்ள கிராமம் மைக்கேல்பட்டி என அழைக்கப்படுகிறது. அது அந்த கிராமத்தின் உண்மையான பெயராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் உண்மை பெயரை யாரேனும் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்’ என்று மனுதாரருக்கு ஆதரவாக வாதாடினார் நீதிபதி சுவாமிநாதன்.
**
தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார் அருட்சகோதரி சகாயமேரி. இந்த வழக்கை நீதிபதி இளங்கோவன் விசாரித்து வந்தார்.
வழக்கு விசாரணையின் போதே, லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
வழக்கில் இறுதி தீர்ப்பு கடந்த திச.16ஆம் தேதி வெளியாகியுள்ளது. மொத்தம் 31 பக்க தீர்ப்பில் பாஜக கும்பல் கட்டமைத்த வெறுப்பு பரப்புரை சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம் செய்யப்பட்ட தீர்ப்பின் முக்கிய பகுதிகளை பார்க்கலாம்.
பக்கம் 10 பத்தி 17. பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் இறப்பு சமூக குற்றமாக மாற்றப்பட்டது
பத்தி 18. ஆவணங்களை ஆராயும்போது, கட்டாய மதமாற்றம் தான் காரணம் என்பதாக இந்த சம்பவத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவருகிறது.
ஆனால் மதமாற்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதை, சிபிஐ விசாரணை அதிகாரி நேர்மையான முறையில் திறம்பட விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். வழக்கு விசாரணையின் போதே இதை அரசு சிறப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தி இருந்தார்.
பொறுப்புள்ள நபர்கள் இத்தகைய செயல்பாடுகளை தவிர்த்திருக்க வேண்டும். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்க கூடாது. ஆனால் விளைந்த பாதிப்பை இப்போது சரி செய்திட இயலாது.
பக்கம் 27 பத்தி 29. சிபிஐ விசாரணை அதிகாரியிடம் இறந்த மாணவியின் வீட்டின் நிலை குறித்து சாட்சிகள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவற்றை பார்க்கும்போது தனது தற்கொலைக்கு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு எதிராக மரண வாக்குமூலத்தில் மாணவி அளித்த காரணங்கள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பது தெரிய வருகிறது.
பத்தி 30. விசாரணை அதிகாரி பதிவு செய்துள்ள வாக்குமூலங்கள், மாணவியின் மரண வாக்குமூலத்துக்கு முரணாக இருப்பதை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பு வாதமாக முன்வைக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து மாணவியின் மரண வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல என்று இந்த நீதிமன்றம் முடிவெடுக்க சி.ஆர்.பி.சி.482ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால் மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமானவையா என்பதை விசாரணை நீதிமன்றம் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் நீதியரசர் இளங்கோவன்.
ஐபிசி 305 - 18 வயதுக்குட்பட்டவரை தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ பிரிவு 75 மைனர்களுக்கு துண்புறுத்தல் ஆகிய 2 பிரிவுகளில் அருட்சகோதரி சகாயமேரி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
வழக்கின் சாராம்சத்தை ஆராயும்போது, இதில் போக்சோ சட்டப்பிரிவு 75 கீழ் வழக்கு பதிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர்த்துகிறது. இதனை குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது, விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்க பரிவார் கும்பல் தமிழ்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியை நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லும் பதில் என்ன? சமூக பதற்றத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பதற்றத்தையும் அவர்களின் உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வண்ணம் செயல்பட்ட
அண்ணாமலையின் வன்முறை கும்பலை காவல்துறை சிறைப்படுத்த வேண்டும்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
21.12.2024
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment