04 December 2024

கொலைக் குற்றச்சாட்டில் அமித்ஷா - கனடா பிடியில் மோடியும் அமித்ஷாவும்!

’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்று ஊர் பக்கம் சொல்வது போல, அமித்ஷாவும் கொலை குற்றச்சாட்டும் பிரிக்கவே முடியாது என்றாகிவிட்டது.


பிரதமர் மோடியின் வலதுகரமும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மீது சமீபத்தில் கனடிய அரசு வைத்துள்ள குற்றச்சாட்டை பார்க்கும்போது அப்படித்தான் உள்ளது.



இதுவரை அமித்ஷா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பார்ப்போம்...


குஜராத் முதல்வராக மோடி (இப்போதும் அப்படி தான்!?) இருந்தபோது போலீஸ் துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. 2005ஆம் ஆண்டில் ரவுடி சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர்பீ, கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோரை கடத்தி குஜராத் போலீஸ் கொன்றுவிட்டது. இதற்கு காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று வழக்கு பதிந்து சிபிஐ விசாரித்து வந்தது.


சோராபுதீன் - கவுசர்பீ

2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி ஆட்சிக்கு வந்ததும், பாஜக தலைவரானார் அமித்ஷா. அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்த மூன்று கொலை வழக்குகளிலிருந்தும் அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.


இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா டிசம்பர் 1ஆம் தேதி மர்மமான முறையில் நாக்பூரில் இறந்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய நிலையில், 2018ஆம் ஆண்டு லோயா மரணத்தில் தனி விசாரணை தேவை இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு. இந்த தீர்ப்பளித்த மூவரில் ஒருவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது. சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் மீதமிருந்த 21 காவல்துறையினரை 2018ஆம் ஆண்டு விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்.


நீதியரசர் லோயா


2002ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையின் போது, ‘குல்பர்க் சொசைட்டி’எனும் குடியிருப்பு வளாகத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இக்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஜாஃப்ரியின் மனைவி கொடுத்த புகாரில் மோடி மற்றும் அமித்ஷா மீது குற்றஞ்சாட்டிய நிலையில், மோடி மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது. குல்பர்க் சொசைடி படுகொலை வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டது சரியே என்றும் இது திட்டமிடப்பட்ட பொய் வழக்கு என்றும் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.


சாகியா ஜாஃப்ரி


இஷ்ராத் ஜெஹான்


2002 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக, 2004ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொல்வதற்காக வந்த லஷ்கர் தீவிரவாதிகள் என்று இஷ்ராத் ஜெஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை, அதற்கு போதிய ஆதாரங்களும் இல்லை என்று 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது சிபிஐ. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 காவல்துறை அதிகாரிகளையும் 2021ஆம் ஆண்டு விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்.


ஆக, இதுவரை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்திய நீதிமன்றங்களால் சட்டப்படி விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஆனால், இப்போது அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது கனடிய அரசு. கனடாவின் சர்ரே நகரத்தில் அமைந்துள்ள குரு நானக் குருத்வாராவின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார். அந்த குருத்வாரா வாசலில் ஜூன் 18, 2023ல் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 


யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்?


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நிஜ்ஜார் கடந்த 1996ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி, “இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டேன்”என்ற வாதத்தை முன்வைத்து கனடாவில் தஞ்சம் அடைந்தார்.


நிஜ்ஜார் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்குறிப்பில், தொடக்கத்தில் பாபர் கல்சா இண்டர்நேஷ்னல் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டவர், பாகிஸ்தானில் ஆயுத பயிற்சியும் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பின்னாட்களில், ’காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய அரசின் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு நிஜ்ஜாரை ’ஊபா’சட்டத்தின் கீழ் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது இந்திய ஒன்றிய அரசு. சில கூலிப்படையினரால் ஆபத்து உள்ளது என்று நிஜ்ஜாருக்கு கனடிய உளவுத்துறை முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஹர்தீப்சிங் நிஜ்ஜார்

கடந்த செப். 18 2023ல் கனடிய பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்ட்டுகளுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறிவித்தார். கனடிய மண்ணில் கனடிய குடிமகனை வேறொரு நாடு கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை சீர்குலைக்கும் செயல் எனவும், இந்த விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அதே நாளில் கனடாவில் இருந்த இந்திய உளவுத்துறை ‘ரா’ அமைப்பின் அதிகாரியை வெளியேற்றியது கனடா அரசு. பதிலுக்கு கனடிய தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்திய அரசு. கனடாவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினரின் சிக்கல்களை திசைதிருப்பும் பொய் குற்றச்சாட்டு என்றது இந்திய அரசு.


நிஜ்ஜார் படுகொலை செய்தி அடங்குவதற்குள் செப். 2023ல், கனடாவில் செயல்பட்டு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தூல் சிங் என்பவரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் என்.ஐ.ஏவால் தேடப்படும் நபராக இருந்தவர் சுக்தூல் சிங்.


இந்த ஆண்டு மே மாதம் நிஜ்ஜார் கொலை வழக்கில் 4 இந்தியர்களை கைது செய்தது கனடிய காவல்துறை. மேலும் இந்த வழக்கில் உள்ள இந்திய அரசின் தொடர்பு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது.


அக்.14ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கனடிய தேசிய காவல்துறையின் கமிஷ்னர் மைக் துமே, இந்த வழக்கில் இந்திய அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அறிவித்தார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சட்டவிரோதமாக கனடிய குடிமக்களை கண்காக்கவும், தகவல்களை திரட்டவும் பெரிய நெட்வொர்க்கை பயன்படுத்தி வருவதாகவும், அதன் மூலம் கனடாவில் தீவிர கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.


சஞ்சய் வர்மா


இந்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்ளிட்ட 6 உயர் அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறும்படி கனடிய அரசு உத்தரவிட்டது. இவர்கள் நிஜ்ஜார் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள், இருப்பினும் விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைக்காததால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இந்திய தூதர் வர்மா உள்ளிட்டோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்ததுடன், பதிலுக்கு இந்தியாவில் இருந்த 6 கனடிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.


அக்.14ஆம் தேதி காலையே, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தனது முதல் பக்கத்தில் நிஜ்ஜார் கொலை குறித்து புதிய தகவலை வெளியிட்டது. (இணைப்பு: வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை)


அதாவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கனடிய பாதுகாப்பு ஆலோசகர் நடாலி உள்ளிட்ட அதிகாரிகள் சிங்கப்பூரில் அக்.12ஆம் தேதி ரகசியமாக சந்தித்தனர். அச்சந்திப்பின் போதே, நிஜ்ஜார் கொலையில் இந்தியா அரசுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரத்தை வழங்கியதாகவும், குறிப்பாக குஜராத் சிறையில் உள்ள மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னாய் குழுவினர் தான் இந்திய அரசு சார்பில் கனடாவில் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் நேரடியாக ஈடுபடுவதும், சீக்கிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி ஒப்புதலின் பேரில், ’ரா’ அமைப்பின் அதிகாரி ஒருவரால் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை இந்தியா ஏற்காது, விசாரணைக்கு ஒத்துழைக்காது என்று தோவல் மறுத்த காரணத்தினால் தான் அக்.14ஆம் தேதி கனடிய காவல்துறை பொதுவெளிக்கு குற்றச்சாட்டை கொண்டு வந்துள்ளது.


’கனடாவில் வாழும் இந்தியர்களையும் தொழில் நிறுவனங்களையும் மிரட்டி, காலிஸ்தான் ஆட்கள் குறித்த தகவல்களை திரட்டி தரும் வேலைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை ஈடுபடுத்தியுள்ளனர். அவ்வாறு இந்திய அரசுக்கான திரட்டப்படும் தகவல்களை கொண்டு தெற்காசிய சமூகங்களை சேர்ந்தவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்’ இந்த குற்றச்சாட்டை அறிக்கையாக வெளியிட்டது கனடிய காவல்துறை.


’சட்டத்தின் வழி ஆட்சி நடக்கும் கனடாவில், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. கனடாவின் இறையாண்மையை சீர்குலைப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டியுள்ளார் ட்ரூடோ.


காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு விளம்பரம்

நிஜ்ஜார் விவகாரத்தில் கனடா - இந்தியா உறவை அதளபாதாளத்தில் சென்ற அதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் அரங்கேறியது.


காலிஸ்தான் தனிநாடு கேட்டு போராடும் ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டீஸ்’ (SFJ) என்ற அமைப்பின் நிறுவனராக அமெரிக்காவில் செயல்பட்டு வருபவர் குர்பட்வண்ட் சிங் பன்னுன். நிஜ்ஜாரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். அமெரிக்க & கனடிய இரட்டை குடியுரிமையை கொண்டிருப்பவர். SFJ அமைப்பு ஊபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இந்திய அரசால் ‘தீவிரவாதி’ என்று அறிவிக்கப்பட்டவர் பன்னுன்.


குர்பட்வண்ட் சிங் பன்னுன்

பன்னுனை கொலை செய்யும் நோக்கத்தில் இந்தியாவின் ’ரா’ அமைப்பின் அதிகாரி விகாஷ் யாதவ் மூலம் திட்டமிடுகிறார். அதற்காக சர்வதேச போதை மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ள நிகில் குப்தா என்பவரை அணுகுகிறார் விகாஷ். இதனையடுத்து கூலிக்கு கொலை செய்யும் அமெரிக்கரை சந்திக்கிறார் குப்தா. விகாஷின் ஒப்புதலோடு பன்னுனை கொலை செய்வதற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பேரம் பேசப்படுகிறது. கொலை செய்வதற்கு கூலியாக விகாஷ் அனுப்பிய முதல் தவணை 15 ஆயிரம் டாலர்களை கொடுக்க குப்தா சென்றபோது அமரிக்க அதிகாரிகளால் சுற்றிவளைத்து கைது செய்யப்படுகிறார். அப்போது தான் கூலிக்கு கொலை செய்வதற்கு குப்தா அணுகிய நபர் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது அவருக்கு தெரியவருகிறது.


FBI தேடும் விகாஷ் யாதவ்


இந்திய அரசின் அதிகாரி விகாஷ் யாதவ் வழிகாட்டுதலில் இந்திய குடிமகன் நிகில் குப்தா கொலை சதியில் ஈடுபட்டார் என்று அமெரிக்க நீதித்துறை இப்போது வழக்கு தொடர்ந்துள்ளது.


கனடாவுக்கு கோப முகத்தை காட்டிய மோடி அரசு, அமெரிக்காவுக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கும் என்று நம்பினால், அது தான் இல்லை...


விகாஷ் யாதவ் தற்போது இந்திய அரசின் பணியில் இல்லை, பன்னுன் கொலை முயற்சி தொடர்பான அவரது செயல்பாடுகள் தனிப்பட்ட ரீதியில் அமைந்தவை, அதற்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுக்கே நேரில் சென்று விளக்கம் அளித்தனர்.


FBI வெளியிட்ட விகாஷ் யாதவ் படம்


இதற்கு பிறகு தான் விகாஷ் யாதவின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது எஃப்.பி.ஐ. யாதவ் மற்றும் குப்தா இடையிலான போன் உரையாடல்கள், மெசேஜ்கள் அனைத்தும் ஆதாரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவரது இறந்த உடலின் படத்தை யாதவ் குப்தாவுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.


அமெரிக்க நடவடிக்கைக்கு பிறகு, டெல்லி பகுதியில் ஒரு வணிகரை கடத்தி, பணம் பறிக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் விகாஷ்.


நிஜ்ஜார் விவகாரத்தில் கனடிய அதிகாரிகளை வெளியேற்றிய இந்திய அரசு தான், பன்னுன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கே இந்திய அதிகாரிகளை அனுப்பி விளக்கம் கொடுத்து வந்துள்ளது.


இந்த விவகாரங்களால் மீண்டும் கொலை குற்றச்சாட்டுகளின் மையத்தில் வந்துள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


உலக அரங்கில் இந்தியா அவமானத்தை சந்தித்துக்கொண்டு இருப்பது தெளிவாகியுள்ளது.


மோடியும் அமித்ஷாவும் என்ன செய்யப்போகிறார்கள்?


சொராபுதீன் போலி என்கவுன் ட்டர் வழக்கில் இந்திய நீதிமன்றங்களிலிருந்து தப்பித்த அமித்ஷா, கனடா நீதிமன்றங்களிலருந்து தப்பிக்க முடியுமா?


அதையும் பார்க்கலாம்.


- வன்னி அரசு

18.11.2024


நன்றி: நக்கீரன்

(23.11.2024 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்தக் கட்டுரை ’அமித்ஷாவுக்கு எதிராக கனடா சுமத்தும் கொலை குற்றச்சாட்டு’ என்ற தலைப்பில் வெளியானது)


0 comments:

Post a Comment