02 August 2011

இணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்!

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன? ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா?  சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா?  தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கவா? எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.

தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.


பின்னர் 2004ஆம் ஆண்டு தமிழீழத்திற்கு அழைக்கப்பட்டு தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு உரையாடித் திரும்பினார்.

தமிழீழ விடுதலைக்காக யுத்தக்களத்தில் களமாடும் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்திலிருந்து என்னவிதமான உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யுங்கள் என்று சிறுத்தைகளுக்கு உத்தரவிட்டவர்தான் எமது தலைவர் திருமாவளவன்.  இதைத் தொடர்ந்து சிறுத்தைகள் பலர் மீது பால்ரஸ் கடத்தல் வழக்குகள், டெட்டனேட்டர் கடத்தல் வழக்குகள், ஆயுதக் கடத்தல் வழக்குகள் எனப் போடப்பட்டன. பலர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். பலர் வேறு சிறுத்தைகளின் வீடுகளில் அடைக்கலம் ஆனார்கள். அதற்காக காவல் துறையினர் சிறுத்தைகளை வேட்டையாடினர். தேர்தல் பாதையில் பயணிக்கும் எந்த அமைப்பும் இம்மாதிரியான விடுதலை இயக்கத்துக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவித்துப் பணி செய்ததில்லை.

அனைத்து விடுதலைச்சிறுத்தைகளும் உணர்வுப்பூர்வமாக ஈழ விடுதலைக்காகத் தமிழகத்தில் எல்லா நெருக்கடிகளையும் மீறிக் களமாடினார்கள். அதற்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்ததோடு ஊக்கமளித்தார் எமது தலைவர் திருமாவளவன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நன்மதிப்பைப் பெற்ற ஒரே இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள் என்பதால்தான் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, வான்வழித்தாக்குதல் நடந்து கொண்டிருந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வன்னிக்கு அழைக்கப்பட்டதும், அந்த அழைப்பை ஏற்று துணிந்து சென்ற ஒரே தமிழ்நாட்டுத் தமிழன் விடுதலைச்சிறுத்தைதான்.

இப்படி எத்தனையோ துயரங்களையும் அரசின் நெருக்கடிகளையும் தாண்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்த விடுதலைச்சிறுத்தைகள் துரோகம் இழைத்துவிட்டதாகப் பொய்யான பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். 

இதனைச் செய்பவர்கள் யார் தெரியுமா?

ஈழப்போராட்டத்தில் பங்கெடுப்பதற்குப் பயந்துகொண்டு, உயிரைக் காப்பாற்ற வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள இந்தத் தொடை நடுங்கிகள்தான் இப்போது சிறுத்தைகளுக்கு எதிராக பரப்புரை செய்கிறார்கள். தமிழீழ விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாத இந்த இணையத்தள வியாபாரிகள்தான் இப்போது ஈழவிடுதலைக்காகப் பொய்யாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆடுமாடுகளைவிடக் கேவலமாக நடத்தப்படும் ஓர் இனமாக தாழ்த்தப்பட்ட சமூகம் இருந்துவந்தது. இந்த மக்களின் விடுதலைக்காக யாரும் போராட முன்வராததால், வாராது வந்த மழைநீர்போல தலித்துகளுக்கு வாய்த்தவர்தான் எமது தலைவர் தொல்.திருமாவளவன்.

எத்தனையோ மகான்கள் வந்தார்கள், புரட்சி செய்து நாட்டையே புரட்டிப் போடப் போவதாகக் கிளம்பிய நக்சல்பாரிகள் வந்தார்கள்.  ஆனால், தலித்துகள் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் கொத்தடிமைகளாகத்தான் இருந்தார்கள். புரட்சியாளர் அம்பேத்கர், அய்யா பெரியார் ஆகியோருக்குப் பிறகு தலித்துகளின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக் களமாடிவரும் எமது தலைவர் எழுச்சித் தமிழர் வருகைக்குப் பின்புதான் தலித்துகளின் வாழ்வுமுறையில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின.

தலித்துகள் தெருக்களில் நுழையத் தடை விதித்தார்கள்; பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை விதித்தார்கள்; மதிவண்டியில் செல்வதற்குத் தடைவிதித்தார்கள். கொடுத்த கடனைக் கேட்டதற்காக தலித்துகளின் வாயில் மலத்தைத் திணித்தார்கள். சிறுநீரைப் பாய்ச்சினார்கள். இதையெல்லாம் தவறு என்று சொல்லக்கூட இங்குள்ள அரசியல்வாதிகள் பயந்தார்கள். அப்புறம் எப்படி தட்டிக்கேட்க முன்வருவார்கள்.

ஓட்டு அரசியல்வாதிகளை விடுங்கள், ஈழத்தில் நடைபெறும் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழ்த்தேசியவாதிகள்கூட, தமிழகத்தில் நடைபெறும் இவ்விதமான ஒடுக்குமுறைகளைத் தட்டிக் கேட்காமல் பயந்து ஒதுங்கியதுதான் கேவலத்திலும் கேவலம்.

சிங்கள ஒடுக்குமுறையை, செர்பியர்களின் ஒடுக்குமுறையை, அமெரிக்கர்களின் ஒடுக்குமுறையைப் பற்றி பேசுபவர்கள், சொந்த மண்ணில் தலித்துகளை ஒடுக்குபவர்களைப் பற்றிப் பேசாதது ஏன் என்கிற கேள்வி லட்சக்கணக்கான தலித்துகளின் மண்டையைக் குடைந்து கொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் கடந்துதான், இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் விடுதலைச்சிறுத்தைகள் தமிழின விடுதலைக்கான களத்தில் பயணிக்கிறது. ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதை உணர்ந்து அல்ல, அனுபவித்து அரசியல் செய்பவர்கள்தான் விடுதலைச்சிறுத்தைகள். எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் தட்டிக் கேட்பவர்கள்தான் உண்மையான போராளியாக இருக்க முடியும். சிங்கள ஒடுக்குமுறையை எதிர்ப்பதால்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறது; தமிழினம் என்பதற்காக மட்டுமல்ல. இந்த அடிப்படையில் விடுதலைச்சிறுத்தைகளின் அரசியலை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் இருக்கும் சாதிய இறுக்கத்தை, அரசியல் இயக்கத்தின் நெருக்கடியைப் பார்க்க முடியும். இந்த நெருக்கடியில் நீந்திதான் தமிழக அரசியலில் பயணிக்க முடியும்.


வளர்ந்து வருகிற எந்தக் கட்சியும் அதிமுக அல்லது திமுக அணியில்தான் கூட்டணி சேர முடியும். ஆனால் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவிடுதலை ஆதரவுக் கட்சிகள் மட்டும் தனித்து நிற்போம் என்று எமது தலைவர் துணிந்து முடிவெடுத்து கோரிக்கை வைத்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? இதை யாரும் கேள்வி கேட்காதது ஏன்?

மேதகு பிரபாகரன் அவர்களைக் கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் போட்ட ஜெயலலிதா, விடுதலைப் புலிகளுக்குத் தடைவாங்கியது நான்தான் என்று மார்தட்டும் ஜெயலலிதா, தேர்தல் ஆதாயத்திற்காக ஈழப் பிரச்சனையில் அக்கறை இருப்பதுபோல் காட்டியதை நம்பும் தமிழின உணர்வாளர்கள், கால் நூற்றாண்டாய் ஈழ விடுதலை ஈழவிடுதலை என்று பேசிச் செயல்பட்டுவரும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவரை நம்ப மறுப்பது ஏன்? தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழவிடுதலை அரசியலைக் கொண்டு சென்ற எழுச்சித் தமிழரை ஏற்க மறுப்பது ஏன்?

ஈழ விடுதலைக்காக உண்மையாய்க் களமாடும் விடுதலைச் சிறுத்தைகளை தமிழக அரசியலிலிருந்து அப்புறப்படுத்த ஆதிக்கக் கும்பல் செய்யும் முயற்சிகளுக்கு ஈழவிடுதலை ஆதரவாளர்களும் துணை போவது சரிதானா?  விடுதலைச் சிறுத்தைகளை அப்புறப்படுத்திவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நட்பு சக்தி எது? பகை சக்தி எது? என்பதைக் கண்டறியுங்கள் தமிழர்களே!

முள்வேலிக்குள் மிச்சமிருக்கிற தமிழர்களை மீட்க, சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்க்க நமக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. அதை விடுத்து துரோகப்பட்டியல் என்ற பெயரில் உண்மையான களப்போராளிகளைப் புறக்கணித்து இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்கள்.

- வன்னி அரசு


0 comments:

Post a Comment