02 July 2021

ஊபா சட்டம்: மக்கள் போராளி அகில் கோகாய் விடுதலை

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 
அகில் கோகாய் 550 நாட்கள் கழித்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். 
தீர்ப்பை வாசித்த நீதிபதி ப்ரஞ்சல் தாஸ்,
“தீவிரவாத ஆபத்திலிருந்து மக்களை காக்கும் பணியில் நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பாக உள்ள என்.ஐ.ஏ.வின் செயல்பாடு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்.ஐ.ஏ.விடம் எதிர்பார்க்கப்படும் உச்சபட்ச தரத்தை கைக்கொள்ளவேண்டும்" என விமர்சித்துள்ளார்.

சரி, யார் இந்த அகில் கோகாய்?

நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தபோது, அசாம் மக்களை திரட்டி போராடிய அசாமி இவர்.
தேசவிரோத பாஜக அரசு அகிலை ஊபா சட்டத்தில் கடந்த டிசம்பர் 12, 2019 அன்று கைது செய்து,அவர் மீது 12 வழக்குகள் பதியப்பட்டன. அதில் 2 வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்தது.

சிறையிலிருந்தபடியே ‘ராய்ஜோர்தான்’
என்னும் கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அசாமில் சிஏஏ வை எதிர்க்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
சிறையிலிருந்தபடியே தொகுதி மக்களிடம் கடிதங்கள் வாயிலாக பரப்புரை செய்தார். 
அகில் கோகாய் அம்மா பிரியடா கோகாய், மனைவி கீதாஶ்ரீ என குடும்பத்தினர் தேர்தல் பரப்புரை செய்தனர். பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோனை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறையிலிருந்தே அகில் பெற்ற வெற்றி அசாம் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. இப்போது ஊபா சட்டத்திலிருந்து விடுதலை ஆகியிருப்பது மேலும் எழுச்சியை அசாமியர் பெற்றுள்ளனர்.


விடுதலைக்கு பின்பு ஊடகத்திடம் 
பேசிய அகில் கோகாய், 'தீர்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சிறைப்பட்டுள்ளோருக்கும் நம்பிக்கையை தரும். இந்திய அரசு ஊபாவையும் என்.ஐ.ஏவையும் தவறாக பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
தேசவிரோத பாஜக அரசு இந்த வழக்கை புரிந்து கொண்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'.

பொடா சட்டம் கடந்த 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் 2004ல் திரும்ப பெறப்பட்டது.

அது போல வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும், எதிர் கருத்து கொண்டோரை தேச விரோதிகளாக சித்தரித்து முடக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

தேசவிரோத பாஜக அரசு இவற்றை உட்படுத்துமா?

- வன்னி அரசு
  2.7.2021

19 June 2021

தேச விரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புக்கு எதிராக ஆளும் பாஜக அரசாங்கத்தால் கடந்த 2019 திசம்பர் 9,10 ஆகிய  தேதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்களவை, மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது.
ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்சா இச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும் பெரும்பான்மையை வைத்து வெற்றி பெற்றது.


ஒன்றியம் முழுக்க குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் கடந்த 22.2.2020 அன்று இக்கொடுஞ்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி பேரணி நடைப்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்ற அப்பேரணி அரசியல் களத்தில் பெரும் அதிர்வை உருவாக்கியது.


தலைநகர் புது தில்லியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமானது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச்சார்ந்த மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அப்போராட்டங்களை முடக்கவும் அச்சுறுத்தவும் RSS ரவுடிகளை இறக்கி துப்பாக்கி,லத்திகளால் மாணவர்களை அடித்து விரட்ட முயற்சித்தனர். ஆனாலும் மாணவர்கள் அஞ்சாது போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பொதுமக்களும் சாகின் பார்க்கை உருவாக்கி அங்கேயே தங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
இப்போராட்டங்களை ஒடுக்க தேசவிரோத பாஜக ஊபா சட்டங்களை மாணவர்கள் மீது பாய்ச்ச ஆரம்பித்தது.


கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முன்னின்று போராடிய இந்த பட்டியலில் உள்ள மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது ஊபா சட்டம் பாய்ந்தது. 
1. அப்துல் காலித் (உமர் காலித் நண்பர்)
2. இஸ்ராத் ஜெஹான் (காங்)
3. மீரான் ஹைதர் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
4. தாஹிர் ஹுசேன் (ஆம் ஆத்மி)
5. குல்ஃபிஷா காட்டூம் (ஜாமியா)
6. சஃபூரா சர்கார் (ஜாமியா)
7. சஃபா உர் ரஹ்மான் (ஜாமியா)
8. ஆசிப் இஃபால் (ஜாமியா)
9. நடாஷா நர்வால் (டெல்லி பல்கலை)
10. தேவங்கனா கலிடா (டெல்லி பல்கலை)
11. ஷடாப் அஹமது
12. சலீம் மாலிக்
13. சலீம் கான்
14. அதர்
15. தஸ்லிம் அஹமது

பெரும்பாலானோர் ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலைப் பட்டதாரிகள். மொத்தம் 21 பேர் மீது டெல்லியில் கலவரம் நடந்த பின்னணியில் வழக்குகள் பாய்ந்தன. இதில் முக்கிய மாணவ தலைவர்களான
உமர் காலித் (முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர்),
ஷர்ஜீல் இமாம் ( ஜே.என்.யூ ஆராய்ச்சி மாணவர் - ஜனவரி 2020 சரணடைந்தார். 500 நாட்களுக்கு மேலாகசிறையில் இருக்கிறார்) ஆகியோரும் அடங்குவர்.


ஜவஹர்லால் நேரு பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா மற்றும் ஜாமியா மிலியா மாணவர் ஆசிப் இஃபால் ஆகியோர் 2020ஆம் ஆண்டு மே மாதம் சி.ஏ.ஏ. போராட்டத்தின் மூலம் மதக்கலவரத்தை தூண்டி வன்முறைக்கு வித்திட முயற்சித்தார்கள் என்றும், அமெரிக்க அதிபர் வருகையை மையப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமதிக்க போராட்டத்தை திட்டமிட்டு நடத்தியதாக போலீஸ் குற்றச்சாட்டி சிறைப்படுத்தினர்.

மே 2020லிருந்து ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். மற்ற வழக்குகளில் பிணை கிடைத்தும் இந்த வழக்கால் சிறையில் இருந்தனர். பல முறை பிணை கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில் மீண்டும் மே 15 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் பிணைக்காக முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், அனூப் ஜெய்ராம் பிணைக்கான விசாரணையை நடத்தினர்.


அப்போது, “மாணவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளான தீவிரவாத செயல்பாடு, தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் என எதற்கும் குறிப்பிடும்படியாக எந்த ஆதாரமும் எங்கள் முன் வைக்கப்படவில்லை.
தில்லியின் நடுவே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் போராட்டத்தாலேயே ஆட்டம் காணும் அளவிற்கு இல்லாமல், நமது நாட்டின் அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது” என காவல்துறையின் குற்றச்சாட்டுக்களை விமர்சித்து தீர்ப்பளித்தனர்.

மேலும் நீதிபதிகள், “அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டை முடக்கும் முனைப்பில் அரசியலைப்பு சட்டம் வழங்கும் போராடுவதற்கான உரிமைக்கும் தீவிரவாத செயல்பாட்டுக்கும் இடையேயான கோட்டை அரசு அழித்துள்ளது. அரசின் இத்தகைய செயல்பாடு தொடர்ந்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரித்தனர்.

பின்னர் பிணை கேட்டு விண்ணப்பித்த நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா, ஆசிப் இஃபால் ஆகியோருக்கு ஊபா சட்டத்திலிருந்து பிணை கிடைத்தது.
ஆனாலும் தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தில்லி போலீஸ்  அவசரம் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனைத்து தடைகளையும் தகர்த்து மூன்று மாணவ போராளிகளும் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளனர்.


குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடிய மாணவர்களில் சபூரா சர்கார் கர்ப்பிணியாக இருந்ததை தெரிந்தே போலிசார் அடித்து ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தினர். இப்படி அச்சுறுத்தி கொடுஞ்சட்டங்களால் அடக்கி ஒடுக்குவது சரியா என்பது தான் நீதிமன்றத்தின் கேள்வி.

இக்கேள்விகளுக்கு தேசவிரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

- வன்னி அரசு

29 May 2021

லட்சத்தீவு : பாஜக குறி வைப்பது ஏன்?

எந்த மாநிலத்திலும் மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்து வருவது பாஜகவிற்கு பிடிக்காது போல, அதிலும் யூனியன் பிரதேசங்கள் ஆக இருந்தால் எளிதாக தங்களுடைய சர்வாதிகாரத்தை நிலை நாட்ட முனைகிறது ஆளும் பாஜக அரசு.

ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தை அந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சிதைத்துப் போட்டது மோடி தலைமையிலான பாஜக. சிறப்பு அதிகாரமான 370 ரத்து செய்து ‘காஷ்மீரி’ எனும் தேசிய இனத்தை அழித்து வருவதை பார்த்தோம். அதேபோல இப்போது லட்ச தீவுக்குள் தமது இந்துத்துவ கவனத்தை செலுத்தி வருகிறது பாஜக. லட்சத்தீவு மக்கள் இப்போது தமது உரிமைகளை பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து கேரள மாநில மக்களும் ‘சேவ் லட்சத்தீவு’ என்னும் முழக்கத்தோடு போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் லட்சத் தீவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா பட்டேல் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

               

லட்சத்தீவில் என்னதான் நடக்கிறது?

என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் அந்த தீவு குறித்து தெரிந்து கொண்டால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் வகையறாக்களின் சதி பின்னணி தெரியும்.

பொதுவாக நமது சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் 2 லட்சத்திற்கும் குறைவில்லாமல் இருப்பார்கள்.ஆனால் லட்சத்தீவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 65 ஆயிரத்து 473 பேர் தான் வசித்து வருகிறார்கள்.அதாவது நமது தொகுதிகளில் கால்வாசி பேர் தான் லட்சத்தீவில் வசித்து வருகிறார்கள்.

இசுலாமியர்கள் 96.58 சதவீதம் பேர்,

கிறிஸ்தவர்கள் 0.49சதவீதம் ,

இந்துக்கள் 2.7 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள்.

மதம் வேறு வேறாக இருந்தாலும் அத்தனை மக்களும் பழங்குடியினர்கள் தான்.


பேசுகிற மொழி மலையாளம், ஆங்கிலம் என இருந்தாலும் வட்டார மொழிகளான திவெகி, ஜெசரி தான் அதிகம் பேசப்படுகிறது. விவசாயம் அங்கே இல்லை. அதனால் மீன்பிடித் தொழிலும் தேங்காய் வியாபாரமும் தான் மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை. 

கடந்த டிசம்பர் 5,2020 வரை அமைதியாக நிம்மதியாக இருந்த லட்சத்தீவு இப்போது தீவைச் சுற்றியுள்ள கடல் அலைபோல கொந்தளித்து நிம்மதி இழந்து வருகிறது.

பிரஃபுல் கோடா பட்டேல் தான் கடந்த டிசம்பர் மாதம் அந்த தீவில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். பொதுவாக லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள்தான் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள்.

ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது தாம் நினைப்பதை செய்யக் கூடியவராக இருந்த இந்த பட்டேலை லட்சத்தீவுக்கு அனுப்பி வைத்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 


யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?

முதலில் இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர்.

2007 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் ஹிமத் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 'ஷெராபுதின் போலி என்கவுண்டர்’ வழக்கின் பின்னணியில் அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அமித்ஷாவுக்கு பதிலாக இந்த பிரஃபுல் கோடா பட்டேல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் அதற்குப் பிறகுதான் குஜராத் மாநிலத்தில் நிறைய இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டனர். அதற்குப் பின் 2012ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டேல் தோல்வி அடைந்தார். மோடி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இந்த பிரஃபுல் பட்டேல், டையூ-டாமன் யூனியன் பிரதேசத்திற்கு தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அங்கு போனவர் சும்மா இருந்தாரா என்றால் அதுவும் இல்லை.

பிரஃபுல் பட்டேல் நிர்வாக தலைவராக உள்ள டாமன் & டியூ யூனியன் பிரதேசத்தில் ஏழு முறை எம்பியாக இருந்தவர் மோகன் டேல்கர்.


2021 பிப் 22 அன்று மும்பையில் ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில் பிரஃபுல் பட்டேல்  தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டாமன் பகுதி அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரது பெயரையும் குறிப்பிட்டு, பிரஃபுல் பட்டேல் தூண்டுதலின் பேரில் அவர்கள் மிரட்டியதாக சொல்லியுள்ளார். மோகன் டேல்கர் இறக்கும்போதும் எம்பியாக இருந்தார்.

இவரது தற்கொலை வழக்கில் பிரஃபுல் பட்டேல் உட்பட 9 பேர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கை மும்பை போலீஸ் பதிவு செய்துள்ளது . மோகனின் மகன் அபினவ் டேல்கர் மராத்திய முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, தனது தந்தையின் மரணத்துக்கு முழுமுதற் காரணம் பிரஃபுல் பட்டேல் தான் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். பிரஃபுல் பட்டேல் தனது தந்தையிடம் 25 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அவரது கல்லூரியை அபகரிக்க திட்டமிட்டதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், டாமனில் இறந்தால் தனது மரணம் மூடி மறைக்கப்படும் என்று அஞ்சியே,  திட்டமிட்டு மும்பைக்கு வந்து அப்பா தற்கொலை கொண்டுள்ளார் என்று அபினவ் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட கொலைச்சதியுடையவரை, மிரட்டி பணம் பறிப்பவரை தான்

இப்போது கூடுதலாக லட்சதீவிலும் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறார் மோடி.

அதாவது ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகம் பார்க்கவேண்டிய பொறுப்புகளை முதன்முறையாக ஒரு அரசியல்வாதிக்கு அளித்த பெருமை மோடிக்கே சேரும். அதுவும் ஆர்எஸ்எஸ் போன்ற சமூக விரோத அமைப்புக்கு கொடுத்த பெருமைக்குரியவர் மோடி. 

சரி இந்த பிரஃபுல் கோடா பட்டேல் என்ன சட்டங்களை பிறப்பித்தார் ? எதற்காக இவ்வளவு எதிர்ப்பு ?

ஏன் அவர் திரும்ப பெறவேண்டும்? எனும் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பு லட்சத்தீவு குறித்து கொஞ்சம் அறிந்தால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலின் சதி நமக்கு புரியும்.

லட்சத்தீவில் பெரும்பான்மை அளவில் இசுலாமியர் தான் வசிக்கிறார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வசித்தாலும் எல்லோரும் தாயாய் பிள்ளையாய் தான் வாழ்கிறார்கள். பெரிதாக குற்ற வழக்குகள் அங்கே இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 8 வழக்குகளும் 2018-ல் 6 வழக்குகளும் 2019ஆம் ஆண்டு 16 வழக்குகள்  மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் 12 வழக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகள். 2019-ம் ஆண்டு போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றபடி லட்சத்தீவில் பெரிதாக எந்த குற்றச் செயலும் நடந்ததில்லை. 

பங்காராம் எனும் ஒரே தீவில் மட்டும் தான் மதுவுக்கு அனுமதி. மற்றபடி லட்சத்தீவில் வேறு எங்கும் அனுமதி இல்லை. பிற மாநிலத்தவர் லட்சத்தீவில் துண்டு நிலத்தைக் கூட விலைக்கு வாங்க முடியாது. ஏனெனில் இது பழங்குடிகளின் பூர்வீக  மண்.  இவர்களுக்கு உணவு மாட்டுக்கறி தான். பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் ஆட்டுக் கறியும், கோழிக்கறியும் கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அந்த மக்களின் உணவு முறையை புரிந்து கொள்ளலாம். 

இப்படியான அழகு பூமியை தான் பல சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது பாஜக அரசு. 


சட்டங்கள் என்ன? 

1. LDAR - Lakshadweep Development Authority Regulation -  அதாவது லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவு 2021 என்னும் பெயரில் ஒரு சட்டத்தில் திணித்து உள்ளது. இதன் மூலம் நிலங்களை அரசு எடுத்து வளர்ச்சிக்காக யாரிடமும் கொடுக்கலாம் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய நிலங்களை வாங்கி குடியேறலாம்.

2.  விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2021 (Lakshadweep Animal Preservation Regulation) சட்டத்தின் மூலமாக மாட்டுக்கறி வைத்திருந்தால் சிறை. அதுவும் ஓராண்டில் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதத்தொகை வசூலிக்கப்படும். பள்ளிகளில் அசைவ உணவு கிடையாது. சைவம் தான் ஆடு மாடு என எதையும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது. இச்சட்டத்தின் உள்நோக்கத்தை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அதாவது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் லட்சத்தீவில் மாட்டுக்கறி தான் பிரதான உணவாக வணிகமாக வைத்திருக்கிறார்கள். இதைத் தடுப்பது தான் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.

3.  பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவு (Draft Lakshadweep Panchayat Regulation, 2021) மூலமாக இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க முடியாது‌. இந்த வரைவும் இஸ்லாமியர்களை குறிவைத்து தான் கொண்டு வரப்பட்டது என குழந்தைகளுக்கு கூட புரியும்.


4. சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 2021 (Lakshadweep Anti social Activity Regulation) இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்து ஓராண்டு வரை சிறை படுத்தலாம். பொதுவாக லட்சத்தீவில் குற்றச்செயல்கள் குறைவாகத்தான் உள்ளன. இதை தேசிய குற்ற ஆவண காப்பகமே தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது இச்சட்டம் எதற்காக? யாரை அச்சுறுத்த எனும் கேள்விகள் தொடர்கின்றன. சட்டங்கள் மட்டுமல்லாது கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக காலம்காலமாக கடற்கரையில் கூடாரங்கள் அமைத்து மீன்பிடி தொழில் செய்து வரும் பழங்குடிகளின் கூடாரங்களை அடித்து அழித்து உள்ளனர். அங்கு புதிதாக  சுற்றுலாவுக்கான கட்டிங்களை எழுப்ப முயற்சித்து வருகிறது பாஜக அரசு. இவை மட்டுமல்லாது ஆசிரியர்கள் பணிநீக்கம், அங்கன்வாடி கடைகள் மூடல், ஒப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் இப்படி நீண்ட காலமாக அரசு பணியில் இருப்பவர்களை நீக்கியுள்ளது பாஜக அரசு. குறிப்பாக பால் பண்ணைகளை இழுத்து மூடி உள்ளது. அப்படியானால் பாலுக்கு என்ன செய்வது? என்று கேட்டால் குஜராத்திலிருந்து பால் இறக்குமதி செய்வோம் என்று சொல்கிறது லட்சத்தீவு நிர்வாகம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஏற்படுத்தியுள்ளார் மோடியின் நண்பர் பிரஃபுல் கோடா பட்டேல்.

எதற்காக லட்சத்தீவு குறி வைக்கப்படுகிறது? 

கடந்த 2007, 2008ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்சவுதா ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைதானவர்களில் முக்கியமானவர்கள் அசீமானந்தா சாமியாரும் பிரக்யா சாமியாரும் ஆவர்.  இவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள். அசீமானந்தா, பழங்குடி மக்களிடம் பணி செய்வதற்காக அனுப்பப்பட்டவன். குறிப்பாக அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு பழங்குடி மக்களில் பலரை படுகொலை செய்தான். 'கர்வாப்சி' நிகழ்ச்சி நிரலுக்கு பல தேவாலயங்களை அழித்து படுகொலைகளை முன்னின்று நடத்தியவன். அதன் பின்புதான் குண்டுவெடிப்பு சம்பவங்களில் அசீமானந்தா கைது செய்யப்பட்டான். இப்படி பழங்குடிகளை இஸ்லாமியர்களை அழிப்பதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் சட்டத்திற்குப் புறம்பாக அசீமானந்தா போன்றோரை அனுப்பி வைத்தார்கள். இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நேரடியாக நிர்வாக அதிகாரியாக நியமித்து சட்டத்தின்படி படுகொலைகளை நடத்துகிறது பாஜக அரசு. காஷ்மீரத்தை எப்படி சிதைத்ததோ அதே போல லட்சத்தீவையும் சிதைப்பது தான் பாஜகவின் சதித் திட்டம்.

இதற்கு முழு காரணம் அந்த தீவை கார்ப்பரேட்டுகளிடம் வணிகத்திற்காக ஒப்படைப்பது தான். அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் அந்த தீவை அதானி மாதிரியான கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைப்பதுதான் பாஜகவின் சதித்திட்டம். இதற்கான செயல் அதிகாரி தான் இந்த பிரஃபுல் கோடா பட்டேல். மோடி தான் தலைமை அதிகாரி. 65 ஆயிரம் மக்கள் உள்ள லட்சத்தீவில் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 187 வாக்குகளை தான் பாஜக பெற்றது.2019 நாடாளுமன்ற தேர்தலில் 125 வாக்குகள்தான் பாஜக பெற்றது. நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றது பாஜக. 


ஜனநாயக ரீதியாக லட்சத்தீவில் எதுவும் செய்ய முடியாத அவலத்தில், கோபத்தில் இப்படி மக்களை பழி வாங்குவது சரியா?  சனநாயகத்தை அழித்தொழிப்பது சரியா?

வன்னி அரசு

28.5.2021