22 May 2024

மோடி மனித பிறவி இல்லையா? மனுசனே இல்லையா?

'சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலில் புல்டோசரை வைத்து இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் எங்கு இயக்கக் கூடாது என்று அவர்கள் யோகி ஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும்' - உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடி பேச்சு




'தேர்தலுக்குப் பிறகு, மோடி ஜி மூன்றாவது முறையாக பிரதமராக வரட்டும் ... அடுத்த ஆறு மாதங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.. அதற்கு தைரியம் தேவை, அப்போதுதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய முடியும்." - மகராஷ்டிராவின் பால்கர் பேரணியில் யோகி ஆதித்யநாத் பேச்சு.


2024 நாடாளுமன்ற தேர்தலில் மத உணர்வைக் கூர் தீட்டி விடுவதில் பாஜக மூத்த தலைவர்கள் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறாத பல கருத்துக்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்பது முழுக்க முழுக்க பொய்யின் மீதே கட்டப்பட்டுள்ளது.


மோடி கும்பல் மற்றும் பாஜகவின் இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியாவில் தற்போது மோடி அலை என்பது முற்றிலும் இல்லாமல் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

 

இன்னொன்று, குறைந்தபட்ச வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளவாவது இந்து பெரும்பான்மைவாதத்தைக் கையில் எடுத்து வாக்கு சேகரிக்கலாம் என்ற தந்திரம் தான். 


பாஜகவின் முதல் பொய்:


பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என்று பாஜக பிரச்சாரம் செய்கிறது. உண்மையில், 441 தொகுதிகளில் மட்டுமே பாஜக இந்தியா முழுமைக்கும் போட்டியிடுகிறது. தென்னிந்தியாவில் பாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத போது பாஜகவால் எப்படி 400 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதைக் கொஞ்சம் விரிவாக அலசி ஆராய்ந்தால் பாஜக உண்மையிலேயே 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா என்ற கருத்துருவாக்கத்திற்கு விடை கிடைக்கும்.




அதாவது, கேரளாவில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கூட, 1999 மற்றும் 2014 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை அந்த மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கை சரித்துவிட்டது.


2023 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக வீழ்ச்சி கர்நாடகாவில் வீழ்ச்சி அடைந்துள்ளது ஒரு பக்கம் இருக்க பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததால் பாஜக கூட்டணி ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைத்த பாஜக கரை ஏறுவதே கடினம் என்பதே களநிலவரம். காரணம், முந்தைய காலங்களில், மோடியை பயங்கரவாதி என்று கூறிய சந்திரபாபு நாயுடு தற்போது மோடியுடன் அமைத்துள்ள கூட்டணி பொறுந்தாத கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப்பில் மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலமாக டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஹரியானாவில் மூன்று சுயேச்சைகள் பாஜகவுக்கான ஆதரவைத் திரும்பப்பெற்றதால் ஹரியானாவில் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. மேற்குவங்கத்தைச் சொல்லவே வேண்டாம், மம்தா பானர்ஜி மோடி அலையை குடுவைக்குள் அடைத்துவைத்துவிட்டார்.


ஏழு மலை, ஏழு கடல் தாண்டி மறைத்துவைக்கப்பட்டது போலத்தான் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மேற்கு வங்கத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்ததால் உத்தவ் தாக்கரே மீது அனுதாப அலை உள்ளது. அதோடு, சரத்பவார், காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால் பாஜக வெற்றி எளிதல்ல.



2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணித்தால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 129 இடங்களில் பாஜகவுக்கு வெறும் 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் போது பாஜகவால் எப்படி மொத்தம் போட்டியிடும் 441 இடங்களில் 400 இடங்களைக் கைப்பற்ற முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாஜக சொல்வது பொய் பித்தலாட்டம் என்பது புரிந்துவிடும். இந்த அரசியல் கணக்குகளைக் கூட ஆய்வு செய்யாமல் ஊடகங்களும் மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டனவா? அப்படியென்றால், பாஜக ஏன் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று கூறுகிறது. 


2019 மோடியின் பொய் பிரச்சாரம்:


2014 நாடாளுமன்ற தேர்தலில், கருப்பு பணத்தை மீட்பேன், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டுவேன், விவசாயிகளின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவேன் என அடுக்கடுக்கான பொய்யை பிரச்சாரத்தில் மோடி கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், மோடியின் முதல் ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. இந்த பின்னணியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மோடிக்கு சில பொய் பரப்புரைகள் தேவைப்பட்டன.


பாலகோட் வான்வழித்தாக்குதல் சம்பவத்தின் மூலமாக தேசிய வாக்குவங்கியை அணி திரட்ட முயன்றார். 2) இந்து கடவுளர்களின் புராண கதைகளை அறிவியலோடு இணைத்து அதன் மூலம் வாக்கு வங்கியைப் பெருக்க முயன்றார். இதை விரிவாக ஆராய்ந்தால், பாகிஸ்தானின் ரேடாரால் இந்தியாவின் போர் விமானங்களைக் கண்டறிய முடியாது என்று பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், இரண்டாம் உலகப்போரின் போதே எதிரி விமானங்களைக் கண்டறிவதில் ரேடாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை வரலாறு கண்டது.



கொரோனா சமயத்தில், தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து சத்தம் எழுப்பி தட்டுங்கள், அது முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் என்றார் மோடி. சங்பரிவார் கும்பல் மோடிக்கு ஒத்து ஊதுவதாக நினைத்து தட்டால் தட்டுங்கள் கொரோனாவும் ஓடுவிடும் என்று பிரச்சாரம் செய்தன. இதனை யாரும் கேள்வி கேட்கக் கூட இல்லை. 

இந்து கடவுளர்களின் புராண கதையாடலை அறிவியலோடு இணைத்து மோடி பேச்சு உச்சபட்ச நகைச்சுவையாக இருந்தது. 2014ல் பண்டைய இந்தியாவில் மகாபாரதத்தின் கதாப்பாத்திரத்தை மரபணு சிகிச்சைக்கும், விநாயகரை பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் எடுத்துக்காட்டாக மோடி வட இந்தியாவில் பிரச்சாரம் செய்தார். மோடி பேச்சு அடிப்படை அறிவியல் அறிவு கூட இல்லா முட்டாள் தனமானது என்று தெரிந்தும் அதைப்பற்றி யாரும் பேசவில்லை.


2024-ல் மோடியின் நூதன பொய்:


இப்படி மோடி 2014ல் பேசிய பேச்சுக்கள் தற்போது அவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்றால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆறே மாதங்களில் மீட்டுவிடுவார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறாத விஷயங்களை மோடி குறிப்பிடுகிறார். இரண்டு எருமை மாடு இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என பொய் சொல்லுகிறார். ஒரு நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்து, மூன்றாவது முறையாக பிரதமராக ஆசைப்படும் ஒருவர் இப்படி பொய்யிலேயே மூழ்கி, பொய்யிலேயே உறைந்து இருக்கும் நாட்டை எங்குமே பார்க்க முடியாது.


இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மோடி, பிரிவினைவாதத்தை தூண்டி மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் கூட மோடியின், பாஜக தலைவர்களின் பேச்சை கண்டிக்கவோ விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவோ இல்லை. யாரும் கேட்க முடியாது என்ற ஆணவத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார் மோடி.



சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலில் புல்டோசரை ஓட்டி இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் எங்கு இயக்கக் கூடாது என்று அவர்கள் யோகி ஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மத - இன - சாதிய ரீதியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கக் கூடாது என்கிறது அரசியல் சாசனம். ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மேடையிலும் வாயைத் திறந்தால் மோடி உச்சரிக்கும் வார்த்தைகள் அனைத்துமே இஸ்லாமியர்கள் - இந்துக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் தான் இருக்கிறது.



மோடியின் பக்தர் பூரி ஜெகந்நாதர்:


உண்மையிலேயே, இந்துக்களையும் இந்துக் கடவுளர்களையும் மோடி - ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பலால் காப்பாற்ற முடியுமா? மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?


இந்து கடவுள்களின் உன்னதங்கள் காப்பாற்றப்படுகின்றன? என்ற மோடி - சங்பரிவார கும்பல்கள் தான் இந்துக்களையும் இந்து கடவுளர்களையும் தங்களின் சுயநலத்திற்காக பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மோடியைக் குளிர்விப்பதற்காக ஏழை மக்களின் தூதர் மோடி என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்துக் கடவுளான ஜெகநாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் தான் என்று ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா கூறுகிறார். இப்போது அப்படி சொன்னதற்காக மூன்று நாட்கள் விரதம் இருக்கப்போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்தியாவை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற மோடியால் மட்டுமே முடியும் என்று கூறிவந்தவர்கள், இன்று பூரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர் என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லை. இவர்களின் நோக்கம் முழுக்க முழுக்க சர்வாதிகாரம் மட்டுமே. இந்து கடவுள்களைக் காப்பேன் என்று கூறியவர்கள் மோடியே கடவுள் என்ற நிலைக்கு வந்துநிற்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக்காக, சாதியைக் கூர்தீட்டிவிடுவது. மதப்பிளவை ஏற்படுத்துவது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது என்ற நோக்கம் மட்டும் தான் இவர்களுக்கு உள்ளது.



இந்த சூழலில், நான் பயோலஜிக்கலாக பிறக்கவில்லை, கடவுளால் அனுப்பப்பட்டவன் என்று உச்சகட்டமாகவும் கோமாளித்தனமாகவும் பேசியுள்ளார். இதை விட யாரும் தாய் தந்தையை அவமதித்து விட முடியுமா?தாய் தந்தையையே அவமதிப்பவர்கள் மக்களை அவமதிக்க துணியமாட்டார்களா? கேவலம் வாக்குகளுக்காக எத்தனை கேவலத்தையும் செய்வார் மோடி!


இந்தியா தனது ஜனநாயக மாண்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றால் மோடி போன்ற சர்வாதிகாரிகளும், ஆர்.எஸ்.எஸ். - பாஜக போன்ற மக்கள் விரோத கட்சிகளும் தலை தூக்காமல் பார்த்துக்கொள்வது நம்மைப் போன்ற இந்தியாவை நேசிப்பவர்களின் பிரதான கடமை


- வன்னி அரசு

21 May 2024

பிரபீர் விடுதலை - ஜனநாயகம் துளிர்க்கும் இடம்

இந்தியா ஒரு கொடூரமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதை பல கட்டுரைகள் வாயிலாக விளக்கிக்கொண்டே இருக்கிறேன். அதற்கு ஆவணங்களாக மோடி ஆட்சியின் இந்த பத்து ஆண்டு காலத்தில் பல சம்பவங்களை இந்தியா கண்டுவிட்டது. மோடி தனது அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் இன்றைய நாளில் கடந்த காலங்களில் மோடி செய்த அத்தனை வரலாற்று பிழைகளுக்கும் விடை கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அரசியல்ரீதியாக ஒரு பாசிஸ்ட் தனது வரலாற்று சறுக்கல்களை தொடங்கிவிட்டார் என்பதை தான் மோடி அந்திம கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.



ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி பறிப்புக்கு நீதிமன்றம் நெத்தியடி கொடுத்தது போலவே பிரபீர் வழக்கிலும் மோடியின் அரசியல் தந்திர சூழ்ச்சிக்கு வரலாற்று மரண அடி விழுந்துள்ளது. பிரபீர் வழக்கின் மூலமாக இரண்டு உண்மைகள் வெளிப்பட்டு வந்துள்ளன. மோடி - அமித்ஷா - சங்பரிவார் கும்பல், பத்திரிகையாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த எதிர்ப்பு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தும் விமர்சனங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்களை நகர்புற நக்சல்கள், சீனா - பாகிஸ்தான் கைக்கூலிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சித்தரித்து கருத்துருக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டு பாசிச தனத்தை கட்டமைத்தார்கள். பாஜக - மோடி - சங்பரிவார் கும்பலின் இந்த போலி பிரச்சாரத்தை பிரபீர் விடுதலை இந்திய மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.


பீமா கொரேகான் வழக்கு போராளிகள் - பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிருடன் இல்லை

இன்னும் உடைத்து பேச வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் சீன அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று இந்தியாவின் ஆன்மாவைத் தகர்க்க தகவல் யுத்தத்தை செய்ததாக குற்றம்சாட்டியது. அத்துடன்,  நக்சலைட் - காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தது. கொரோனா பெருந்தொற்று, டெல்லி கலவரத்தை தூண்டியது, விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தை தூண்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் நியூஸ் கிளிக் மீது வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியூஸ் கிளிக் மீதானது மட்டும் அல்ல, மோடியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியாவின் ஆன்மா மீதானது. மோடியின் பாசிசதனத்தையும், சங்பரிவார் கும்பலில் சூழ்ச்சி வலையையும் பிரபீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறுத்தெறிந்துவிட்டது. சரி இனி இந்த வழக்கின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.


நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் கைது:


கடந்த ஆண்டு  அக்.3ஆம் தேதி பிரபல இடதுசாரி ஊடக நிறுவனமான நியூஸ்கிளிக்கின் (NewsClick) நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயாஸ்தா அவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதற்காக டெல்லியில் மொத்தம் 88 இடங்களிலும், நாட்டின் பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனைகளை நடத்தப்பட்டது.


தோழர் பிரபீர் புர்கயாஸ்தா

மூத்த ஊடகவியலாளரான பிரபீர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் பகைமையை தூண்டுதல்), 120B (சட்டவிரோத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) 13 (சட்டவிரோத செயல்), 16 (தீவிரவாத செயல்), 17 (தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) & 22C (சட்டவிரோத செயல் புரிந்த நிறுவனம்) ஆகிய கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


நியூஸ் கிளிக் வழக்கின் பின்னணி:


2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூஸ் கிளிக் ஊடகத்தின் அன்னிய நேரடி முதலீட்டு செயல்பாட்டில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு (116/2020) ஒன்றை பதிவு செய்கிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறது. பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் எப்.ஐ.ஆர் நகல் கூட நியூஸ் கிளிக் தரப்பிற்கு தரப்படாமல் மேலும் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்கிறது. நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் ED சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் 2021ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ED வழக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது, மேலும் தோழர் பிரபீர் கைதுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.


தோழர் பிரபீரின் சட்டவிரோத கைது:


முந்தைய வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்திள்ள நிலையில், அதே பழைய குற்றச்சாட்டை புதிய எப்.ஐ.ஆராக (224/2023) பதிவு செய்து, 2023ஆம் ஆண்டு அக்.3ஆம் தேதி மாலை கைது செய்யப்படுகிறார் பிரபீர் புர்கயாஸ்தா. அடுத்த நாள் அக். 4 காலை 6 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.


முதல் நாள் மாலை கைதான பிரபீர், அடுத்த நாள் காலை ரிமாண்ட் செய்யப்படுகிறார் என்ற தகவல் அவரது வழக்கறிஞரான அர்ஷ்தீப் குராணாவுக்கு காவல்துறை தெரிவிக்கவில்லை


கைது செய்யப்படும் தோழர் பிரபீர்


காவல்துறையால் கொண்டு வரப்பட்ட வேறொரு வழக்கறிஞரை பிரபீரின் எதிர்ப்பையும் மீறி அவரது சார்பில் முன்னிறுத்தி நீதிபதியிடம் ரிமாண்ட் உத்தரவு வாங்கப்படுகிறது.


பிரபீர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் வரை அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என எந்த விவரமும் அவருக்கோ, அவரது வழக்கறிஞருக்கோ விளக்கப்படவில்லை. ரிமாண்ட் உத்தரவில் நீதிபதி காலை 6 மணிக்கு கையெழுத்திட்ட பிறகு, 7.07 மணிக்கு அவரது வழக்கறிஞருக்கு தகவல் செல்கிறது. 


எப்.ஐ.ஆர். எண் 224/2023 நகல், ரிமாண்ட் செய்த நீதிபதியிடம் முறையிட்ட பின்னர், அவரது உத்தரவின் பேரில் அக். 5ஆம் தேதி மாலை தான் பிரபீர் தரப்பிற்கு தரப்படுகிறது. அவரது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அக். 13ஆம் தேதி தனி நீதிபதி துஷார் ராவ் அமர்வு தள்ளுபடி செய்கிறது. இதனையடுத்து தான் உச்சநீதிமன்றத்தை அனுகினார் பிரபீர் புர்கயாஸ்தா.


குற்றம் இழைத்த குற்றப்பத்திரிகை:


நியூஸ் கிளிக் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்களையோ ஆதாரங்களையோ முறையாக காட்டாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்தது காவல்துறை. சுறுங்க கூற வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் மீதான குற்றப்பத்திரிகை அனுமானங்கள் மீதானது மட்டுமே. எட்டு சாட்சிகள் அளித்த சாட்சியங்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருந்தது. அதாவது, பிரபீரும் அவரது கூட்டாளிகளும், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தார்கள். சீனாவிடம் இருந்து நிதிபெற்று சதி செய்தார்கள்(தகவல் யுத்தம்) விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டார்கள், காஷ்மீர், நக்சலைட்டுகளுக்கு நிதி அளித்தார்கள் என்றெல்லாம் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது அனுமானத்தின் மீது தான் உள்ளதே தவிர ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை. 


சீன பணமும் குதர்க்க குற்றப்பத்திரிகையும்:


நியூஸ் கிளிக், பிரபீர் மீதான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, சீனாவிடம் இருந்து 92 கோடிக்கும் மேல் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, குற்றப்பத்திரிகையில் ஒரு முக்கிய நபராக அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் என்பவர் 2018 - 2023க்கு இடைப்பட்ட காலத்தில் நியூஸ்கிளிக் செயல்பாடுகளுக்காக 92 கோடிக்கும் மேல் பணத்தை சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது. சீனப்பணத்தை நியூஸ் கிளிக்கோ பிரபீரோ பெற்றதற்கான எந்த ஆவணங்களும் பாஜக அரசிடமோ காவல் துறையிடமோ இல்லை. 


அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம்

மின்னஞ்சல் சதி:


இந்தியாவில் இன - மொழி - சமூக - அரசியல்ரீதியிலான பிரிவினைகளை ஏற்படுத்த சீனா - நக்சலைட்டுகள் - காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேர்ந்து நியூஸ் கிளிக்கும் பிரபீர் புர்கயாஸ்தா சதி செய்ததாகவும், இதற்காக பிரபீர் புர்கயாஸ்தா மற்றும் சிங்கம் ஆகியோர் ஒரு சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டும் முயற்சிக்காக மின்னஞ்சல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மக்களையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரையும் புதிய மற்றும் புதிய இயக்கங்களின் கீழ் அணி திரட்ட வேண்டும் என இந்த இடதுசாரி கூட்டணி கொள்கையை வகுத்து மின்னஞ்சல் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அப்படி ஒரு மின்னஞ்சல் ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை.


தகவல் போர் செய்தாரா பிரபீர் புர்கயாஸ்தா?


ஜம்மு - காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பகுதி அல்ல எனக் காட்டும் வரைபடங்களை நியூஸ் கிளிக் வெளியிட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒரு தகவல் நியூஸ் கிளிக் வெளியிடவே இல்லை. இதே போல், கொரோனா பெருந்தொற்றில், மோடி, ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்பட்டு சீனாவின் ஆதரவாளராக நியூஸ் கிளிக் இருந்துள்ளதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. அதாவது, பிரபீர் புர்கயாஸ்தா உறுப்பினராக உள்ள அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு மோடியின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டதாக விமர்சித்தது. இதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.


மோடியை அம்பலப்படுத்தும் நியூஸ்கிளிக் கட்டுரை

கட்டுரையை இங்கு படிக்கலாம்

இதே போல் தான், குடியுரிமை திருத்தச்சட்டம், விவசாயிகள் போராட்டம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிரான பிரச்சாரம், பீமா கோரேகான் கலவரம், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம், டெல்லி கலவரம், காஷ்மீர், மணிப்பூர் பிரச்னை என நியூஸ் கிளிக் மற்றும் பிரபீர் புர்கயாஸ்தா மீது முன்வைக்கப்பட்ட காவல் துறையின் எந்த குற்றப்பத்திரிகை தகவல்களுக்கும் அடிப்படை ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை. எல்லாம், அனுமானத்தின் அடிப்படையிலும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பல் பரப்பும் வாட்சப் வதந்திகளை நம்பியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி:


தோழர் பிரபீருடன் அதே நாளில் கைது செய்யப்பட்ட அமித் சக்ரபர்த்தி நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவராகவும், இந்த நிறுவனத்தை நடத்தும் பிபிகே நியூஸ்கிளிக் ஸ்டுடியோ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.


அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி

கடந்த சனவரி மாதம் ஊபா வழக்கில் விசாரணைக்கு உதவக்கூடிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனால் அப்ரூவராக மாறுவதாகவும், , இதனால் தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தார் அமித் சக்ரபர்த்தி. விசாரணை நீதிமன்றத்தால் அப்ரூவராக அங்கீகரிக்கப்பட்டு, மன்னிப்பும் வழங்கப்பட்டது.

அப்ரூவராக மாறிய நபரை அந்த வழக்கு முடியும்வரை விடுவிக்கக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அமித் தரப்போ அவருக்கு 56 வயதாகிறது, போலியோ தாக்கத்தால் அவரது உடலில் 59% முடங்கியிருப்பதால் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறார் என்று வாதிட்டது.


அப்ரூவர் அமித் தரப்பு கோரிக்கைக்கு தில்லி காவல்துறை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சி.ஆர்.பி.சி. பிரிவு 482ஐப் பயன்படுத்தி கடந்த மே 6 ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார் அமித் சக்ரபர்த்தி. அந்த தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடல்நிலையையும் மனிதநேயத்தோடு கருத்தில் கொண்டு விடுவிப்பதாக சொன்னது நீதிமன்றம்.


பாஜகவின் பொய் விமர்சனங்கள்:


பார்க்கின்சன்ஸ் நோயால் அவதியுற்று, தண்ணீர் பாட்டிலை கூட கைகளால் பிடிக்க முடியாமல், குடிப்பதற்கு ஸ்ட்ரா (straw) கேட்டார் 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி. ஆனால் அதனை கொடுக்க மறுத்தது என்.ஐ.ஏ. நீதிமன்றம். பல மாத சட்டப்போராட்டத்துக்கு பின்னரே அவருக்கு ஸ்ட்ரா கொடுக்கப்பட்டது. பின்னர் சிறையிலேயே நிறுவன படுகொலை செய்யப்பட்டார்.


பேராசிரியர் சாய்பாபா

சமீபத்தில் ஊபா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 58 வயதான பேராசிரியர் சாய்பாபா, 90% உடலில் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையிலும் அவருக்கு பிணையோ, மருத்துவ சிகிச்சையோ மறுக்கப்பட்டது. 10 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் இருந்த சாய்பாபாவை இருமுறை நாக்பூர் உயர்நீதிமன்றம் நிரபராதி என்று அறிவித்த பின்னர் தான் விடுவிக்கப்பட்டார்.


பாஜக ஆட்சி காலத்தில் மட்டும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எல்லோர் மீதும் இதுபோன்ற என்னென்ற அவதூறு குற்றச்சாட்டுகள் தான் முன்வைக்கப்பட்டுள்ளன. தேசத்திற்கு எதிராக பேசினார்கள். சீனாவின் கைக்கூலி, பிரிவினைவாதிகள், நகர்புற நக்சலைட்டுகள் என்று எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுடன் தானே சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கொடிய ஆட்சியைக் கேள்விக் கேட்பவர்கள் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பாஜக கைது செய்த மக்கள் ஜனநாயகவாதிகளின் சமூக விடுதலை பங்களிப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளது பிரபீர் விடுதலை வழக்கு. 


சிறையிலிருந்து விடுதலையான பிரபீர் புர்கயாஸ்தா


2004 முதல் 2014 வரை 112 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி 5,346 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக ஆட்சியில் 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் 310 சோதனைகளை நடத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.


கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. 2014 மற்றும் 2022க்கு இடையில், 121 உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 115 தலைவர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதாவது 95% வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான். ஆக மொத்தத்தில், எதிர்க்கட்சிகளை முடக்கவும், சமூக ஆர்வலர்கள் மக்கள் நலன் சார்ந்து போராடுவதை முடக்குவதையுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.



பிரபீர் வழக்கு போல், மீதம் உள்ள வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டால் பாஜகவின் முகத்திரைக் கிழியும். புலனாய்வு அமைப்புகளும், அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் சி.பி.ஐ உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மோடியின் வேட்டை நாய் போலத்தான் இருக்கின்றன. பிரபீர் வழக்கு மோடியின் வேட்டை நாய்களின் பல்லை உடைத்துள்ளது. இறுதியில், மோடியின் மொத்த முகத்திரையுமே விரைவில் கிழியும். விடுதலை சிறுத்தைகள் போல் இந்தியாவின் பல்வேறு ஜனநாயக சக்திகளும் மோடிக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டன. இந்த போராட்டத்தின் மூர்க்கத்திற்கு முன் மோடி தொடை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார். மோடியின் இறுதி முடிவு மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதை காலம் விரைவில் இந்திய மக்களுக்கு உணர்த்தத்தான் போகிறது.


- வன்னி அரசு

10 May 2024

நரேந்திர தபோல்கர் படுகொலையில் சனாதன கும்பலின் பயங்கரவாதம்!

 2013ஆம் ஆண்டு ஆக.20ஆம் தேதி பூனாவில் காலை நடைபயிற்சியின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பகுத்தறிவாளர் Dr.நரேந்திர தபோல்கர்.


மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் களம் கண்டவர் நரேந்திர தபோல்கர். அவரின் கொலைக்கு பிறகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மராட்டிய மாநில அரசு.


பகுத்தறிவாளர் தபோல்கரை தொடர்ந்து நாடு முழுவதும் அடுத்தடுத்து சிந்தனையாளர்கள் சனாதன தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் 2015ஆம் ஆண்டு பிப். 16ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த் பன்சாரே அவரது மனைவியுடன் சுடப்பட்டார்.


சனாதன கும்பலால் இந்து மன்னராக கட்டமைக்கபட்ட சிவாஜியின் உண்மை வரலாற்றை, அவரின் மதவெறி இல்லாத செயல்பாட்டை ‘யார் இந்த சிவாஜி?’ என்று தலைப்பிட்டு வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி வெளிக்கொண்டு வந்தவர் பன்சாரே.



தோழர் கோவிந்த் பன்சாரே

நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பிப்.20ஆம் தேதி உயிரிழந்தார். தபோல்கரின் படுகொலையைப் போன்று அதே பாணியில் பன்சாரேவின் கொலையும் அரங்கேற்றப்பட்டது.


பன்சாரேவை தொடர்ந்து அவரது நண்பரும் சீர்திருத்தவாதியுமான 77 வயதான எம்.எம்.கல்புர்கி கர்நாடகாவின் தாரவாட்டில் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்ததோடு கன்னட சமூகத்தில் நிலவும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு எதிராக கலகம் செய்தவர் பேராசிரியர் கல்புர்கி.



பேராசிரியர் கல்புர்கி

கல்புர்கியை தொடர்ந்து நாடறிந்த பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான 55 வயது கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சனாதன தீவிரவாதிகளால் 2017ஆம் ஆண்டு செப்.5ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.



பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்

தபோல்கர் கொலை வழக்கில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.


சனாதன் சன்ஸ்தாவின் கிளை அமைப்பான ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் துணை தலைமை ஒருங்கிணைப்பாளர் பல் மருத்துவரான விரேந்திரசிங் தாவ்டே, சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், அவரது உதவியாளர் விக்ரம் பாவே, தபோல்கரை துப்பாக்கியால் சுட்ட சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர்.


Dr.நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் என இந்த நால்வரின் படுகொலைகளையும் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் சனாதன பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர்கள் தான் என்பது விசாரணையில் அம்பலமானது.



மருத்துவர் தாவ்டே தான் தபோல்கர் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவன்  கம்யூனிஸ்ட் தலைவர் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டே கைது செய்யப்பட்டு, அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர் ஆகிய இருவருக்கும் தான் ஆயுள் தண்டனை விதித்து பூனாவில் அமைந்துள்ள ஊபா சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.


பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபராக இருப்பவன் சரத் கலாஸ்கர். அவனது அறையில் தான் லங்கேஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், லங்கேஷை சுட்ட சனாதன தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்தவன் என்றும் குற்றப்பத்திரிகை உள்ளது.


இந்த கலாஸ்கரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் பூனலேகர், அவனது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.



வீரேந்திரசிங் தாவ்டே


நான்கு முற்போக்காளர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், அனைவரும் 7.65 மி.மீ நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி தான் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலை இரண்டும் ஒரே துப்பாக்கியால் நடைபெற்றது என்கிறது தடயவியல் ஆராய்ச்சி குழு.


இந்த நாட்டு துப்பாக்கியை தான் அழித்துவிடும்படி கலாஸ்கருக்கு உத்தரவிட்டது தான் வழக்கறிஞர் பூனலேகர் மீதான குற்றச்சாட்டு.


கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமோல் காலே என்பவன் சனாதன் சன்ஸ்தாவின் ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவன், இன்னொரு குற்றவாளியான அமித் தேக்வேகார் சனாதன் சன்ஸ்தாவின் ஊழியராக இருந்தவன்.


நான்கு முற்போக்காளர்களின் வழக்கிலும் சனாதன் சன்ஸ்தா எனும் ஒரே தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். நான்கு வழக்குகளிலும் உள்ள குற்றப்பத்திரிகைகள் அதை தான் அம்பலப்படுத்துகிறது.


இன்று ஊபா சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு இந்த படுகொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவன் தாவடே, அதன் வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், உதவியாளர் விக்ரம் பாவே ஆகியோரை போதிய சாட்சிகள் இல்லை என்று விடுவித்ததை ஏற்கமுடியாது. எந்தவித ஆதாரமுமின்றி பீமாகொரேகான், டெல்லி கலவரம் உள்ளிட்ட வழக்குகளில் அப்பாவிகள் சிறையில் உள்ள நிலையில், திட்டமிட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சனாதன் சன்ஸ்தா தீவிரவாதிகள் விரேந்திரசிங் தாவ்டே, சஞ்சீவ் பூனலேகர் மற்றும் விக்ரம் பாவே

இந்து மதத்துக்கு எதிராக செயல்படும் தபோல்கரை கொல்லும்படி தாவடே தான் நேரடியாக தன்னிடம் தெரிவித்தார் என்று நீதிமன்றத்தில் சொல்லியுள்ளான் துப்பாக்கியால் சுட்ட கலாஸ்கர்.


2015 ஆகஸ்ட் தொடங்கி 2022 திசம்பர் வரை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது தபோல்கர் வழக்கு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் எதிர்ப்பையடுத்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொல்லி உயர்நீதிமன்ற மேற்பார்வை விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

இந்துக்களுக்கு எதிரானவர்களையும், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களையும் கொல்ல வேண்டும் என்று கூலிப்படையை ஏவி கொலை செய்வதே இவர்கள் அமைப்பின் திட்டம் என்று தபோல்கர் வழக்கில் குற்றஞ்சாட்டியது சிபிஐ.



பீமா கொரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகள்


முன்னர் சனாதன பயங்கரவாதிகளால் அறங்கேற்றப்பட்ட சிந்தனையாளர்களின் கொலைகளை அடுத்து, இப்போது ஊபா சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு எந்தவொரு விசாரணையும் இல்லாமல் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் என அனைவரையும் சிறையிலடைத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.


- வன்னி அரசு

04 May 2024

மோடியின் தேர்தல் கால பித்தலாட்டங்கள்

இந்திய அரசியலமைப்பை மோடி சிதைத்துவிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆரம்பம் முதலே எச்சரித்து வருகிறார். அவரை தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன. அதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக மோடி ஆட்சியில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள், அரசியலமைப்புக்கு எதிரான நகர்வுகளை நுணுகி ஆராய்ந்தால் அதற்கான விடை கிடைத்துவிடும்.

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இந்தியா முழுவதும் வேகமெடுத்துள்ளது. 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என சூளுரைத்த மோடி, இந்தியா கூட்டணியின் எழுச்சியைப் பார்த்து அஞ்சியவராகவும் தனது தோல்வியை உணர்ந்தவராகவும் மக்கள் முன்பாக பொய்யான தகவல்களை பதற்றத்துடன் பரப்பி வருகிறார்.



இந்திய தேர்தல் ஆணையமும் அதன் மூன்று ஆணையர்களும்

மோடியின் தேர்தல் பேச்சில் இருக்கும் நடுக்கம் அவரது தோல்வியை உறுதி செய்வதாக இருக்கிறது. அதே சமயத்தில் அவர் கூறும் பொய் தகவல்கள் அரசியல் சாசனத்தை மீறுவதாக இருக்கிறது. மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு கண்டும் காணாதது போல் வேடிக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கூறாத பல தகவல்களை மோடி மக்கள் மத்தியில் தவறாக சித்தரித்து மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார்.

இந்த தேர்தல் உத்தியில் இரண்டு வியூகங்களை மோடி கையாளுகிறார். ஒன்று வாக்கு வங்கியை பெருக்க மத அடிப்படையில் வாக்குவங்கியை திரட்ட சதி செய்கிறார். இன்னொன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் சென்றுவிட்டதால், அதனை கண்டு அஞ்சியவராக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இல்லாத அம்சங்களை திரித்து மக்களிடையே கூறுகிறார்.





காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து உங்களிடம் விளக்க நேரம் வேண்டும்”என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துவிட்டார். இருப்பினும் கூட மோடி தனது பித்தலாட்டங்களை நிறுத்தியதாக தெரியவில்லை. இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

மோடியின் இடஒதுக்கீடு பித்தலாட்டம்:

பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடப் போவதாக மோடி பொய் செய்தியை பரப்பியுள்ளார். தெலுங்கானாவின் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி, காங்கிரஸ் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். இடஒதுக்கீட்டில் கைவைத்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சதி செய்வதாக அப்பட்டமாக மோடி பொய் சொல்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயோ மோடி கூறுவது போன்ற ஒரு கருத்தும் இடம் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்கியத்தை கவனியுங்கள். “சிறுபான்மையினர் கல்வி, சுகாதாரம், பொது வேலை வாய்ப்பு, பொதுப்பணி ஒப்பந்தங்கள், திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் பாகுபாடு இல்லாமல் நியாயமான பங்கைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.” என்று தான் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதைத்தான் மோடி மாற்றி பொய் செய்தியை மக்கள் மன்றத்தில் பரப்புகிறார்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் குறித்த பகுதி (ஆவணத்தில் பக்கம் 8 குறிப்பு 6)

தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 4% இடஒதுக்கீட்டை மேற்கோள் காட்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை முஸ்லீம் பயனாளிகளுக்கு காங்கிரஸ் திருப்பிவிட்டதாக பிரதமர் பொய் சொல்கிறார்.



2007 முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கீழ் கல்வி மற்றும் அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூக-பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் சேர்த்துள்ளன.

மோடி பேசுவதில் உண்மையின்மையை பல்வேறு அம்சங்களில் விளக்கலாம். மற்றொரு விஷயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. 12 ஆண்டுகள் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் சமூகங்களையும் பட்டியலிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ANI- என்ற செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த பேட்டியில், மாநிலத்தில் 70 முஸ்லிம் சாதிகள் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதாக மோடி பெருமையாகப் பேசியிருந்தார் (குறிப்பிட்ட மோடியின் ANI பேட்டியை இங்கு காணலாம்)

ஆனால், இன்று தேர்தல் வெறியோடு மோடி அப்பட்டமாக காங்கிரஸ் கட்சி மீது பொய் குற்றச்சாட்டை சூட்டுகிறார். காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என்கிறார்.

தாம் உயிருடன் இருக்கும் வரை, பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை "முஸ்லிம்களுக்குப் பகிர்ந்தளிக்க" அனுமதிக்க மாட்டோம் என மோடி கூறுவது தான் இதன் உச்சமாக பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி தங்களின் ஒதுக்கீட்டின் மீது கைவைத்து தங்களின் உரிமையை பறிக்கிறது என்று பொய்யான கருத்தை திரும்பத்திரும்ப மோடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். உண்மையில், யார் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிப்பது என்றால் அது பாஜக - ஆர்.எஸ்.எஸ். என்பது தான் உண்மை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், எதிர்காலத்தில் “மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை" அகற்றுவோம் என்று தேர்தல் பேரணிகளின் போது வாக்குறுதி அளித்துள்ளனர். ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கும் ஒருவர் மத அடிப்படையில் பிரித்து பேசுவது தானே அப்பட்டமான அரசியல் சாசனத்தை மீறும் செயல். இந்த செயலை மோடி கும்பல் திட்டமிட்டு திரும்பத் திரும்ப செய்கிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில தேர்தல்களில் இஸ்லாமியர்கள் - இந்துக்கள் இடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டி அதன் மூலமாக வாக்கு வங்கியை பெறுக்கிக்கொள்ள பாஜகவும் மோடி கும்பலும் திட்டம் போடுகிறது.


விடுதலைச் சிறுத்தைகளின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு

தென் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் மோடி கும்பலால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாற்பதிலும் திமுக - காங்கிரஸ் - விசிக - இடதுசாரி கூட்டணி தான் வெற்றி பெறும். கேரளாவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் இடையே தான் போட்டி, கர்நாடகாவில் ரேவண்ணாவில் பாலியல் வீடியோவால் பாஜக ஒட்டுமொத்த சீட்டையும் இழக்கப் போகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒட்டுமொத்தத்தில், தென்னிந்தியாவில் பாஜக காணாமல் போவது உறுதியாகிவிட்டது. இதனை ஈடுகட்ட மத பிரிவினைவாதத்தை தூண்டி, வட இந்தியாவில் வாக்குவங்கிக்காக மனித மாமிசம் வேண்டும் என்ற கோணத்தில் மோடியின் பிரச்சாரம் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.

55%, பரம்பரை வரியை வசூலிக்கிறதா காங்கிரஸ்?: 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் வாரிசு வரியை அறிமுகப்படுத்தும் என்று மோடி மற்றொரு பித்தலாட்டத்தைக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதை செய்தியாக வெளியுட்டுள்ளது. அதாவது, "காங்கிரஸ் பாதிக்கு மேல், 55%, பரம்பரை வரியாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டு பேசியதாக ஹிந்துஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை வரி பற்றிய குறிப்பு எதுவுமே இல்லை. "வளம் மற்றும் வருமானத்தின் பெருகிவரும் சமத்துவமின்மையை கொள்கைகளில் பொருத்தமான மாற்றங்களின் மூலம் நாங்கள் நிவர்த்தி செய்வோம்." என்று மட்டும் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார சமத்துவமின்மையை பேசும் பகுதி (ஆவணத்தில் பக்கம் 28 குறிப்பு 21)

எங்கே தொடங்கியது மோடியின் பொய் பரப்புரை?:

ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரையுடன் தொடங்குகிறது மோடியின் பொய் பரப்புரை. முஸ்லிம்களுக்கு "ஊடுருவுபவர்கள்" "அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்" என்று முத்திரை குத்தி தனியார் சொத்துக்களை கைப்பற்றி அவர்களுக்கு மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் மோடி முதல் பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார்.

"எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் தற்போதுள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை ஏற்படுத்தும் அல்லது பல்வேறு சாதிகள் மற்றும் சமூகங்கள், மத அல்லது மொழி ஆகியவற்றுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்திய தேர்தல் ஆணையமும் இதனை கருத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும். ஆனால், மோடியின் பேச்சுக்கள் அனைத்தும், அப்பட்டமாக முஸ்லீம் - இந்து பிரிவினையைத் தூண்டுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மோடியின் பேச்சுகுறித்து புகார் அளித்தன. ஆனாலும் மோடி வெளிப்படையாக முஸ்லீம்கள் என்று பேசுவதை நிறுத்திவிட்டு மறைமுகமாகவே பேசி வருகிறார்.

ஏப்ரல் 21 ஆம் தேதி மோடி பேசிய பேச்சின் உண்மை தன்மை என்ன என்பதை விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது. அதாவது, மோடி பேச்சை முதலில் பார்க்கலாம். திருமணமான இந்து பெண்களின் தாலி உட்பட தனியார் சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்து, மறுபங்கீடு செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியதாக மோடி குற்றம்சாட்டினார். அதாவது, "எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகள் வெறும் காட்சிப் பொருளல்ல, அது அவர்களின் சுயமரியாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். "அவர்களின் தாலி அவர்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் தேர்தல் பிரகடனத்தில், அதை பறிப்பதாக மிரட்டுகிறீர்கள்?'' என்று காங்கிரஸ் கட்சியைப் பார்த்து மோடி விமர்சித்தார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களின் தாலி ஒருபுறம் இருக்க, தனியார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த குறிப்பும் இல்லை. நமது சொத்துக்களைத் "இந்தியாவில் ஊடுருவியவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு" (இஸ்லாமியர்களைத் தான் மோடி இப்படி கூறுகிறார்) இந்தியாவின் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிடும் என்று கூறினார். இந்தியாவில் எத்தனை முஸ்லீம்கள் ஊடுருவியுள்ளார்கள் என்ற ஆதாரம் மத்திய அரசிடம் இதுவரை இல்லை. அதாவது, சட்ட விரோத குடியேற்றம் பற்றிய தரவுகள் தங்களிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் பலமுறை ஒன்றிய அரசு கூறியுள்ளது.


தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019-2021 (NFHS 5)

இந்திய முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதம், இந்துக்களை விட அதிகமாக இருந்தாலும், மற்ற அனைத்து சமூகங்களை விடவும் வேகமாக குறைந்து வருகிறது. தவிர, கருவுறுதல் என்பது பொருளாதாரத்தின் ஒரு செயல்பாடு, மதம் அல்ல: மிகவும் வளர்ந்த தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஏழை பீகாரில் உள்ள இந்துக்களை விட குறைவான குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பாக பார்த்தோமானால் 1992ஆம் ஆண்டு 4.5% இருந்த முஸ்லீம்களின் கருவுறுதல் விகிதம் 2019-21இல் 2.4% என 47% குறைந்துள்ளது. அதேவேளை 1992இல் 3.3% இருந்த இந்துக்களின் கருவுறுதல் விகிதம் தற்போது 44% மட்டுமே குறைந்து 2% என உள்ளது. இதன் மூலம் மோடி பேசுவது அப்பட்டமான பொய் என்றே வெளிப்படுகிறது.

இந்துக்கள் சொத்தை காங்கிரஸ் பறிக்குமா?:

அலிகாரில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தனியார் சொத்துக்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்ற தவறான கூற்றை மோடி மீண்டும் மீண்டும் கூறினார். “காங்கிரஸின் ஷெஹ்சாதா [இளவரசர்]” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய குறிப்பு – “கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் எவ்வளவு வருமானம், சொத்து, வீடு உள்ளது என்பதைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும்… அரசாங்கம் சொத்தை கைப்பற்றி மறுபங்கீடு செய்வார்கள் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இதைப் பற்றி கூறவில்லை. ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் எக்ஸ்ரே பரிசோதனை செய்வோம். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், பொதுப்பிரிவைச் சேர்ந்த ஏழைகள், சிறுபான்மையினர் ஆகியோர் நாட்டில் தங்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வார்கள். இருப்பினும், கட்சி தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து மறுபங்கீடு செய்யும் என்று அவர் கூறவில்லை.


நாட்டின் எக்ஸ்ரேவாக சாதிவாரி கணக்கெடுப்பு அமையும் - ராகுல் காந்தி

“உங்கள் கிராமத்தில் உங்களுக்கு ஒரு மூதாதையர் வீடு இருந்தால், உங்கள் குழந்தைகளுக்காக நகரத்தில் ஒரு சிறிய பிளாட் வாங்கியிருந்தால், அதில் ஒன்றைப் பறித்துவிடும் அளவுக்கு காங்கிரஸ் செல்லும். இது மாவோயிஸ்ட் சிந்தனை அல்லவா? காங்கிரஸ் உங்களின் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பறிக்க நினைக்கிறது, பெண்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கிறது என்றார் மோடி.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் மறுபங்கீடு பற்றிய ஒரே குறிப்பு இதுதான்: “நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரசு நிலம் மற்றும் உபரி நிலங்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்க காங்கிரஸ் ஒரு அதிகாரத்தை நிறுவும்.” 


ஏழைகளுக்கு நில விநியோகம் குறித்து பேசும் பகுதி (ஆவணத்தில் பக்கம் 6 குறிப்பு 7)

இது ஒரு புரட்சிகர வாக்குறுதி அல்ல: இந்தியாவில் 21 மாநிலங்களில் நில உச்சவரம்பு சட்டங்கள் உள்ளன, அவை 1960 களில் நாட்டில் நில உரிமையில் உள்ள வரலாற்று சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டன.

மத அடிப்படையிலான ஒதுக்கீடு:

ஏப்ரல் 24 ஆம் தேதி சாகரில் பேசிய மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டவிரோதமான முறையில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார். “ஒரே அறிவிப்பின் மூலம் அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC ஒதுக்கீட்டில் சேர்த்தது. ஓபிசி இடஒதுக்கீட்டில் பெரும் பகுதியை காங்கிரஸ் பறித்து மத அடிப்படையில் வழங்கியதாக விமர்சித்தார். ஆனால், உண்மை மோடி சொல்வதைப் போல் இல்லை. முஸ்லீம்களுக்கான ஒதுக்கீட்டின் வரலாறு வேறுவிதமாக இருக்கிறது.

1962 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம், மதத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் ஆர்.நாகனா கவுடா கமிஷன் (சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்களுக்காக இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய 1962 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணையம்) பேரில் முஸ்லிம் சமூகங்களின் குறிப்பிட்ட சாதிகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது. அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வகைப்பாட்டின் அளவுகோல் மற்றும் இடஒதுக்கீடுகளின் அளவை பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே, மைசூர் மகாராஜா 1921ல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். பின்னர், 1994 இல், HD தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அரசாங்கம் கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகங்களையும் OBC பட்டியலின் கீழ் கொண்டு வந்தது, அவர்களுக்கு 4% துணை ஒதுக்கீட்டை உருவாக்கியது.

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகங்கள் OBC பட்டியலில் சேர்க்கப்பட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆந்திராவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் முதலில் முயற்சித்ததாகவும், நாடு முழுவதும் அதே ஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மோடி கூறினார். "அவர்கள் மதத்தின் அடிப்படையில் 15% ஒதுக்கீட்டை முன்மொழிந்தனர்," என்று மோடி பொய் தகவலைக் கூறினார். “எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான தற்போதைய ஒதுக்கீட்டில் இருந்து திருடி, சிலருக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்ததாக ஏப்ரல் 24ல் சர்குஜா பிரச்சாரத்தில் மோடி பித்தலாட்டம் செய்கிறார். 2009-ல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தியது. 2014 தேர்தல் அறிக்கையிலும், இந்த விஷயத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். என்று மோடி பொய் சொல்கிறார்.


பாஜக ஆளும் குஜராத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள முஸ்லீம் சமூகங்களின் பட்டியல்

ஆந்திராவில் காங்கிரஸ் அரசு 2005 இல் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றியது. "சமூக ரீதியாகப் பின்தங்கிய குடிமக்களில் ஒரு வகுப்பினரைத் தீர்மானிப்பதற்கான ஒரே அடிப்படையாக மதம் இருக்க முடியாது" என்று வாதிட்டு, உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தள்ளுபடி செய்தது. 2009 தேர்தல் அறிக்கையில் , சிறுபான்மையினருக்கு "அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில்" இடஒதுக்கீடு அளிப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறி, ஒரு கவனமான கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.




அதன் 2014 செயல்திட்ட அறிக்கை : 


"பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தற்போதுள்ள இடஒதுக்கீடுகளை எந்த வகையிலும் பாதிக்காமல், அனைத்து சமூகங்களின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோக்கி வழியைக் கண்டுபிடிப்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது." என்று மட்டுமே கூறியுள்ளது. 




27% இடஒதுக்கீட்டைத் திருடுகிறதா காங்கிரஸ்?:

ஆக்ராவில் 25 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக OBCகளுக்கான 27% ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை திருட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

வாரிசு வரியை ரத்து செய்தாரா ராஜீவ்காந்தி?:

கர்நாடகாவில் மொரீனாவில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நடந்த பரப்புரையில் பேசிய மோடி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, மன்மோகன் சிங்கின் பேச்சு மற்றும் காங்கிரஸ் கட்சி தாலியைப் பறிக்கும் பொய்யான கூற்றுக்களை திரும்பத் திரும்பக் கூறி, பின்னர் மோடி வாரிசு வரி விஷயத்திற்குத் திரும்பினார். இந்த நேரத்தில், அவர் ஒரு புதுமையான வரலாற்றைக் கூறுவதாக பிரகடனப்படுத்தினார். அதாவது, “இந்திரா காந்தி இறந்தபோது, அவரது மகன் ராஜீவ் காந்தி தனது சொத்தை வாரிசாகப் பெற வேண்டும், அரசாங்கத்திற்கு பணம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள, சொத்தை காப்பாற்ற, பிரதமர் ராஜீவ் காந்தி வாரிசு வரியை ரத்து செய்தார். ” என்று பொய் செய்தியைக் கூறினார்.


தனது உரைக்கான விளக்கத்தை 2006ஆம் ஆண்டே வழங்கிய மன்மோகன்சிங்

1985ல் நிதியமைச்சராக இருந்த வி.பி. சிங்கால் வாரிசு வரியானது ஒழிக்கப்பட்டது, இறந்தவரின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட எஸ்டேட் வரியே தவிர, சொத்தை வாரிசாகப் பெற்ற ஒருவர் செலுத்தும் பரம்பரை வரி அல்ல. வி.பி. சிங் தனது பட்ஜெட் உரையில் , "மார்ச் 16, 1985 அன்று அல்லது அதற்குப் பிறகு ஏற்படும் இறப்புகளின் மீது எஸ்டேட் வரி விதிக்கப்படாது" என்று கூறினார். இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று படுகொலை செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் வி.பி. சிங் திருத்திய வாரிசு வரி சீர்திருத்தமே நடைமுறைக்கு வந்தது. அப்படி இருக்க மோடியின் பேச்சு அப்பட்டமான பொய் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்?

குரோனி கேப்டலிசம் முதல் கார்ப்பரேட் ஜமீன்தார் முறை:

இப்படி மோடியின் பேச்சுக்களை ஒவ்வொரு கூட்டமாக தனியாக கவனித்து பார்த்தால் அதில் அவர் கூறிய அத்தனை தகவல்களும் உண்மைக்கு மாறாக இருக்கிறது. அவரின் நோக்கம் என்பது முஸ்லீம் - இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி,இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற வேண்டும் என்பது தான். இந்தியா இந்துக்களின் நாடா என்று கேட்டால், அதுவும் இல்லை. இந்தியாவை சனாதன, பார்பனீய கும்பலின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மோடி திட்டம் போடுகிறார்.


”மோதானி”

2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி, குரோனி கேப்டலிசத்தை அதாவது, முதலாளிகளுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலாளிகளே கட்டி அமைத்த ஒரு அரசின் பிரதிநிதியாக மோடி இருந்தார். அதானியும், அம்பானியும் மோடியின் அரசை இப்படித்தான் உருவாக்கினார்கள். மோடியின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் குரோனி கேப்டலிசமாக தான் உள்ளது. பிறகு மெல்ல மெல்ல நகர்ந்து தற்போது மோடியின் ஆட்சி முறையானது நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தில் இருந்த ஜமீன்தார்கள், பண்ணையார்கள் போன்ற ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறார். (இது ஒரு தனியாக கட்டுரையாகவே எழுதப்பட வேண்டிய பகுதி)

மோடியின் இந்த மக்கள் விரோத போக்கை நாம் ஜனநாயகத்தின் துணை கொண்டு, மக்கள் ஆதரவு கொள்கையை இன்னும் தீவிரப்படுத்தி அடித்து நொறுக்க வேண்டும்.







காலம் புதிய இந்தியாவிற்காக கனிந்து கொண்டிருக்கிறது. நாளைய விடியல் நமக்கானதாக இருக்கும்.

துணிந்து நிற்போம்.. பாசிய பாஜகவை வீழ்த்துவோம்!

-வன்னி அரசு