26 August 2011

யோக்கியன் வர்ரான்... சொம்ப எடுத்து உள்ள வை!


இப்பொழுது புதிய மகான் ஒருவர் தோன்றியிருக்கிறார். 70 வயதுக்கு மேல் அவருக்கு திடீர் ஞானோதயம் கிளம்பி நாட்டைப் பீடித்துள்ள கொடிய நோயை ஒழிக்கக் கிளம்பியுள்ளார்... மன்னிக்க... படுத்துள்ளார். அந்த மகான்தான் அன்னா அசாரே! "ஊழல்' என்கிற நோயை ஒழிக்கத்தான் இப்படிச் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் அவர்.

ராஜீவ்காந்தியின் "போஃபர்ஸ்' ஊழல் நாட்டை உலுக்கியபோது இதே மகான் அன்னா அசாரே இந்தியாவில்தான் இருந்தார். ராஜீவின் அம்மா இந்திராகாந்தி "முந்த்ரா' ஊழல் செய்தபோதும் இந்த மகான் இந்தியாவில்தான் இருந்தார். அப்போதெல்லாம் இந்த மகானுக்கு எந்த ஞானோதயமும் ஏற்படவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலிருந்து மொழிவழி தேசிய இன உணர்வு தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தியத் தேசியத்தைக் காக்க அன்னா அசாரேவைக் களம் இறங்கியுள்ளது இந்துத்துவக் கும்பல். தேசியக் கொடிகளோடு தெருத் தெருவாக ஊழலை ஒழித்து இந்தியாவைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் "காவி' மகான்கள்.

சரி, அந்த மகான்கள் தெருவில் கிடக்கிறார்கள்.. விடுங்கள். இன்னும் கொஞ்சம் மகான்கள் கிளம்பியிருக்கிறார்கள். இந்த மகான்கள் ஊழலை ஒழிக்க ஆதரவு தரக் களம் இறங்கி இருக்கிறார்கள். பாவம்... நேர்மையாக உழைத்து கருப்புப் பணம் எதுவும் இல்லாமல் அரசுக்கு முறைப்படி வருமான வரி செலுத்தி, தாம் சம்பாதித்தது இவ்வளவுதான் என்று வெளிப்படையாகப் பல முறை மக்களுக்கு அறிவித்த திரைப்படத் துறையைச் சார்ந்த மகான்கள்தான் ஊழல் ஒழிப்புக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
புகைப்படம் : தினகரன்
சூப்பர் ஸ்டார் ரஜினி ஊழலுக்கு எதிராக வாய் திறந்து அன்னா அசாரேவைப் புகழ்ந்து வழக்கம்போல் ஓர் அறிக்கை வெளியிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார். கமல்ஹாசன் அப்படியே அறிக்கையோடு முடித்துக்கொண்டார். நடிகர்கள் சூர்யா, மாதவன், சேரன் உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஊழலை ஒழிக்கக் களம் இறங்கியுள்ளனர். இந்தத் திரைத்துறை மகான்களின் ஒரு நாள் போராட்டத்தோடு தமிழகத்தில் ஊழல் ஒழிந்து விட்டது. தமிழ்நாடு "சுபிட்சமாக' மாறிவிட்டது. அதனால் ஒரு நாளோடு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்கள். புதுதில்லியில் ஊழல் அதிகம் இருப்பதால் அங்கே உண்ணாவிரதம் தொடர்கிறது.

அந்த உண்ணாவிரத மேடையே ஒரு ஹீரோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து ஒரு "ஹீரோ' வந்து "சிறப்புத் தோற்றத்தில்' தோன்ற மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்தது. தெற்கு நோக்கி எல்லோரும் தவம் இருந்தார்கள். எப்படி வருவாரோ அந்த ஹீரோ! கடல் வழியே "சுறா'வாக வருவாரா? தரை வழியே குதிரையில் "வேட்டைக்காரனாக' வருவாரா? நாட்டைக் காக்கும் "காவலனாக' வருவாரா? என்றெல்லாம் அன்னா அசாரே உட்பட எல்லோரும் தவமாய்த் தவமிருந்தார்கள்.

படப்பிடிப்புகளை அவசர அவசரமாக இரத்து செய்துவிட்டு விமானம் ஏறி வந்தேவிட்டார் அந்த ஹீரோ! ஆம்! "இளைய தளபதி' விஜய், ராம் லீலா பந்தலுக்குச் சென்று அசாரேவை வாழ்த்தினார்... மீடியாக்களில் முகம் காட்டினார்... வந்த வேலை முடிந்தது... திரும்பி விட்டார்.
புகைப்படம் : நக்கீரன்
நடிகர் விஜய்யின் நாட்டுப் பற்றைத்தான் என்னவென்று சொல்வது? ஊழல் மீது அவருக்கிருந்த கோபத்தைத்தான் எப்படிச் சொல்வது? "மாண்புமிகு மாணவன்' படத்தில் நடித்த விஜய்க்கு அப்போது 19 வயதாம். (இப்போது என்ன வயது என்று யாரும் கேட்டு விடாதீங்கண்ணா...) அந்தப் படத்திலிருந்து இப்போது நடித்து வரும் "நண்பன்' வரை அவரது சம்பளம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? அரசுக்கு உண்மையான வருமான வரி எவ்வளவு கட்டி உள்ளார் என்று சொல்ல முடியுமா? தாம் சம்பாதித்த பணமும் சொத்து மதிப்பும் இவ்வளவுதான் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?

ஊழல் என்பதே உழைப்புச் சுரண்டலிலிருந்துதான் வருகிறது. நடிகர் விஜய் உழைப்புச் சுரண்டல் செய்யாமல் முறையாக உழைத்த சொத்துக்கள் தானா அவரது சொத்துக்கள் அனைத்தும்? ஒவ்வொரு ரசிகனின் ரசனையையும் ஏமாற்றி காசாக்கி ஊழல் பெருச்சாளியாக வலம் வரும் விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவருக்குமே இது பொருந்தும்.

நாம் வாழும் சமூகத்தில் எவ்வளவோ சமூகப் பிரச்சனைகள் நம் முன்னே கிடக்கின்றன. நடிகர்கள் தினமும் செல்லும் வீதிகளில்தான் "நடைபாதைக் குடும்பங்கள்' வசிக்கின்றன. அவர்களைப் பார்த்தும் பாராமல்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் இந்த மனிதநேயர்கள். வறுமை ஊழலை விடக் கொடுமையானது இல்லையா? இன்னமும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பிளாட்பாரங்களில் குடித்தனங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன!

இந்த நடிகர்களுக்கு இரக்கமே இல்லையா? தாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதர்களுக்குக் குடியிருக்க வீடே இல்லை. ஆனால் இவர்கள் கெஸ்ட் அவுஸ்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கூத்தடிப்பதே ஒரு ஊழல் இல்லையா?

தாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதன் வாயில் இன்னொரு மனிதன் மலத்தை சாதியின் பெயரால் திணிப்பதை பார்த்தும், கேட்டும், அமைதி காப்பது நியாயம்தானா? ஊழலைவிடக் கொடியது வறுமை. வறுமை, ஊழலை இவற்றை விடக் கொடியது சாதியக் கொடுமை.

இந்தக் கொடிய சமூகக் கொடுமைகளை தமிழ்நாட்டிலிருந்தே பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டு அல்லது அதற்கு எந்த வகையிலாவது உடந்தையாக இருந்துவிட்டு இப்போது ஊழலுக்காகப் போராடப் புறப்படுவது திரைப்படங்களில் ஆங்காங்கே வரும் வடிவேலு காமெடி போல் இல்லையா?

"யோக்கியன் வர்ரான் சொம்ப எடுத்து உள்ள வை!'ங்கிற கதையா இருக்கு இந்த நடிகர்களின் கதை.

படத்துல மட்டும் நடியுங்கள் நடிகர்களே!

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர் 

*

0 comments:

Post a Comment