18 September 2011
"அம்மா முன்ன மாதிரியெல்லாம் இல்ல... முதிர்ச்சியாவும் பொறுப்பாவும் நடக்கிறாங்க" - இது ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் ஊடகவியலாளர்களின் முதல் சந்திப்பில் செய்தியாளர்கள் அதிசயமாகப் பேசக்கொண்டது. "இனி வாரம் ஒரு பிரெஸ் மீட்" என்று ஜெயலலிதா அம்மையார் அங்கே அறிவித்ததோடு சரி, இன்றுவரை பிரெஸ் மீட் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
100 நாள் ஆட்சியைப் பற்றிக் கூறுகிறபோது, "அம்மாவிடம் மாற்றங்கள் தெரிகிறது!" என்றுதான் சரத்குமாரிலிருந்து த.மு.மு.க. ஜவாகிருல்லா வரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பெருமையடித்துக் கொண்டார்கள்.
ஆனால் அம்மாவின் போக்கில் உண்மையிலேயே மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் அடித்துச் சொல்ல முடியும். உயர்நிலையிலிருப்போருக்கு என்ன கல்வியோ அந்தக் கல்விதான் கடைநிலையிலிருக்கும் அருந்ததியருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கப்பட்ட சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் வராததுமாய் அவசரகோலமாய் ரத்து செய்து, மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கத் துடித்ததுதான் மாற்றமோ! நல்லவேளையாக உச்சநீதிமன்றம் மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றியது. உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகுதான் இன்றைக்கு வேண்டாவெறுப்பாக சமச்சீர்க்கல்வியை அரைகுறையாகவாவது நடைமுறைப்படுத்தி வருகிறார் ஜெயலலிதா.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யத் தமக்கு அதிகாரமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு, மறுநாள் அந்தக் கருத்தையே வேறுவடித்தில் சொல்லி தடுமாற்றத்தோடு ஒரு தீர்மானமாக நிறைவேற்றி தமிழர்களை ஏமாற்றினார். அது மட்டுமல்ல மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி வீரச்சாவடைந்த செங்கொடியின் தியாகத்திற்கு மதிப்பளித்து அம்மையார் அஞ்சலி செலுத்த வந்தாரா? அல்லது இரங்கல் செய்தி தெரிவித்து, அமைச்சர்களையோ அதிகாரிகளையோ அனுப்பி வைத்தாரா? இதைத்தான் ஈழத்தாயிடம் மாற்றமாகப் பார்க்கிறார்களோ!
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுப் பிரச்சினையின்போது தலித்துகளுக்கு எதிராக சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாகப் பேசியவர்தான் அம்மா ஜெயலலிதா. 7 தலித்துகளை மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொன்ற போலிசு நாய்களைக் கண்டிக்கத் துப்பில்லாத ஜெயலலிதா, வெறும் ஒரு லட்ச ரூபாயை நிதியாக அறிவித்துவிட்டு தலித்துகள் வன்முறையாளர்கள் என்று முத்திரை வேறு குத்தினார். தன் ஆட்சிக் காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட குடிமக்களுக்கு ஆறுதல்கூடச் சொல்ல மனமில்லாத ராட்சசியாகவே செயல்படும் ஜெயலலிதாதான் மாறிவிட்டதாக இங்கே 'திரைக்கதை' அமைத்து 'இயக்கம்' நடத்துகிறார்கள்.
தலித்துகள் பிரச்சனையைக்கூட விடுங்கள், இங்கே தலித்துகளை யார் மனிதர்களாகப் பார்க்கிறார்கள்... அம்மா மட்டும் பார்ப்பதற்கு?
ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று 25 ஊர்களுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆறாம் நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்களே. உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அணுஉலையால் எந்தப் பாதிப்பும் நடக்காது என்று அணுவிஞ்ஞானி போலவே அறிக்கை விடுகிறாரே அம்மையார்.. இதுதான் மாற்றமோ!
இந்துத்துவ பயரங்கரவாதி நரேந்திரமோடி குஜராத்தில் 72 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியதும் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையையும் மைத்ரேயனையும் இங்கிருந்து குஜராத்துக்கு அனுப்பி வைத்து வாழ்த்துவதற்குத் தெரிந்த அம்மையார், இங்கே கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கும் மக்களின் உண்ணாவிரதத்தை மட்டும் கண்டும் காணாமல் இருப்பதுதான் மாற்றமா? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் அம்மையாருக்கு ஆதரவு கோரும் ஜவாஹிருல்லாகூட இதை மாற்றம்தான் என்று ஏற்றுக்கொள்கிறாரா?
அட, இதைக்கூட விடுங்கள்! 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததுகொண்டதுபோலவே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிக்காமல், பேச்சுவார்த்தை நடத்தாமல், 10 மாநகராட்சிகளுக்கும், 52 நகராட்சிகளுக்கும் வேட்பாளர்களைத் தான்தோன்றித்தனமாக அறிவுத்துள்ளாரே, இதையும் மாற்றம்தான் என்று சொல்லுகிறார்களா? மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் அவசர அவசரமாக போயஸ் தோட்டத்திற்கு ஓடி நிச்சயதார்த்தத்திற்கு நாள்குறிக்கப் படாதபாடுபடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமியோ 'காத்திருக்கிறோம் அழைப்புவரும்!' என்று தவம் கிடக்கிறார். கேப்டன் என்று அவரே அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் 'பொறுத்திருங்கள் பார்ப்போம்!' என்று கேப்டன் டி.வி.யில் தொண்டர்களிடம் மன்றாடுகிறார். இலவுகாத்த கிளிகளாக இடது, வலது உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் காத்துக்கிடக்கிறார்கள் போயஸ் வாசலில். இதை ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறையின் முதிர்ச்சியாகப் பார்க்கிறார்களோ! நில அபகரிப்புப் புகார் என்கிற பெயரில் தி.மு.க.வினரை வரிசையாக வரிந்துகட்டிக்கொண்டு, சிறைக்கு அனுப்பும் பழிவாங்கும் நடவடிக்கையைக்கூட கண்டிக்க முடியாமல் 'நிதான'மாகச் செயல்படுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஜெயலலிதா என்ன செய்தாலும் அதிமுகவினரை முந்திக்கொண்டு, அல்லது போட்டி போட்டுக்கொண்டு நாம் தமிழர் கட்சியினர் பாராட்டு விழாக்களை நடத்தி அம்மையார் செய்வதை உற்சாகப்படுத்துவதைப் பார்த்தால், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் அம்மையார் ஒரு லட்சம் வழங்கியதற்குக்கூட பாராட்டுவிழாக் கூட்டங்களை நடத்தினாலும் நடத்துவார்கள். அந்த அளவுக்கு ஆரியத் தாயை ஈழத்தாயாக உருவகப்படுத்துகிறார்கள்.
அம்மையாரின் போக்கும் இந்துத்துவ அடிப்படைக் கொள்கைகளும் அப்படியேதான் தொடர்கின்றன. ஆனால் மாறிவிட்டார் என்று இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் உள்ளிட்ட கூட்டணிக் காகங்கள் கரைவது ஏனோ புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பாடல்தான் தேவையில்லாமல் நமக்கு நினைவுக்கு வருகிறது...
"குரங்கு கையிலே மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்
மாறாதய்யா மாறாது
மணமும் குணமும் மாறாது"
***
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
வணக்கம் அண்ணா மிக நல்ல கட்டுரை.ஆனா அந்த பாட்ட கொஞ்சம் முழுசா போடுங்களேன்.
Post a Comment