25 September 2011
உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா? அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா? வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா? எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?
ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
நள்ளிரவில் சாதி வெறியர்கள் வந்து கதவைத் தட்டினாலும் தட்டுவார்கள் என்று உங்கள் சகோதரிகளைப் பக்கத்து ஊரில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களா?
உங்கள் சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த சாதி வெறியர்களை நள்ளிரவில் எதிர்கொண்டிருக்கிறீர்களா?
குடிக்கிற கிணற்றில் மலத்தைக் கரைத்து ஊற்றி அந்த நீரை குடிக்கச் செய்த கொடூரத்தை அனுபவத்திருக்கிறீர்களா?
செத்துக் கிடக்கும் தம்பியைப் பார்க்க முடியாமலும் அடிபட்டுக் கிடக்கும் அப்பாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமலும் போலீசுக்குப் பயந்து கொண்டு நாள் முழுக்கக் காட்டிலும் மேட்டிலும் பசியும் பட்டினியுமாய் அலைந்து திரிந்திருக்கிறீர்களா?
- அன்றாடம் நடக்கும் சாதிக் கலவரங்களில் தலித்துகள் சந்திக்கும் இந்தக் கொடுமைகள், இலங்கையில் நடைபெறும் சிங்கள இனவெறிக் கொடுமைக்குச் சற்றும் குறையாததுதான்.
ஈழத்தில் சிங்கள இனவெறியர்களால் தமிழர்களுக்கு என்ன நிலையோ? தமிழகத்தில் உயர்சாதித் தமிழர்களால் தாழ்த்தப்பட்டோருக்கு தினம் தினம் அதே நிலைதான்,
மாவீரன் இமானுவேல் சேகரன், மாவீரன் மேலவளவு முருகேசன் படுகொலைகள் முதல் இன்றைக்குப் பரமக்குடிப் படுகொலைகள் வரை தாழ்த்தப்பட்டவன் ஒவ்வொருவனும் இக்கொடுமைகளை அனுபவித்து வருகிறான்.
இந்த ஒடுக்குமுறை அளவுகோலிலிருந்துதான் ஈழத்தில் தமிழர் மீதான ஒடுக்குமுறையை விடுதலைச் சிறுத்தைகள் எதிர்க்கிறது, அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடிய விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறது. ஒடுக்குமுறை கருத்தியல் வடிவத்தில் வந்தாலும் அல்லது வேறு எந்த வடிவத்தில் வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
தலித்துகளைப் புறக்கணித்து ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட திராவிட அரசியலின் விளைவால்தான் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் தமிழ்த்தேசிய, சாதி ஒழிப்பு இயக்கம் உருவானது. ஆனால், தமிழ்த்தேசிய அரசியலிலும்கூட தலித்துகளை ஓரங்கட்டி ஒடுக்க முயற்சிகள் நடப்பதுதான் வேதனையிலும் வேதனையாக உள்ளது.
இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவராக மதிக்கப்பட வேண்டிய, மதிக்கப்படக் கூடிய தலைவராக இருக்கின்ற அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் கூட இந்தத் "திராவிடச் சதி'' யில் மாட்டிக் கொண்டு தலித்துகள் விடுதலைக்கு எதிராக இருப்பது மிகவும் வருத்தப்படக் கூடிய அவலமாக இருக்கிறது.
'பொடா' சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடலு£ர் சிறையிலிருந்து வெளியே வந்த போது, கடலு£ரிலிருந்து சென்னை வரை பட்டாசு வெடித்து வாழ்த்தி வரவேற்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். அது மட்டுமல்ல பழ. நெடுமாறன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின் 'பொடா எதிர்ப்பு இயக்கம்' என்கிற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுக்கப் போராட்டங்களை முன்னெடுத்த ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்.
தலைவர் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பதற்கேற்ப, அய்யா பழ.நெடுமாறன் அவர்களை தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பெருமைப்படுத்தியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். அந்தளவுக்கு அய்யா அவர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் பெரும் மரியாதை வைத்தார்கள். ஆனால், அந்த மரியாதை சடசடவெனச் சரிந்து போகும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள் உள்ளன.
2009ஆம் ஆண்டு சனவரி இரண்டாம் நாள் கிளிநொச்சியை இந்திய அரசின் உதவியுடன் சிங்களப் படை கைப்பற்றியது என்ற அந்தக் கொடிய செய்திக்குப் பின் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் எடுத்த பெரும் முயற்சி சாதாரணமானதல்ல. திருச்சியில் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள் நடத்திய மாநாட்டில் பேசும்போது, "அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஒன்று திரட்டி போரை நிறுத்தப் பாடுபடுவேன்'' என்று கூறிவிட்டு ஒவ்வொரு தலைவரின் வீட்டு வாசலுக்கும் அலைந்ததுதான் மிச்சம். அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவால்தான், விரக்தியின் விளைவால்தான் சனவரி 16ஆம் நாள் மறைமலைநகரில் சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டார்.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துத் தலைவர்களையும் ஒன்று சேர்க்க எழுச்சித் தமிழர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததற்குக் காரணம் அய்யா நெடுமாறன் அவர்கள்தான். தமிழ்த் தேசியக் களத்தில் மூத்த முதிர்ச்சியான தலைவராக இருந்து முன்னெடுக்க வேண்டிய இப்பணியை 'கடைநிலை'யிலிருக்கிற தொல். திருமாவளவன் அவர்கள் எடுத்ததால்தான் அந்த முயற்சியை முறியடித்தார் என்பதை அதிலிருந்து உள் அரசியலாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
'மேதகு பிரபாகரன்', 'தமிழ்த்தேசியம்' என்கிற இந்த நெருப்புச் சொல்லாடலை 'பண்டிதத் தமிழ்' போல முடக்கி ஒரு வளையத்திற்குள் வைத்திருந்தவர்தான் அய்யா நெடுமாறன் அவர்கள். அதை உடைத்து தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும், சேரிகள் வரை கொண்டு சேர்த்த பெருமை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களையே சாரும். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே சாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திச் செயல்படும், தேசிய இன விடுதலைக்காகக் களமாடும் ஒரே தலித் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்தான். "இந்திய தேசியத்திற்கு மாற்று தமிழ்த் தேசியம்''தான் என்று பிரகடனப்படுத்திய இயக்கமும் விடுதலைச் சிறுத்தைகள்தான். ஈழத் தமிழருக்குக் குரல் கொடுப்பதும் தலித் அரசியல்தான் என்று முழங்கி, விடுதலைச் சிறுத்தைகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளிலும், காதணி விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் மிகத் துணிச்சலாக மேதகு பிரபாகரன் அவர்களது படங்களைப் போட்டு கடைக்கோடி மக்களிடத்திலும்கூட தமிழ்த் தேசிய அரசியலைப் பரப்பியது விடுதலைச் சிறுத்தைகள். விடுதலைப் புலிகளை ஆதரித்தால் "பொடா, தடா'' என்று ஜெயலலிதா அரசு அனைவரையும் கைது செய்து சிறைப்படுத்தி, அச்சுறுத்திக் கொண்டிருந்த போதே துணிச்சலாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களது படங்களைப் பேனர்களாகப் போட்டு அரசுக்கு சாவல் விட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். அந்தளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில், ஈழ விடுதலை அரசியலில் சமரசமில்லாமல் களமாடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.
சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசிய விடுதலை, பெண்ணிய விடுதலை, வர்க்க பேத ஒழிப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்கிற ஐந்து கொள்கைகளைக் கட்சியின் உயிர் முழக்கமாக அறிவித்து தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கி வருபவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள்.
தமிழகத்தில் நடக்கும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஒடுக்குமுறைகளை உடைக்கக் களமாடும் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்த் தேசியத் தளத்தில் எந்தக் கட்சிகளும் முன்னெடுக்காத மாநாடுகளை, போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நெருப்பைப் பற்ற வைத்தது. ஆளும் அரசு ஒடுக்குமுறைச் சட்டங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்த போதுதான், "யார் அமைதியாக இருந்தாலும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்'', என்று கருத்துரிமை மாநாடு நடத்தி அரச அடக்குமுறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்கள் சிறுத்தைகள்.
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணி ஒருபுறம், தேசிய இன விடுதலைப் பயணம் மறுபுறம் என ஒரே நேரத்தில் இரண்டு போரை நடத்தி வரும் எழுச்சித் தமிழரை தமிழ்த் தேசியக் களத்திலிருந்து அப்புறப்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் நடைபெற்றன. அதுவும் எந்த ஈழ விடுதலை அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தாரோ அந்த அரசியலை வைத்தே அப்புறப்படுத்த முயற்சிகள் நடந்ததுதான் வேதனையிலும் வேதனை.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் "அ.தி.மு.க - தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்கள் மட்டும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்!" என்று தலைவர் திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை தமிழ்த் தேசியவாதி ஒருவர்கூடக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அ.தி.மு.க. அணிக்கு இழுக்க பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்தார்கள்.
கொள்கைரீதியாகவே தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழீழ விடுதலையையும் வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்யும் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கவே தமிழ்த்தேசியவாதிகள் ஆர்வம் காட்டினார்களே ஒழிய, தமிழ்த் தேசியக் கூட்டணி ஒன்று உருவாகக் கிடைத்த வாய்ப்பை யாரும் பயன்படுத்த விரும்பவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் 'புரோக்கராகச்' செயல்படும் நடராஜனின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துபவராகவே அய்யா நெடுமாறன் செயல்பட்டார் என்பதுதான் ஆறாத வடுவாக தமிழக அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. அய்யா பழ. நெடுமாறன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவரும் அல்ல. அவரது கடந்த கால அரசியல் என்பது பார்ப்பனியத்தை உள்வாங்கிய அல்லது பார்ப்பனியத் தலைமையைக் கொண்டு வர முயற்சி செய்த சோ, சுப்ரமணியசாமி, இந்து ராம் ஆகியோருக்கு நிகராகவே அமைந்தது, சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதாவின் இன்னொரு அரசியல் புரோக்கராகத்தான் அய்யா நெடுமாறன் செயல்பட்டார்.
அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் விருப்பப்படி அ.தி.மு.க. கூட்டணிக்கு வராத ஒரே காரணத்திற்காக "துரோக''ப் பட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் மீது தமிழ்த் தேசியவாதிகள் சுமத்தினார்கள். கால் நு£ற்றாண்டாய் ஈழ விடுதலையே உயிர் மூச்சு என்று செயல்பட்ட எழுச்சித் தமிழர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபோது தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவராக மதிக்கப்படும் பழ. நெடுமாறன் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதி காத்ததை, அந்தக் குற்றச்சாட்டை அவரும் ஏற்றுக்கொண்டதாக அல்லது அவரே சுமத்துவதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. "திருமாவளவன் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் கூட, தமிழ்த்தேசிய அரசியலில் ஈழ விடுதலை அரசியலில் நேர்மையாகச் செயல்படுபவர்'' என்று சொல்லி இருக்கலாம்.
கேவலம் தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக இலங்கைத் தமிழர்ப் பிரச்சனையைப் பேசிய ஜெயலலிதாவை நம்பும் தமிழ்த்தேசியவாதிகள், கால் நு£ற்றாண்டாய் ஈழ விடுதலையே தமது மூச்சாகக் கொண்டு செயல்படும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் நேர்மையைச் சந்தேகிப்பது எவ்வளவு பெரிய கொடுமை? மேயுற மாட்டைக் கெடுக்கிற நக்குற மாடுகளாக தமிழ்த் தேசியவாதிகள் மாறிப் போனதற்கு யார் காரணம்? காற்று நுழைய முடியாத இடத்தில் கூட தமிழ்த் தேசிய அரசியலைக் கொண்டு போய்ச் சேர்த்த எழுச்சித் தமிழருக்கு துரோகப் பட்டமா? இதையெல்லாம் கண்டும் கேட்டும் பழ. நெடுமாறன் அவர்கள் அமைதி காத்தது ஏன்? தமிழ்த் தேசியத் தனி அணி அமைக்க எழுச்சித் தமிழர் எடுத்த முயற்சிக்குத் துணையாகச் செயல்பட்டிருக்கலாமல்லவா! மூத்தவர், பொறுப்புள்ளவர், அனுபவமிக்கவர், என்று மதிக்கப்படக்கூடிய அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு இதில் அக்கறை இருக்க வேண்டாமா? விடுதலைச் சிறுத்தைகளின் இந்தத் தமிழ்த் தேசிய அரசியலை அப்படியே முன்னெடுக்க வேண்டாமா? இதையெல்லாம் செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகள் மீது அவது£று பரப்பியவர்களோடு கொஞ்சிக் குலாவுவது "அவது£றுகளுக்கு'' ஆதரவாகச் செயல்படுவதாகத் தானே அர்த்தம்? உள்நோக்கம்தான் என்ன? உள் அரசியல்தான் என்ன? விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல, சேரியின் கடைசி இளைஞனின் இதயத்தை ரணமாக்குகின்றன இப்போக்குகள்.
தமிழீழ விடுதலைக் களத்தில் விடுதலைப் புலிகளைப் போலக் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளை அப்புறப்படுத்தி விட்டு நெடுமாறன் போன்றவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்? யாரை வைத்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்?
சேரிகளை புலிகளின் முகாம்களாக மாற்றிய சிறுத்தைகளின் அடிப்படையான அரசியலான தலித் விடுதலையில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது?
சிங்களரின் கொடுமைகளைக் கண்டும் பதறி தமிழகம் முழுக்கப் போராட்டங்களை நடத்திச் சிறை சென்றவர்களில் தமிழத்தில் தலித்துகள்தான் அதிகம். 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த தலித்துகள்தான்.
தமிழீழ விடுதலைக்காக சேரிகள் எல்லாம் கொதித்தெழுந்து அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தியது, நடத்திக் கொண்டும் இருக்கின்றோம். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் து£க்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுக்க விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழகத்தை உசுப்பியது. இப்படிப் பல போராட்டங்களை, தலித் மக்களின் விடுதலையை முன்வைத்துப் போராடும் அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் நடத்தியது. ஆனால், கடந்த செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை மனித நேயத்தைச் சாகடிக்கிற செயலாக அனைவரும் பார்க்கிறார்கள். பா.ஜ.க. கூட இதனைக் கண்டித்து அறிக்கை விடுத்தார்கள்.
ஆனால், இக்கொடிய அடக்குமுறையைக் கண்டித்தோ தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டித்தோ தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவர் பழ. நெடுமாறன் எந்த அறிக்கையும் கொடுக்காதது ஏன்?
அவருடைய தற்காலிகத் தலைவர் ஜெயலலிதாவைப் போலவே தலித்துகள் கொல்லப்படுவதை இவரும் நியாயப்படுத்துகிறாரா? அல்லது அதை இனக் கலவரமாகப் பார்க்கிறாரா? அல்லது ஜெயலலிதா வருத்தப்படுவார் என்று கருதி அமைதி காக்கிறாரா? அல்லது அடுத்த நெற்கட்டும் செவல் பூலித்தேவன் நிகழ்ச்சியில் நடராஜனுடன் கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்பதால் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மனம் இல்லையா?
செத்து மடிந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழரில்லையா? நேரில் செல்ல முடியவில்லையென்றால் ஏன் ஒரு இரங்கல்கூட அனுப்ப முடியவில்லை.
ஈழத் தமிழர்கள் படும் கொடுமை கண்டு கண்ணீர்விடும் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சேரித் தமிழர்கள் சாகடிக்கப்படும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீராவது வடித்தால்தானே, அவர் ஈழத் தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் உண்மையானதாக இருக்கும். மூவரின் து£க்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி எதிர்வரும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் நாள் தமிழகம் முழுக்கப் பட்டினிப் போராட்டத்தை அறிவிக்கும் அய்யா நெடுமாறன் அவர்களால் தமிழகம் முழுக்க அல்ல, எங்காவது ஓரிடத்திலாவது பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டமோ பட்டினிப் போராட்டமோ நடத்தினால் என்ன குடிமுழுகி விடப் போகிறது? சிங்கள இனவெறிக் கொடுமையைக் கண்டிக்கும் மனம் சாதி வெறியை மட்டும் கண்டிக்க மறுப்பது ஏன்?
திராவிட அரசியல்தான் தலித்துகளை அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் புறக்கணித்தே வந்தது. தலித்துகளைக் கொன்று குவித்தே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலிலும் தலித்துகளை இப்படித்தான் நடத்த வேண்டுமா?
இதற்கெல்லாம் பதில் சொன்னால்கூட தகுதிக் குறைவாக அய்யா நெடுமாறன் அவர்கள் கருதலாம். ஏனென்றால், கடந்த ஆகத்து 31.8.2011 அன்று மங்கலவாடி கிராமத்தில் கரும்புலி செங்கொடி வித்துடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று எழுச்சித் தமிழர் பேசும் போது, "தமிழ்த் தேசியக் களத்தில் ஒன்றிணைந்து போராட விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இருக்கிறது. உங்களோடு சமமாக இல்லை, நு£றடி பின்னால் நின்று, ஆயிரம் அடி பின்னால் நின்று களமாடத் தயாராக இருக்கிறோம் என்றார். இறுதியாக பேசிய அய்யா நெடுமாறன் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் பேச்சு புரியாமலா போயிருக்கும்? அந்த உணர்வை உட்கொள்ளாமல் இருந்திருப்பாரா? அதற்குப் பதில் சொல்லாமலே நழுவிக் கொண்டாரே. "திருமாவளவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?'' என்கிற எண்ணமா? அல்லது ஒன்றிணைந்து செயல்படத் தேவையில்லை என்கிற எண்ணமா? இதைத் தவிர வேறென்ன அய்யா நெடுமாறன் அவர்களின் செயல்பாட்டில் இருந்துவிடப் போகிறது! 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மானுடத்தில் தமிழ்க்கூடல் மாநாட்டில் பேசிய எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் "இங்கே அமையக்கூடிய தமிழீழ அரசு சாதியற்ற அரசாக அமைய வேண்டும். அமையுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் புதுவை ரத்தின துரை அவர்கள், "நாங்கள் அமைக்கும் தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்படும். அப்படி இல்லையென்றால், அந்தத் தமிழீழமே தேவையில்லை'' என்று பதில் கூறினார்.
இந்த நேர்மையும் நெஞ்சுரமும் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்று, அவர்களை ஆதரித்துச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் ஒவ்வொரு தமிழ்த் தேசியவாதிக்கும் இருக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள், இந்த நேர்மையும் நெஞ்சுரமும் அய்யா நெடுமாறன் அவர்களுக்கு இருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பிற்கினிய அண்ணனுக்கு வணக்கம்,பலமுறை நான் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.அண்ணன் எழுசித்தமிழர் தான் முதன்மையான தமிழ்தேசிய தலைவர்.முதலில் நாம் அதை ஏற்றுக்கொள்வோம் பிறகு முழு தமிழ்சமூகமும் ஏற்கும்.அதைவிடுத்து இவர் ஏற்கவில்லை அவர் ஏற்கவில்லை என்பதே நம் தலைவரி அசிங்கப்படுத்தும்.
///கேவலம் தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக இலங்கைத் தமிழர்ப் பிரச்சனையைப் பேசிய ஜெயலலிதாவை நம்பும் தமிழ்த்தேசியவாதிகள், கால் நு£ற்றாண்டாய் ஈழ விடுதலையே தமது மூச்சாகக் கொண்டு செயல்படும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் நேர்மையைச் சந்தேகிப்பது எவ்வளவு பெரிய கொடுமை? ///
நச்சுன்னு சொன்ன நாலு வார்த்தைகள் இது.
தமிழ் தேசியங்களின் அரசியல் என்பது,இங்கே தி.மு.க.விற்கு எதிரான அரசியலாகத்தான் இருக்கிறது.அதோடு கைகோர்க்கும் அனைவரையும் துரோகிகள் என்கிறார்கள் இந்த யோக்கியர்கள்(?)இதைவிடக் கொடுமை இவர்களை இன்னமும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் நம்புகிறார்கள்.
Post a Comment