24 August 2014

விஜய்யின் கத்தி திரைப் படத்திற்கு சீமான் வைத்த 'ட்விஸ்ட்'

திரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. 
ஒரு காட்சியில் ரவுடிகள் அத்தனை பேரையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றும்போது, "என்னையும் ஏத்திக்கங்கய்யா.. இந்த ஏரியாவுல நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்.. நம்புங்கய்யா நானும் ரவுடிதான்யா" என்று வடிவேலு சொல்வதைப்போல தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் 'ஃபார்ம்' ஆயிட்டு அடுத்து என்ன பண்ணுவதுன்னு முழிச்சிக்கிட்டிருக்காங்க.


நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராக 'ஃபார்ம்' ஆயிட்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.  தேர்தல் காலங்களில் ஒரு வியாபாரியைப்போல யார் அதிகமா சீட்டும் நோட்டும் தருகிறார்கள் என்று கணக்குப் போட்டு அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்தார்.  இதைப் போலத்தான் மருத்துவர் இராமதாசும்.  இவர் பேசுறதக் கேட்டா (என்னத்தப் பேசுனாலாம் அந்தக் கருமாந்திரத்தையும் ஊடகங்கள் பெரிசா போடுறதுதான் கொடுமை) ஏதோ உண்மை போலவே இருக்கும்.  ஆனால் அதில் வன்முறைத் தூண்டலும் ஏமாற்று வேலையும்தான் மிஞ்சும் (கொஞ்சம் நடிங்க பாஸ்).


இதேபோல் நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் போன்ற மாபெரும் தலைவர்களும் தலைவர்களாக 'ஃபார்ம்' ஆகி தமிழக அரசியலையே கலக்கோ கலக்கு என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். (இவர்களுடைய இலக்கும் 2016இல் தமிழகத்தின் முதல்வராவதுதானாம்!)

இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களும் ஒரு தலைவராக 'ஃபார்ம்' ஆகி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எந்தக் கோட்பாட்டுப் புரிதலுமற்ற அரசியல்வாதியாகவே அம்பலப்பட்டு நிற்கிறார். கடந்த காலங்களில் அவரது பேச்சுக்கள் பேட்டிகளைப் பார்த்தால் சாமானியனுக்கும் இது புரியும்.

 'கத்தி' திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த பிரச்சினை குறித்து சீமானின் கருத்து ஓர் உதவி இயக்குநரின் கருத்தைவிட மோசமாக இருக்கிறது (உதவி இயக்குநர்கள் மன்னிக்க).  மாணவர் சமுதாயமும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் (நம்ம படித்துறைப் பாண்டி பழ.நெடுமாறனைத் தவிர),  கத்தி திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் மீது எதிர்ப்பைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும் சூழலில் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் லைகா நிறுவனத்திற்கும் அந்த இயக்குநருக்கும் ஆதரவாகப் பேசுவதன் மூலம் மேலும் அம்பலமாகியிருக்கிறார்.

இராஜபக்சேவின் வணிக முகமூடியாக லைகா நிறுவனம் இருப்பதை தமிழ்ச் சமூகம் நிரூபித்த பிறகும் அண்ணன் சீமான் கத்தி திரைப்படத்தையோ, லைகா நிறுவனத்தையோ எதிர்க்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது அவரது விருப்பம்.  ஆனால் நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாசும் தமிழ்ப் பிள்ளைகள், அவர்களை நான் எதிர்க்க மாட்டேன் என்று உளறுவதன் நோக்கம் என்ன?  

விஜய் தமிழ்ப் பிள்ளையாய் இருக்கட்டும், அல்லது முதலியார் பிள்ளையாகக்கூட இருக்கட்டும். அது நமக்குப் பிரச்சனையல்ல.  அந்தத் தமிழ்ப் பிள்ளை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? என்பதுதான் நம் கேள்வி.

புலிகளின் இனவிடுதலைப் போரைப் பற்றியோ தமிழர்களின் மொழிப்போர் பற்றியோ தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றியோ அல்லது தமிழ்நாடு சேரி - ஊர் என்று பிரிந்து கிடப்பதைப் பற்றியெல்லாம் நடிகர் விஜய்யிடம் யாரும் எந்தக் கருத்தையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.  ஏனென்றால் அதைப் பற்றிய எந்தக் கருமாந்திரமும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் அப்படித்தான்.

ஆனால் விஜய் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படமாவது சமூக அக்கறையுள்ள படமாக வந்துள்ளதா?  அநேக படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசப் பாடல்களும்தான் மிஞ்சுகின்றன.  சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல் கடக்கும் போக்குதான் விஜய் போன்ற பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு உண்டு.  நாங்கள் கலைஞர்கள், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பெரிய அப்பாடக்கர்கள் மாதிரி வடக்கே போய் திக்கித் திணறி ஆங்கிலம் கலந்து பேசுவது, தமிழகத்திற்கு வந்தால் மட்டும் தமிழ்ப் பிள்ளைகள் என்று பெருமை பேசுவது இதையெல்லாம் யாரை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் வசனங்கள்.

இனப்படுகொலைக் குற்றவாளியாக இராஜபக்சேவை அறிவிக்க வலியுறுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகம் முழுக்க கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.  அந்தப் பொறுப்பை தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டது. கடந்த 2011 சூலை 12 அன்று சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.  இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், திரைப்படத் துறையினர் என்று அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. அனைவரும் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வெறியோடு கையெழுத்திட்டனர்.  நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமான திரைத் துறை கலைஞர்கள் தாமாகவே முன்வந்து கையெழுத்திட்டனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் 25-7-2011 அன்று நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது கையெழுத்து வாங்க முயற்சிக்கப்பட்டது.  ஆனால் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார்.  அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டபோது, "அதெல்லாம் நாங்க போட முடியாதுப்பா.  நாங்க சினிமாக்காரங்க.. இதிலெல்லாம் தலையிட முடியாது" என்று கூறி அவரும் மறுத்துவிட்டார்.

 


இப்போது சொல்லுங்கள் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தும் ஒரு படிவத்தில் கையெழுத்திட மறுத்ததன் மூலம் விஜய் இராஜபக்சேவுக்கு ஆதரவாக, அதாவது அவரை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம்.  இப்போது இராஜபக்சேவின் நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு அவர் நடித்துக் கொடுப்பது என்பது ஏதோ தெரியாமல் நடந்ததல்ல.  திரை மறைவில் பல திட்டங்களை வடிவமைத்துத்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் இந்தத் தமிழ்ப் பிள்ளை.
முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு படங்களில் நடிப்பது, தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பது, தமிழ்ப் பண்பாட்டுக்கெதிராகத் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கலாச்சாரச் சீரழிவுப் பேர்வழியான விஜய் தமிழ்ப் பிள்ளை என்பதற்காக அவரைத் தூக்கி வைத்து உச்சி முகர்ந்திட முடியுமா?


அண்ணன் சீமான் நடிகர் விஜய்யை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துள்ள இயக்குநர் முருகதாசை (ரிசர்வேஷன், கரப்சன், ரெக்கமண்டேசன் இவைதான் திறமையானவர்களுக்கு எதிரானது என்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருக்குக் கூடத் தெரியாத, அரிய தத்துவத்தை தனது ஏழாம் அறிவு மூலம் சொன்னவர்தான் நம்ம முருகதாஸ்) ஆதரிக்க ஆயிரத்து இரண்டு காரணங்கள்கூட இருக்கலாம்.  அது பிரச்சனையல்ல.  ஆனால் தமிழ்ப் பிள்ளை என்கிற ஒரு காரணத்தை மட்டும் முன்மொழிந்தால் திருகோணமலை பிள்ளையான்கூட நானும் 'தமிழ்ப் பிள்ளை'; என்று சொல்ல மாட்டாரா?  கே.பி.யும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும்கூட நாங்களும் தமிழ்ப்பிள்ளைகள்தான் என்று ஒரு திரைப்படம் எடுத்தால் அண்ணன் சீமான் அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.

பாவம் நம் மாணவர்கள் செம்பியன், மாறன், பிரபா போன்றோர்தான் அந்தத் திரைப்படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து அடி வாங்குவார்கள்.  தமிழ்கூறும் நல்லுலகம் அதையும் வேடிக்கை பார்க்கும்.

எல்லோருக்கும் வாழ்நாள் இலட்சியம் என்று ஒன்று இருக்கும்.  சிலருக்கு விஜய்யை வைத்துப் படம் எடுப்பதுதான் வாழ்நாள் இலட்சியமாக இருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

திரைப்படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்டுகளைப் போலத்தான் அண்ணன் சீமானும் ஒரு ட்விஸ்ட்டாக 'கத்தி', 'புலிப் பார்வை' படங்களுக்கு அமைந்திருக்கிறார்.

ஸ்டார்ட்... ரெடி... ஆக்ஸன்... தமிழ்ப் பிள்ளைகளே... கொஞ்சம் நடிங்க பாஸ்.

- வன்னிஅரசு.

17 August 2014

ஜெயலலிதாவின் 23ஆம் புலிகேசி ஆட்சி


வன்னிஅரசு
23ஆம் புலிகேசி வடிவேலு மன்னரைப்போல் ஆட்சி செய்து வருகிறார் ஜெயலலிதா.   மக்களுக்காக ஆட்சி நடத்துவதாகச் சொல்லிவிட்டு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் என்று அவருக்கு அவரே சொரிந்து வருகிறார்.  சட்டப் பேரவையில் 5 நிமிடப் பேச்சில், 50 முறை அம்மா அம்மா என்று சொன்னால்தான் அனுமதி கிடைக்கும்.  தமிழகத்தில் இனி மின்வெட்டே ஏற்படாது என்று சட்டப்பேரவையிலே அறிவித்தார்.  அறிவித்த நாளிலிருந்து 5 மணி நேரம், 6 மணி நேரம் என்று மின்வெட்டு தமிழகத்தை இருட்டாக்கியது.  அந்த இருட்டில் வழிப்பறியும், கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கிறது.   இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி. 
தருமபுரியில் சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்திலிருந்து தொடங்கிய மரம் வெட்டிகளின் வன்முறைப் பயணம், தங்குதடையின்றி மாவட்டம் மாவட்டமாகப் தொடர்ந்தது.  அதனைத் தடை செய்ய வக்கில்லாத ஜெயலலிதாவால்தான் இளவரசன் கொல்லப்பட்டான்.  ஜெயலலிதா வாய்மூடி அமைதி காத்ததால்தான் சாதிவெறியர்கள் பலமடங்கு துணிச்சலுடன் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கினர்.   அந்தக் கும்பலை அடக்க முடியாத ஜெயலலிதா அரசு விடுதலைச் சிறுத்தைளை ஒடுக்கத் துடிக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலைவர் திருமாவளவன் நுழையவே தடை விதித்தது.  சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவே அனுமதி மறுத்தது.  நத்தம் காலனி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உடை, தட்டு முட்டு சாமான்கள் மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றை ஓராண்டாக அம்மக்களுக்குக் கொடுக்கக்கூட அனுமதிக்காத ஈவிரக்கமற்றராக ஜெயலலிதா நடந்துகொண்டது அவரது தலித் விரோத நடவடிக்கை மட்டுமல்ல மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அம்மக்களுக்களோடு மக்களாக நின்று அழக்கூட தலைவர் திருமாவளவனுக்கு இன்று வரை அனுமதியில்லை.  கொல்லப்பட்ட இளவரசன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தத் தடை விதித்த ஈவிரக்கமில்லாத ஜெயலலிதாதான் ‘அம்மா’வாம்.  அப்படிப்பட்ட கொடு மனம் படைத்த ஜெயலலிதா இப்போது விடுதலைச் சிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாட்டுக்குத் தடை விதித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கு என்கிற முழக்கத்தில் என்ன தவறு இருக்க முடியும்?  கல்விக் கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் வரவேண்டிய கப்பத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்பதால்தான் இந்தத் தடையா? எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தறிவை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது.  ஆனால் ஜெயலலிதா போலீசு சேலத்தில் ஆகஸ்டு 17 அன்று நடைபெறும் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது.  சென்னை உயர் நீதிமன்றம் அத்தடையை நீக்கி மாநாடு நடத்த ஆகஸ்டு 14 அன்று அனுமதி அளித்தது.  தமிழகம் முழுக்க கல்வி உரிமை மாநாட்டை விளக்கி சைக்கிள் பேரணி, பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் 16ந்தேதி காலையில் திடீரென சேலம் மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.  அதாவது சொந்த வாகனங்களில்தான் மாநாட்டிற்கு வரவேண்டும்.  வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்பதுதான் அந்த ஆணை.  ஜெயலலிதா எப்படிப்பட்ட கொடுமனம் படைத்தவராக இருந்தால் இப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க முடியும். தலித்துகள் எத்தனை பேருக்கு சொந்த வாகனங்கள் இருக்கின்றன?  தமிழகத்தில் அப்படிப்பட்ட செல்வாக்கிலா தலித்துகளின் நிலை உயர்ந்துள்ளது?  இப்படிப்பட்ட உத்தரவு வேறு கட்சியின் மாநாட்டிற்குப் போட்டிருக்கிறார்களா?  முழுக்க முழுக்க சாதிவெறியை வளர்த்தெடுக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு இப்படி தடை விதித்திருந்தால் ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்கலாம்.  ஆனால், கல்வியை வளர்த்தெடுக்க நடத்தப்படும் ஒரு மாநாட்டிற்குத் தடை விதித்திருப்பதுதான் அம்மாவின் துணிச்சலா?  எளியவர்களிடம் சட்டத்தைக் காட்டி அடக்க நினைப்பதுதான் துணிச்சலா?
எளிய மக்களின் விடுதலைக்காக தன்னை விதைநெல்லாக விதைத்துக் கொண்ட போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை தமிழகம் முழுக்க சிறுத்தைகள் ஆகஸ்டு 17 அன்று கொண்டாடுவது வழக்கம்.  அந்த நாளில்தான் இந்த கல்வி உரிமை மாநாடு.  காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகத்தான் தலித் சமூகம் இருந்து வந்துள்ளது. கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விழிப்புணர்வு அடைந்து மேம்பட்டுவிடுவார்கள் என்பதால்தான் கல்வி கேட்கக் கூடாது என்று மனுதர்மம் தடை விதித்தது.  அதே தடையைத்தான் மனுதர்மவாதி ஜெயலலிதா இப்போது நடைமுறைப்படுத்துகிறார்.  பேய் அரசாண்டால் பினந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். இந்தப் பேயை ஆள விட்டதன் விளைவை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பேயை ஓட ஒட விரட்டியடிப்பது சிறுத்தைகளால் மட்டுமே முடியும் என்பதை வரும்காலம்முடிவு செய்யும்.

10 August 2014

புதிதாக அவதரித்த மாமேதை தங்கர் பச்சன்

       அம்பேத்கரின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் செயல்படுவதற்காகவும் ஒர் மாமேதை தோன்றி இருக்கிறார். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளை கண்டு தினம் தினம் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையிலேயே சாப்பிடகூட முடியாமல் எலும்பும் தோலுமாய் தேயிந்து போய் விட்டார். படுத்தால் தூக்கம் வருவதில்லை. எந்த செயலும் செய்ய முடியாமல்  பாவம் பித்து பிடித்ததுபோல் 'அம்பேத்கர்' 'அம்பேத்கர்' என்று அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மாமேதை யார் தெரியுமா? திரைபட இயக்குனர் தங்கர் பச்சான் தான். தலித்துகளின் விடுதலைக்காக  கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை அர்பணித்துக் கொண்ட மாமேதை தங்கர் பச்சான் ரொம்பவும் கொதித்து போய்தான் இருக்கிறார். தாழ்தப்பட்ட மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது தெரிந்தால் உடனே அங்கே ஆஜராகிவிடுகிறார்.
                                  
                       கடந்த ஆண்டு தருமபுரி நத்தம் சேரி சூறையாடப்பட்டதை அறிந்தவுடன் பதற்றத்துடன் முதலில்  ஓடிப்போய் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு பல உதவிகளை செய்தார். "இக்கொடுமைகளை செய்தது பா.ம.க தான். தூண்டிவிட்ட ராமதாசை கைது செய்யகோரி தைலாபுரத்தை லட்சக்கணக்கான மக்களோடு முற்றுகையிடப் போகிறேன்" என்று செய்தியாளர்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டு காவல்துறை மிரண்டு போய், "உங்களால் தமிழகதில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகக் கூடாது" என்று காலில் விழுந்து கெஞ்சியதால் அப் போராட்டத்தை கைவிட்டு விட்டார்.
                                   
                        இந்த நிலையில் திடீரென இளவரசன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த தங்கர் பச்சான், இளவரன் உடல் கிடந்த ரயில் இருப்பு பாதைக்கே சென்று ஒப்பாரி வைத்து அழுதார். இந்த காட்சி பார்ப்போரின் இதயத்தை உலுக்கியது. செய்தியாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு, "இளவரசன் சாவுக்கு யார் காரணம்?"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், "இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு  கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா? நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும்  கீழ்  சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் " என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, "உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே ? நீங்க மாத்தி சொல்றீங்க" என்று கேட்டதும், "இந்த சென்ஸார் கமிட்டி செய்த சதி. நான் மாதவன் பறையருன்னுதான் எடுத்தேன் அவனுங்க மாத்திட்டாங்க. நான் சும்மாவிடப் போவதில்லை" என்று பேசிகொண்டே இருக்கும் போதே செய்தியாளர்கள் ஒவ்வொருவராக கிளம்பிப் போய்விட்டார்கள்.

                இப்படி இளவரசன் படுகொலையிலும் துணிச்சலாக தமது கருத்தை சொல்லி போராடியவர்தான் தங்கர் பச்சான்.
                  
              தற்போது அம்பேத்கரின் புத்தங்கள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டார். இப்போது அம்பேத்கர் வழியில் ஊர் ஊராய் அம்பேத்கர் கொள்கைகளை விளக்குவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தங்கர் பச்சானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.



             
கேள்வி: ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்?
              
தங்கர்: இங்க அம்பேத்கர்ப் பத்தி யாருக்குமே தெரியல. அவர தமிழ் நாட்டுல அறிமுகப்படுத்துனதே நான் தான். அவரப்பத்தி நான் ஒரு படம் எடுக்க போரேன்.
              
கேள்வி: முன்பு ராமதாஸ் கூட அம்பேத்கர் மீது பாசம் உள்ளது போல் நடித்தார். ஊர் ஊராய் சிலை வைத்தார். அதைப் போல தான் இந்த அம்பேத்கர் பாசமா?
              
தங்கர்: (முகத்தை கோபமாக வைத்து கொண்டு) நான் கறுப்பா இருக்கேன் இது போதாதா? என்ன நம்புறதுக்கு?
              
கேள்வி: நீங்க எடுத்த படங்களில் ஒன்றாவது சமூக அக்கறையுள்ள படம் இருக்கா?
             
 தங்கர்: ஏங்க ஏங்க என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? எல்ல படங்களுமே அப்படித்தாங்க எடுத்திருக்கேன்.பாருங்க என்கிட்ட இனி சினிமாவ பத்தி கேட்காதிங்க.
               
கேள்வி: அப்ப என்ன தான் கேட்கிறது?
                
தங்கர்: எனக்கு ஒரு பயலும் தயாரிப்பாளரா சிக்க மாட்டுறான். அந்த வெறில தான் அம்பேத்கருனு அது இதுன்னு உளறுரேன் மன்னிச்சுக்கோங்க.
                
செய்தியாளர்கள் கோபத்துடன், "இவனுக்கு ஆள் கிடைக்கலனா.. நாம என்ன பன்றது ? இவன எல்லாம் கீழ்பாக்கத்துக்கு தான் அனுப்பனும்". புலம்பிகிட்டே வெளியேற தங்கர் பச்சானோ திடீரென பல்டி அடித்தவராக, 

"இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் அறிவில்லைங்க. நான் தான் எல்லாத்தையும் சொல்லித்தர வேண்டி இருக்கு அடுத்தப் படம் எம்.ஜி.ஆர் பத்தி எடுக்கப்போறேன். யாருக்கும் தெரியாத விசயத்த படமா எடுக்கப்போறேன்" என்று அறிவித்ததும் எல்லோரும் துண்டக்காணோம் துனியகாணோம் என்று ஓட ஆரம்பிக்கிறார்கள். யாராவது படம் எடுக்க விரும்புவோர் தங்கர் பச்சானை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். பாவம் பிழைத்து போகட்டும். 
                    
   
                                       
         
    
                        
                                       
                        

05 August 2014

நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை 'கத்தி'

"எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  இந்தக் கோரிக்கையை நானும் எழுப்பியுள்ளேன்.  

தொலைத் தொடர்பு நிறுவனமான லைக்கா மொபைல் 2011ஆம் ஆண்டு தொடங்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 426,292 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் 2012 'கார்டியன்' (Guardian) பத்திரிகையில் கடந்த 3 ஆண்டுகளாக லைக்கா நிறுவனம் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளது.  இந்த நிறுவனம் இராஜபக்சே உறவினர் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ளது.  இராஜபக்சேவின் மைத்துனர் தலைமை தாங்கும் இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படும் நிறுவனமாக லைக்கா ஃப்ளை (LycaFly) உள்ளது. 

காமன்வெல்த் உச்சி மாநாட்டையொட்டி நடைபெற்ற காமன்வெல்த் பிசினஸ் போரம்-2013 (Commonwealth Business Forum-2013) மாநாட்டிற்கு 'கோல்டன் ஸ்பான்சராக' (Gold Sponsor) லைக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது.  இராஜபக்சே அரசின் பின்னணியில் இயங்கும் லைக்கா நிறுவனத்திடமிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி நன்கொடைகளைப் பெற்றிருப்பதால்தான், பலத்த எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதில் சந்தேகம் எழுகிறது.  இராஜபக்சே அரசுக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை குறித்து முன்னெடுக்கும் எந்த முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்" இங்கிலாந்து லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்சாப் கடந்த நவம்பர் 18, 2013 அன்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய  கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திதான் இது.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் குறிப்பிட்டுள்ள லைக்கா நிறுவனத்தின் பின்னணி என்ன? அந்த நிறுவனத்தின் இயக்குநர் யார்




யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்தான் சுபாஷ்கரன்.  இவர்தான் இந்த லைக்கா நிறுவனத்தின் இயக்குநர்.  இவரது தந்தை அல்லிராஜா - தாய் ஞானாம்பிகை.  சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைப் புலிகளின் போர் வெடித்த பிறகு யாழ்ப்பாணத்தைவிட்டு அகதியாய் நாடுநாடாய்த் திரிந்தவர்தான் இந்த சுபாஷ்கரன்.  ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும்போல இவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது, அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்களைப் பிடித்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.  2003ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான மிலிந்த் காங்லே உள்ளிட்ட 10 பேரோடு இணைந்து லைக்காடெல் எனும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தரப்பு மக்களைக் குறிவைத்துத்தான் இந்த வியாபாரத்தைத் தொடங்குவதாக சுபாஷ்கரன் குறிப்பிடுகிறார். 

பின்னர் 6 ஆண்டுகளில் லைக்கா நிறுவனம் 1500 நபர்கள் கொண்ட நிறுவனமாக வலிமைபெற்று, உலகெங்கும் 4000 பணியாளர்களைக் கொண்டு விரிவுபடுத்தப்படுகிறது.  லைக்கா மொபைல் (LycaMobile), லைக்கா ஃப்ளை (LycaFly), லைக்கா மணி (LycaMoney), லைக்கா புரொடக்ஷன் (LycaProduction) என்று வகைப்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுக்க நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்குகிறார்கள்.  இந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரனும், துணைத் தலைவராக பிரேம் சிவசாமி என்பவரும், தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் தூளி என்பவரும் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.  மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டு ஆளும் கட்சிக்கு 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாகத் தரும் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இடத்தில்தான் லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம், பிரதமர கேமரூனை நோக்கி எழுப்பிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.  

இலங்கையில் கடந்த 2013 நவம்பரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.  கனடா உள்ளிட்ட பல நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிப்படையாக மறுத்ததோடு, 'இனப்படுகொலை நடத்திய இலங்கையை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.  இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும்' என்று கண்டனக் குரல் கொடுத்தன.  ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், நான் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று அறிவித்துவிட்டு, நேரடியாக போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.  இதைத்தான் நாடகம் என்று கூறி டாம் கேள்விக்குள்ளாக்குகிறார்.

லைக்கா நிறுவனம் 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடை அளித்ததால்தான் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டதாக டாம் குற்றம் சுமத்துகிறார்.

காமன்வெல்த் மாநாட்டிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?

காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி அறிவித்தபின் அம்மாநாட்டிற்கான கோல்டன் ஸ்பான்சரை (Gold Sponsor) லைக்கா நிறுவனம்தான் வழங்கியது.  காமன்வெல்த் மாநாட்டிற்கு ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அரசியல் அறிவு இல்லாதவர்கள்கூட லைக்கா நிறுவனத்திற்கும் சிங்கள அரசுக்கும் உள்ள உறவைத் தெரிந்துகொள்ளலாம்.

Board of Investment Srilanka (Prince Sponsor),  AirTel, Bank of Ceylon, Ceylon  Sea Board, John Keells, Sri Lanka Port Authority, Standard Chartered Bank, LycaMobiles (Golden Sponsor), Silver Sponsors: Brandis, Commercial Bank, Hatton National Bank, Mas Holdings, Mack Woods, Lunch Sponsor : Al-Futtaim (AMW), ADB, BDBO Lanka, Central Bank of Srilanka, EY, ILYKA. (Source: http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013#sponsors)

இத்தகைய சிங்கள ஸ்பான்சர் நிறுவனங்களுக்கிடையில் கோல்டன் ஸ்பான்சர் வழங்கிய ஒரே நிறுவனம் லைக்கா மட்டுமே.  அதுவும் தாமாக முன்வந்து வழங்கிய நிறுவனம் லைக்கா.  இவற்றை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளெங்கின்சாப்  அவர்களுக்கு மட்டுல்ல, அனைவருக்குமே லைக்கா நிறுவனத்தின் மீது சந்தேகம் எழத்தான் செய்யும். 

இது மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நடத்திவரும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்-க்கு (British Asian Trust) 1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை லைக்கா நிறுவனம் ஸ்பான்சராக வழங்கியது.  இந்த ஸ்பான்சரை இந்த டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வத் தூதரும் இலங்கை கிரிக்கெட் வீரருமான முத்தையா முரளிதரன் மூலமாக வழங்குகிறார்கள். (Source:http://uk-lycamobile.blogspot.in/2012/07/lycamobile-presents-first-instalment-to.html)



சரி, லைக்கா நிறுவனத்தை நடத்தும் சுபாஷ்கரன் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்.  அவரை வைத்து இராஜபக்சே அரசு இவற்றை எல்லாம் செய்வதன் நோக்கம் என்ன?

காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பே இலங்கை அரசால் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது.  அக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பின் பொருளாதாரரீதியாக இலங்கையை எப்படி உயர்த்துவதுபன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக் கொண்டு வருவதுஇலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப் போக்குவது? என்கிற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.  இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 2013 நவம்பர் 12 முதல் 14 நாட்களில் காமன்வெல்த் பிசினஸ் கவுன்சில் (Commonwealth Business Council) கூட்டம் கூட்டப்பட்டது.  பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய நிறுவனமாக லைக்காவும் கலந்துகொண்டது. இந்த வணிக மாநாட்டுக்குத்தான் கோல்டன் ஸ்பான்சரை லைக்கா நிறுவனம் வழங்கியது.  லைக்கா நிறுவனம் உலகம் முழுக்க வேர் பரப்பியிருப்பதால் இந்நிறுவனத்தை இராஜபக்சே அரசு பயன்படுத்தத் திட்டமிட்டதன்விளைவுதான், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ்கரன் நேரடியாக உதவக் களமிறக்கிவிடப்பட்டது. 

காமன்வெல்த் பிசினஸ் போரம் 2013 தொடக்கவிழா (Commonwealth Business Forum) 

தனது தாய் ஞானாம்பிகையின் பேரில் தொடங்கப்பட்ட ஞானம் ஃபவுண்டேஷன் (Gnanam Foundation) மூலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்தில் எந்தத் தொண்டு நிறுவனத்தின் உதவியுமில்லாமல் ஞானம் ஃபவுண்டேஷனே நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்தது.  இதுவரை 2000 மதிவண்டிகள், 2000 தையல் எந்திரங்கள், 10000 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், சீருடைகள், 5 இலட்சம் பேனா, 5 இலட்சம் பென்சில்கள், மாலை நேர வகுப்புகள், மருத்துவ முகாம்கள், 51 குடும்பங்களுக்கு நிதி உதவிகள், 3000 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு  நிதி ஒதுக்கியுள்ளது.  இத்துடன், தான் படித்த யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்யாலயா பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கான கல்விச் செலவையும் ஏற்றுள்ளது. (Source:http://www.gnanam-foundation.org/lycas-gnanam-foundations-second-phase-gets-underway-with-rs-3000-million/)



வடக்கு மாகாணத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவை, சுபாஷ்கரனை அணுகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நலத்திட்ட உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தினர்.  ஆனால், சுபாஷ்கரன் அதற்கு உடன்பட மறுத்துவிட்டு, சிங்கள அரசு மூலமாகவே ஞானம் ஃபவுண்டேஷனின் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  இன்றுவரை வடக்கு மாகாண அமைச்சரவை சுபாஷ்கரனோடு தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறது.  ஆனால், அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்து வருகிறார்.

பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்கூட அனுமதிக்கப்படாத சூழலில், வடக்கு மாகாண அமைச்சர்களே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி மறுக்கப்படும் சூழலில், சுபாஷ்கரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை தேசம் முழுக்க சுதந்திரமாகப் போய்வர அனுமதிக்கப்படுவதன் பின்னணி என்ன என்கிற கேள்வி இயல்பாய் எழுகிறது.

வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய இராஜபக்சேவைத் தண்டிக்கும் வகையிலும் இலங்கையைத் தனிமைப்படுத்தும் வகையிலும் உலகம் முழுக்கப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் லைக்கா நிறுவனம் முலம் இலங்கையில் தொழில் வளங்களை உருவாக்கவும், தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைக்கவுமான தூதராக சுபாஷ்கரன் செயல்பட்டு வருவதாகவும், மேலும் போருக்குப்பின் யுத்தப்பகுதி உள்ளிட்ட இலங்கையைச் சுற்றிப்பார்க்க லைக்கா நிறுவனம் மூலம் டூரிசம் பேக்கேஜ்களை (Tourism Package) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் லைக்காஃப்ளை (Lycafly) வழங்கி வருகிறது. (Source:http://www.lycaflyholidays.com/portfolio-view/tour-north-sri-lanka/ and http://www.lycaflyholidays.com/portfolio-view/culture-northeast-sri-lanka/




இச்செயல் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் மறந்து போகவுமான முயற்சியாகக் கருதப்படுகிறது.

இத்தகைய இனப்படுகொலையாளியின் பங்காளியாகச் செயல்பட்டுவரும் லைக்கா குழுமத்தின் லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
தற்போது இத்திரைப்படத்தின் கதை குறித்தோ, அதில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தோ விவாதமில்லை.  மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தியவருக்குப் பின்னணியாக இருக்கும் சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரிப்பது குறித்துத்தான் விவாதங்கள் எழுகின்றன. இதில் இருவேறு கருத்துக்கள் தேவையில்லை.  லைக்கா நிறுவனம் முழுக்க முழுக்க இராஜபக்சே அரசின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், ஐங்கரன் கருணாமூர்த்தியும் முழுப் பூசணிக்காயை அல்ல முழு மலையையே சோற்றில் மறைப்பதுபோல் லைக்கா நிறுவனத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.  அல்லது இராஜபக்சேவின் இரத்தக் கறையைத் துடைக்க முயற்சிக்கிறார்கள்.  இதுவும் இராஜபக்சேவைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்.



தமிழகத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் பேட்டியளிக்கிறார்.  இது முற்றிலும் ஏமாற்று வேலை.  படுகொலை நடத்திய இரத்தம் தோய்ந்த கரங்களோடு தமிழகத்தில் வணிகம் செய்ய, இராஜபக்சே லைக்கா நிறுவனத்தின் துணையோடு விஜய் - முருகதாஸ் கூட்டணியோடு களம் இறங்கியுள்ளார்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே!

03 August 2014

ராமதாசுக்கு புத்தி புகட்டும் சினேகா

நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தல் பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்ல மன உளைச்சலையும் தந்தது. மானுட விடுதலைக்கு எதிரான -மனித நேயத்திற்கு எதிரான மதவெறியையும் சாதிவெறியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்காக தன வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் உழைப்பு தமிழகத்தில் வீணாகிவிட்டதே என்கிற வேதனை வாட்டிக்கொண்டே இருக்கிறது.
                                 
                தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில் மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் படைக்க பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான்  பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட   இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.                                            

சாதிவெறியை தமது சமூகத்தின் மீது திணித்து அதில் கவுரவம் எனும் விசத்தை விதைத்து அரசியல் பண்ணும் பா.ம.க. ராமதாசின் அயோக்கியத்தனம் மனு தரும காலத்தில் கூட இருந்தது இல்லை. காதலில் கூட அரசியல் பண்ணும் கேவலமான இழி பிறவியாக தமிழக அரசியலில் வளம் வருகிறார். இவரோடுகூட கூட்டு வைப்பவர்களை என்னவென்று சொல்வது?                                              

 தருமபுரி நத்தம்சேரியை சூறையாடிவிட்டு வெட்கமே இல்லாமல் சிங்கள இனவெறியை கண்டிப்பதும் இளவரசனை கொன்று விட்டு தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக நடப்பதாக அறிக்கை விடுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.(கொலைகார்களே அறிக்கை கொடுப்பது தான்) இத்தகைய சூழலில் தான் "சினேகாவின் காதலர்கள்" திரைப்படம் பார்க்க தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் திரு.கலைகொட்டுதயம் அழைத்திருந்தார். கதைகளமே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் சினிமா ஹீரோதனமாகதான் இருக்கும். ஆணாதிக்க சினிமாவில் விதி விலக்காக சினேகா ஹீரோ வாக வலம் வருகிறார். சினேகா கல்லூரியில் படிக்கும் போது  காதல் , வேலை கிடைத்ததும் காதல் என்று சமூகத்தில் ஒவருவரும்  எதிர்கொள்ளும் காதலை கவிதையாக காட்டி இருக்கிறார்கள். "காதலிச்ச உடனே உன்னோட படுதுடனுமா?" என்று சினேகா கேட்பது ஆணாதிக்க சிந்தனை மீது நெருப்பை எறிவது போலுள்ளது . நிறைவாக கொடைக்கானலில் இளவரசன் மீதும் காதல் கொள்கிறாள்.இளவரசன் மறுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது தருமபுரி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.                        


செருப்பு தைக்கும் அருந்ததியர் சமூகத்து இளவரசன் மீது காதல் கொள்கிறாள் ஆதிக்க சாதி பெண் ரம்யா. செருப்பு தைக்கும் இடத்திற்கும் இளவரசன் வசிக்கும் சேரிக்கும் தேடி தேடி போய் காதலிக்கும் ரம்யா, இளவரசனை கூட்டிக்கொண்டு போய் பதிவு திருமணம் பண்ணுகிறாள். செய்தியை அறிந்த ரம்யா குடும்பத்தினர் வழக்கம் போல் சாதி வெறியுடன் குதிக்கின்றனர். இச்செய்தியை அறிந்த ரம்யா இளவரசனை மட்டும்தப்பிது போக விட்டு பெற்றோர் தன்னை ஒன்னும் பண்ண மாட்டார்கள் என்று நம்பி மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு போகிறாள். பயங்கர கோபத்தோடு காத்திருந்த பெற்றோர் "ஏண்டி இப்படி கீழ்சாதிக்கரனை கல்யாணம் முடிச்சு கவுரவத்தை  கெடுத்துட்டியே" னு பெட்ரோல் ஊத்தி சொந்த மகளையே எரித்து விட்டு இளவரசனைகொலை செய்ய அலைகின்றனர். சாதிவெறியர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே நேரடியாக உதவ கத்தியோடு கொடைகானல் போகிறார் . அங்கு இளவரசன் நண்பன் ஒருவனை சந்தித்து தண்ணி வாங்கி கொடுத்து இளவரசனை பற்றி கேட்க நண்பனோ, "உங்க சாதிகவுரவத்த காப்பாத்த ஊரு தாண்டி மலை தாண்டிவருவீங்களோ?" னு கேட்ட  அடுத்த நிமிடத்தில்  நண்பன் கொலை செய்ய படுகிறான். சாதி இந்துக்களின் எடுபிடியாக அடியாளாக போலீஸ் எப்போதுமே இருப்பதை இக்கதாபாத்திரம் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.                                                             
பொதுவாக காதலை சொல்லாத எந்த திரைப்படமும் இல்லை என்கிற அளவில் தான் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் காதலை திரைப்படமாக எடுக்க கூடாது என்று தடை விதித்தால் திரைப்பட உலகமே ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்கு காதல்...காதல்.. என்று காதலித்து கொண்டிருக்கிறார்கள். இச் சூழலில் தான் காதலை வைத்து அதில் சாதிகவுரவத்தை நுழைத்து அருவருப்பான அரசியல் செய்ய ஆரம்பித்தார்.இந்த அருவருப்பை திரையுலகத்தினர் பலர் கண்டித்தாலும் திரைப்படமாக எடுக்க யாரும் துணிய வில்லை.இச்சூழலில் தான் மிக துணிச்சலாக சினேகாவின்  காதலர்கள் திரைபடத்தை தயாரித்து இருக்கிறார் அண்ணன் கலைகோட்டுதயம். அவருக்கும் சிறந்த திரைக்கதையோடு சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக இயக்கிய அண்ணன் முத்துராமலிங்கன் உள்ளிட்ட திரைப்பட குழுவினரை வரலாறு கண்டிப்பாக வாழ்த்தும்....பாராட்டும்.

26 November 2013

படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..! - வன்னிஅரசு



படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!
வன்னிஅரசு
அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! 
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார்.  கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார்.  டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார்.  அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார்.  உடனே வடிவேலுமுகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துரை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா?  நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டுதன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார்.  அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமைஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில்டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்.  இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறான்ணே!" என்று சொல்வார்.  அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்காட்டுவார். 
படித்துரைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்.  இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள்.  வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள்.  தமிழர் துரோகி என்றார்கள்தமிழர்களுக்கு எதிரி என்றார்கள்,தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள்.  உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள்.  இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.  இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை ['ஈழத் தாய்என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள்.  அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை அம்மா அம்மா என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள்.  அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள்.  ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.  தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக் குதித்து அறிக்கை வெளியிட்டார்.  எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான்அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்.  அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு.  அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின.  கடந்த இரண்டாண்டுகளாகவே  தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார்.  மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.  எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோமே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன.  இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.  ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.  வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூடஅவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.  தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.  அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே -  அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும்பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரைபணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள்.  எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார்.  இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள். 
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும்நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள்அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன.  'டெசோசார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டுதமிழக அரசைக் கண்டித்ததோடுஇடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும்கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளிம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன்மிகுந்த கோபத்துடனும்முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும்அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும்.  அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்பேசினார்.  முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும்அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம். 
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே.  "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் மங்குனி அரசியா ஜெயலலிதா?  என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்.  ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா?  அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா?  சரிஜெயலலிதாவிற்கு தெரியாமல் இடித்தார்கள் என்றால்அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது.  நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாதுமுள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போதுஅரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரேஇதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது?  கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது?  இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா?  மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரிநெடுமாறன்தான் இப்படி என்றால்வீழ்ந்துவிடாத வீரத்துக்கும்மாண்டுவிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான்நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும்.  மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள்.  இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.  நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும்தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து,ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள்.  இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?  ஒன்றுமில்லை.  அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான்.  தமிழீழ விடுதலையோதமிழர் ஒற்றுமையோதமிழின விடுதலையோதமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்லகருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது.  கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள்ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள். 
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால்நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."